Thursday, May 15, 2014

மேன்மையான யோக நிலை!

மேன்மையான யோக நிலை!

தவழும் குழந்தை ஓடுவதற்கு முன் உட்கார, நிற்க, நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் தெரிகிறது. யாருமே தவழும் குழந்தை நாளையே ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.... ஆனால் தியானம் விஷயத்தில் மட்டும் பெரும்பாலான மக்களின் ஆசை அந்த அளவில் தான் இருக்கிறது. கட்டுக்கடங்காத மனம் ஒருசில பயிற்சிகளிலேயே உடனடியாக தியான நிலைக்கு வந்து விட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதில் தோல்வி வருவது இயற்கை என்றாலும் அந்த இயற்கை விளைவிலேயே சலிப்பும் அடைகிறார்கள்.

யோக நிலைக்கு செல்லும் முன் முதலில் வாழ்க்கை ஒரு ஒழுங்கு முறைக்குள் ஒரு வரம்புக்குள் வர வேண்டும். அப்போது தான் மனம் ஒழுங்கு நிலைக்கு வரும். அதன் பின் தான் அதற்கு அடுத்த நிலையான தியானம் அல்லது யோக நிலைக்குப் போக முடியும். ஸ்ரீகிருஷ்ணர் தியான யோகத்தில் அதை மறுபடியும் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஒழுங்கிற்கு உட்பட்ட உணவும், செயல்களும் உடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்கிற்கு உட்பட்டவனாய் இருப்பின் அவனுடைய யோகம் துயரை அழிக்கும்.

மனதை சிறிது சிறிதாக ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்த பின் தான் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒருவன் முயலவே முடியும். அப்போதும் கூட அது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் அதற்கான குறைந்த பட்சத் தகுதியைப் பெற்று விட்ட நிலை அது. விடாமுயற்சியால் முடியக் கூடிய யோக நிலையை மேலும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

எப்போது ஒருவனுடைய சித்தம் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு ஆத்மாவிலேயே நிலைத்திருக்குமோ, சகல ஆசைகளிலும் பற்று நீங்கியதாக இருக்குமோ அப்போது அவன் யோகி என்று சொல்லப்படுகிறான்.

சித்தத்தை அடக்கி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியின் யோக நிலைக்கு, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கே உவமையாகும்.

ஒரு கணமும் ஓரிடமும் நிலைத்து நிற்க முடியாமல் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டு இருக்கும் மனம், அதில் சந்தோஷம், இதில் சந்தோஷம் என்று பொய்யான அனுமானங்களில் முயன்று முயன்று ஏமாறும் மனம், தெளிவடைந்து வெளி நோக்கை விட்டு விட்டு உள் நோக்கிப் பயணிக்கும் போது யோகம் கைகூட ஆரம்பிக்கும். அனுபவத்தாலும், அறிவாலும் ஆசைகள் புதைகுழி என்று கவனமாக அவற்றில் இருந்து கவனமாக விலகி ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போது யோகம் முழுமையாக கைகூடுகிறது. அப்போது தான் மனிதன் யோகி ஆகிறான்.

அவனது யோக நிலைக்கு கீதை சொல்லும் இந்த உதாரணம் மிக அழகானது. ’காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு’ தங்குதடை இல்லாமல் சீரான ஒளியைத் தரக்கூடியது. திடீரென்று பிரகாசித்து திடீர் என்று அணையக்கூடிய அபாயநிலைக்குச் செல்லும் விளக்கின் ஒளி தெளிவாக எதையும் காட்டாது. தெரிவது என்ன என்று தெளிவாக அறிவதற்குள் அதன் ஒளிக் குறைவால் குழப்பம் அல்லது அரைகுறையாய் அறியும் தடுமாறும் நிலை காற்றில் அசையும் விளக்கில் அதிகம். காற்றின் வேகம் அதிகம் இருந்தாலோ பெரும்பாலும் விளக்கு அணைந்தே போய் இருட்டில் மூழ்க வேண்டி வரும். அப்போது விளக்கு இருந்தும், திரி இருந்தும், எண்ணெய் இருந்தும் கூடப் பயனில்லை.

யோக நிலை கூடிய மனிதனோ காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு போல எல்லா நேரங்களிலும் சீரான ஞான ஒளியுடன் திகழ்கிறான். ஞானம் அவ்வப்போது குறையும் பலவீனமோ, ஞானம் அணைந்தே போகும் அபாயமோ யோகியிடம் இல்லை.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் யோகத்தின் மேன்மையான நிலையை விளக்குகிறார்.

யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட சித்தமானது எங்கே பூரணமாய் லயித்து நிலைத்திருக்கிறதோ, எந்த நிலையில் ஆத்மாவினால் ஆத்மாவை அறிந்து ஒருவன் மகிழ்ச்சி அடைகிறானோ,

எந்த நிலையில் புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை புத்தியால் அறிகிறானோ, எதில் நிலைத்த பின் அவன் உண்மையில் இருந்து வழுவுவதில்லையோ,

எதை அடைந்த பின் மற்றொரு லாபம் உயர்ந்ததென்று கருத மாட்டானோ, எதில் நிலைத்த பின் பெரிய துக்கம் வந்தாலும் சஞ்சலப்பட மாட்டானோ,

அதை துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம் என்று அறிவாயாக. மனம் கலங்காமல் திடமாக ஒருவன் அந்த யோகத்தைப் பயில வேண்டும்.

புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை முட்டாள்கள் அடைய முடியாது. எத்தனை சந்தர்ப்பங்களில் புலன்கள் வழிப்போய் அவஸ்தையில் மாட்டிக் கொண்டாலும் அவன் அடுத்தது அப்படி இருக்காது என்ற மூட நம்பிக்கையில் மேலும் புலன்வழியிலேயே சந்தோஷத்தைத் தேடுகிறான். அனுபவங்கள் அவனுக்கு எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. பலர் பல சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாமல் அப்படியே பிறவிகள் தோறும் முயன்று ஏமாறுகிறார்கள்.

சித்தம் ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போதே நிலையான இன்பம் சித்திக்கின்றது. அது சாதாரண இன்பம் அல்ல பேரின்பம். அந்த நிலையை ஒருவன் அடைய முடிந்தாலும் விவரிக்க முடியாது. விவரித்தாலும் மற்றவர்க்கு விளங்க வைக்க முடியாது. சமுத்திரத்து தவளை கிணற்றுத் தவளைக்கு சமுத்திரத்தை எப்படி விவரிக்க முடியும். விவரிக்க முயன்றாலும் கிணறை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அறிந்த கிணற்றுத் தவளை கிணறு என்ற அளவுகோலால் அல்லவா சமுத்திரத்தை அளக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும். முடிகிற காரியமா அது!

யோக நிலையை அடைந்தவனுக்குப் பொய்யின் அவசியம் இருக்காது. எந்தப் பூச்சும் தேவை இருக்காது. எனவே உண்மையிலிருந்து விலகவோ, உண்மையைத் திரிக்கவோ அவன் முயலமாட்டான். மேலும் அந்த யோக நிலையை அடைந்த பின் வேறெதுவும் அதைக்காட்டிலும் லாபமாக இருக்க முடியாது. அதன் பின் எந்த துக்கம் வந்தாலும் உண்மையில் கலங்க வேண்டிய காரணம் இருப்பதாக யோகி நினைக்க மாட்டான். எல்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்த பின் சஞ்சலப்பட என்ன இருக்கிறது?

அந்த யோக நிலையை விளக்கிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணர் கடைசியில் ஒரே வாக்கியத்தில் அதற்கு விளக்கம் தருகிறார். துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம். எதெல்லாம் துக்கத்தை நம்மிடம் சேர்க்குமோ அதற்கு எதிர்மாறான யோகம் என்கிறார். துக்கமே வேண்டாம் என்று சொல்பவர் அடைய வேண்டிய யோக நிலை இது. அதை கலங்காத, திட மனதுடன் ஒருவர் கற்றுத் தேர்ந்தால் பின் கற்க எதுவுமில்லை. பின் பெற வேண்டியதும் எதுவுமில்லை.

இந்த யோக நிலையை, ஸ்ரீகிருஷ்ணர் போலவே, திருமூலரும் மிக எளிமையான சொற்களில் அழகாக விளக்குகிறார்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

எந்தக் கேடும், எந்த துக்கமும் வேண்டாம் என்று நினைப்பவன் முதலில் தன்னை அறிய வேண்டும். ஏன் என்றால் எல்லாத் தீமையும், எல்லாத் துக்கங்களும் மனிதன் தன்னை அறியாத குறைபாட்டால் தான் வருகின்றன. தன்னை அறியும் அறிவை, அந்த யோக நிலையை அடைந்த பின், அறிந்த அந்த ஆத்மநிலையையே போற்றி அவன் பூரண திருப்தியுடன் வாழ்வான்.

No comments:

Post a Comment