Thursday, December 11, 2014

வால்மீகி முனிவர் கதை


வால்மீகி முனிவர் கதை
இன்று ஏழை. நாளை பணக்காரன். இன்று நல்லவன். நாளை கெட்டவன் என்று வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அதனால்தான் நிச்சயம் இல்லாத மனித மனதுக்குள், இறைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையை உறுதியாக பதியவைத்தால் தீய செயல்பாடுகள் எதையும் செய்யாமல் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும்.
நல்ல வாழ்க்கையை நல்லவர்களுக்கு இறைவன் தருகிறான் தீயவர்களுக்கும் தருகிறான். இறைவனை பொறுத்தவரை எல்லோருமே அவன் பிள்ளைகள். தவறுகளை திருத்திக்கொண்டு இறைவன் தந்த நல்ல வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொண்டால் இறைவன் எப்போதும் துணை இருப்பான்.
ரத்னாகரன்
ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ரத்னாகரன். பெற்றோர்கள் அந்த ரத்னாகரனை நல்லவனாக வளர்த்தார்கள். குழந்தை பருவத்தில் வறுமை என்றால் என்ன என்று தெரியாதவரை அவனும் நல்லவனாகதான் வாழ்ந்தான். ரத்னாகரன் இப்போது ஒரு இளைஞன். அவன் தந்தைக்கும் வயதானது. முன்புபோல அவரால் வேலை செய்து சம்பாதிக்க முடியவில்லை. இதனால் வறுமை என்கிற கொடுமையும் ரத்னாகரனின் குடும்பத்தில் ஒருவராக குடிவந்தது. குடும்பமே உணவு இல்லாமல் பசி மயக்கத்தில் கிடப்பதை கண்டு மனம் வருந்தினான் ரத்னாகரன். என்ன செய்வது? என்று அவனுக்கு தெரியவில்லை. படிப்பறிவும் இல்லாத நமக்கு யார் வேலை தருவார்கள்? என்ற கேள்விச் சிந்தனையுடன் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான்.
பலமணிநேரமாக ஒரே இடத்தில் அவன் இருப்பதை கண்ட ஒரு நபர் ரத்னகரனின் அருகில் வந்து, “தம்பி, உன்னை பார்த்தால் பசியில் இருப்பதாக நினைக்கிறேன். உனக்கு உணவு ஏற்பாடு செய்யட்டுமா?” என்றார்.
அதற்கு ரத்னாகரன், “அய்யா.. என் ஒருவனுக்கு இப்போது உணவு கிடைத்தால் போதுமா.? என்னை நம்பி இருக்கும் ஜீவன்கள் வீட்டிலே உணவு இல்லாமல் பசி மயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களையும் நான் காப்பாற்ற வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வேலை வேண்டும். எனக்கு நீங்கள் இன்று ஒருநாள் பிச்சையிடுவதை விட ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துவிடுங்கள்.” என்றான் ரத்னாகரன்.
“அதுவும் நல்லது. உனக்கு வேலைதானே வேண்டும். நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றவர், ரத்னாகரனின் கைகளில் பணத்தை திணித்து, “இந்த பணத்தை நீ உன் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு மீண்டும் என்னிடம் திரும்பி வா. உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அந்த நபர்.
அந்த பணத்தில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்தான் ரத்னாகரன். உணவு மட்டுமல்லாமல் மகன் கை நிறைய பணத்துடன் வந்திருப்பதை இருப்பதை கண்ட அவன் பெற்றோர், அதை பற்றி கேட்டார்கள். நடந்ததை சொன்னான். எந்த வேலை, யார் கொடுப்பார் என்பதை பற்றியெல்லாம் விசாரித்து அறியாமல், “எந்த வேலையாக இருந்தாலும் அதை ஏற்று நீ செய்.” என்றார்கள். வறுமை அப்படி அவர்களை பேச வைத்தது.
தன்னை நம்பி பெரிய தொகையை கொடுத்த அந்த நபர் நிச்சயம் தெய்வம் என்று எண்ணி அவரை சந்திக்க சென்றான் ரத்னாகரன். ரத்னாகரனை தன் குதிரையில் ஏற்றி கொண்டு தன் வசிப்பிடத்திற்கு சென்றார் அந்த நபர். அந்த இடத்தை பார்த்தவுடன் புரிந்துக்கொண்டான் ரத்னாகரன்.
இவர்கள் கொள்ளைகாரர்கள்.
தன்னை அழைத்து வந்தவரும் இந்த கொள்ளைகூட்டத்தின் தலைவன்.
“நீங்கள் எல்லோரும் கொள்ளைகாரர்களா?.” என்றான் ரத்னாகரன்.
“சபாஷ் நீ தோற்றத்தில் பலசாலி என்று மட்டும்தான் நினைத்தேன். நாங்கள் யார் என்று நாங்கள் சொல்லாமலே புத்திசாலிதனமாக புரிந்துக் கொண்டாய்.” என்று கூறிகொண்டே. “ஆம். நாங்கள் கொள்ளைகாரர்கள்தான். நீயும் எங்களுடன் இணைந்து கொள்ளையடி. அந்த பணத்தை நாம் பங்கிட்டுக் கொள்வோம். கொள்ளை அடிக்கும்போது ஒரு வேலை கொலை செய்யவும் நேரலாம். அந்த தருணத்தில் அதையும் நீ தயங்காமல் செய். எந்த அரசனாலும் நம்மை தேடி கைது செய்ய முடியாது.” என்று ரத்னகரனின் மனதில் முரட்டு தைரியத்தை ஏற்படுத்தினான் கொள்ளை கூட்டத்தின் தலைவன்.
ரத்னாகரன் கொள்ளையடித்தான். பெரியதொகையை தினமும் சம்பாதித்தான். பணம் வந்த உடன் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ரத்னாகரனுக்கு திருமணமும் செய்து வைத்தனர் அவனுடைய பெற்றொர்.
ரத்னாகரன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப சுமை கூடியதால் மேலும் அதிகமாக கொள்ளையடித்தான்.
காட்டில் கிடைத்த ஞானம்
ஒருநாள் காட்டுவழியாக கொள்ளையடிக்க சென்றுக் கொண்டு இருந்த ரத்னாகரன் கண்களில் ஒருவர் தன்னந்தனியாக தென்பட்டார். அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி, “இருப்பதை எடு. இல்லை என்றால் கொன்றுவிடுவேன்.” என்று மிரட்டினான் ரத்னாகரன்.
“தாராளமாக தருகிறேன். அதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். நீ யாருக்காக கொள்ளையடிக்கிறாய்.” என்றார்.
“இது என்ன முட்டாள்தனமான கேள்வி. என் குடும்பத்திற்காகதான்.” என்றான் ரத்னாகரன்.
“ஓ… அப்படியா. சரி… நீ கொள்ளையடித்து சம்பாதிப்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்ளும் உன் குடும்பம், உன் செயலால் உண்டாகும் பாவத்தையும் ஏற்பார்களா.?” எனக் கேட்டார்.
“ஏற்பார்கள்” என்றான் ரத்னாகரன்.
“இதை நீயே சொன்னால் எப்படி. இந்த கேள்வியை உன் குடும்பத்தினரிடம் சொல்லி அவர்களின் பதிலை கேட்டு வந்து சொல். நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன்.” என்றார் அந்த நபர்.
அதன்படி தன் வீட்டுக்கு வந்த ரத்னாகரன், “நான் செய்யும் பாவங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேட்டான்.
“அது எப்படி முடியும். உன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. அதனால் ஏற்படும் இன்ப-துன்பத்தையும் நீதான் ஏற்க வேண்டும். பாவமும் உன்னையே சேரும். அதில் எங்களுக்கு பங்கில்லை.” என்றார்கள். “உன் பாவத்தை நான் ஏற்று தண்டனையை அனுபவித்தால் உன் தந்தையை யார் கவனிப்பார்கள்.” என்றாள் தாய். “உன் பாவத்தை நான் ஏற்று தண்டனையை அனுபவித்தால் உன் தாயை யார் கவனிப்பார்கள்” என்றார் தந்தை. தன் மனைவியிடம் கேட்டான். “நீங்கள் செய்யும் பாவத்தை நான் எப்படி ஏற்க முடியும். பிறகு நம் மகனை யார் கவனிப்பார்கள். அதனால் நான் ஏற்க மாட்டேன்.” என்றாள் மனைவி. மகனிடம் கேட்டார். “நீங்கள்தானே என் தந்தை. அதனால் என்னை நன்றாக வளர்க்க வேண்டியதும் உங்கள் கடமை. அப்படி இருக்க உங்கள் பாவத்தை நான் எவ்வாறு கேட்க முடியும்.” என்றான் மகன். இப்படி ஒவ்வொருவரும் ஏதோரு காரணத்தை சொல்லி பாவத்தை ஏற்காமல் தட்டி கழித்தார்கள்.
மனம் வருந்திய ரத்னாகரன் காட்டில் பார்த்து பேசியவரை தேடி சோகத்துடன் வந்தான்.
மரா மரா
“என்ன ரத்னாகரா… உன் பாவத்தை பங்கிட்டுகொண்டதா உன் குடும்பம்.” என கேட்டார்.
“சுவாமி….நீங்கள் யார்?“ என்றார் ரத்னாகரன்.
“அதான் நீயே சுவாமி என்று சொல்லிவிட்டாயே. ஆனால் என்னையோ எல்லோரும் கலகக்காரன் என்கிறார்கள். நான் உன்னிடம் கலகமா செய்தேன்.” என்றவர் நாரதராக தோன்றினார்.
அவரை வணங்கினான் ரத்னாகரன்.
“சுவாமி…யார் உங்களை கலகக்காரன் என்று சொன்னாலும் நான் அப்படி சொல்ல மாட்டேன். உங்களால் எனக்கு இன்று ஒரு உண்மை விளங்கியது. மரம் செழுமையாக இருக்கும் போது பறவைகள் அதில் வாழும். அந்த மரம் பட்டு போனால் பறவைகள் ஒடிவிடும் என்பதை பார்த்திருக்கிறேன். அதுபோல என்னை ஒரு மனிதனாக பார்க்காமல் அந்த மரத்தை போலவே என்னை நினைக்கிறார்களே. அப்படி என்றால் அந்த மரத்தின் நிலையும், என் நிலையும் ஒன்றா? போதும் நான் செய்த பாவங்கள். என் பாவங்களுக்கு என்ன பரிகாரம் சுவாமி.?” என்றார் ரத்னாகரன். அவன் விழிகளில் மழைபோல கண்ணீர்.
“பாவம் தொலைய இரண்டெழுத்து மந்திரத்தை உண்டு. அதுதான் “இராமா” என்கிற மந்திரம். இராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும்.” என்றார் நாரத முனிவர்.
இதுநாள்வரை ரத்னாகரன் செய்த பாவங்கள் தடுத்ததோ என்னவோ, நாரதர் சொல்லி தந்த புனிதமான, “ராமா” என்கிற வார்த்தை ரத்னாகரன் நாவில் வரவில்லை. இதனால் நாரதர், “ரத்னாகரா… உன் வாயில் மரம் என்கிற வார்த்தை எளிதாக வருகிறது. அதனால் மரா மரா என்று உச்சரித்தப்படி இரு.” என்று கூறி சென்றார்.
அதன்படி தவத்துக்கான ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்து, மரா மரா மரா மரா மரா மரா மரா மரா என்று உச்சரிக்க உச்சரிக்க அதுவே ராம ராம ராம ராம ராம என்று எளிதாக சொல்ல வந்தது.
ரத்னாகரன் பல வருடங்களாக ஓரே இடத்தில் ராம நாமத்தை உச்சரித்து கொண்டே இருந்ததால் அவரை புற்று மூடியது. ஒருநாள் “வால்மீகி” என்று ஒரு அசரிரீ குரல் கேட்டது. புற்றிலிருந்து வெளிப்பட்டார் வால்மீகி.
ரத்னாகரனுக்கு அசரிரீ, “வால்மீகி” என்று புதிய பெயர் சூட்டியது. இதனால் அவரை வால்மீகி முனிவர் என்று ஊர்மக்களும் அழைத்தார்கள்.
ஒருசமயம், நதிகரையில் ஆண்பறவையும் பெண்பறவையும் அமர்ந்திருந்தது. அவற்றை பார்த்துக்கொண்டே குளித்தார் வால்மீகி. அப்போது எங்கிருந்தோ ஒரு அம்பு பறந்து வந்த ஆண்பறவையை தாக்கியது. இதனால் அந்த பறவை இறந்தது. இதை கண்ட வால்மீகி முனிவர் பெரும் கோபத்தோடு, அம்பு ஏய்த வேடனை கவிநடையில் சபித்துவிட்டு தன் ஆசிரமம் வந்தடைந்தார். பிறகுதான் தமக்கு “கவிஞானம்” வந்துவிட்டது என்பதை உணர்ந்தார்
அப்போது பிரம்மா வால்மீகி முனிவர் முன்தோன்றி, “நீ மிகபெரிய கவிஞனாக மாறினாய். எல்லாம் இராமனின் அருளே. நீ இராமசரித்திரத்தை எழுது.” என்று வரத்தை தந்தார்.
வால்மீகி முனிவரால் நமக்கு “இராமாயணம்” என்கிற பெரும் இராமகாவியம் கிடைத்தது.
தெய்வ ரகசியம்
ஒருஏழை தாயின் வயிற்றில் பிறந்த ரத்னாகரன், வளர்ப்பில் நல்லவனாக இருந்தும் சூழ்நிலையால் திருடனாக மாறி, பிறகு இன்னொரு சூழ்நிலையில் நாரதரை தரிசித்து, பிறகு வால்மீகி முனிவராக மாறி, ஸ்ரீஇராமரின் மனைவியான அன்னை சீதாதேவியை தன் மகளை போல பாதுகாத்து வந்து, இராமரின் பிள்ளைகளான லவ-குசனையும் நல்லமுறையில் வளர்த்து, அவர்களுக்கு குருவாக இருந்து பெரும் சிறப்படைவோம் என்று சாதாரண ரத்னாகரனாக இருந்தபோது வால்மீகி முனிவர் நினைத்திருப்பாரா.? நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்.
ஒருவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்று எவராலும் சொல்லமுடியாது. அது தெய்வ ரகசியம். ஒரே தாயின் வயிற்றில், ஓரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகளின் வாழ்க்கை அமைப்பு வெவ்வேறு விதமாக அமைகிறது. இதனை பூர்வபுண்ணியம் என்கிறது ஜோதிடசாஸ்திரம். தெய்வ ரகசியம் என்கிறது வேதம். அந்த தெய்வ ரகசியம் நல்லமுறையாக அமைய, நல்ல எண்ணங்களுடன் தெய்வத்தை நம்பிக்கையுடன் வணங்கி சிறப்பு பெறுவோம்.

No comments:

Post a Comment