Friday, July 8, 2016

கடவுளுக்கு உயிர் பலி தேவையா?

ஓம் குருவே சரணம்.
கடவுள் சொன்னது என்ன? நாம் கடைப்பிடிப்பது என்ன? சிந்தித்து பாருங்கள்!
கடவுளுக்கு உயிர் பலி தேவையா?
இந்த வினாவிற்கு 'ஆம்' என்று கூறும் மக்களிடம் அடியேன் உரையாட வேண்டும்.
மக்களே! நீங்கள் சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் எப்படிப்பட்டவர் தெரியுமா? புல், செடி, பூண்டு என சிறியவை முதல் மலை, கடல், வானம், பூமி என்று பெரியவை அண்டசராசரங்களையும் படைத்தவர் கடவுள். அவர் பேரன்பாளராகவும், கருணை கடலாகவும் விளங்குகின்றார்.
" நான் எல்லா உயிர்களிலும் இருக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மாவும், " " அல்லாஹ் உயிர்களை கொடுமை செய்வதை ஒருபோதும் விரும்பமாட்டான் " என்று முகம்மது நபியும், " எந்த உயிரையும் கொலை செய்யாதே " என்று இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளனர். பிறகு ஏன் கடவுளுக்கு உயிர் பலி?.
இராமலிங்க அடிகளார் புலால் தின்று உடல் வளர்ப்பதை ஒரு பாவமாக குறிப்பிடுகிறார். திருமூலர் " புலால் மறுத்தல் " என்ற அதிகாரத்தை திருமந்திரத்தில் எழுதியிருக்கிறார். அறுசமயம் நிறுவிய பகவத்பாதர் ஆதிசங்கரரும் உயிர்பலியை கடுமையாக கண்டிக்கிறார்.
இன்னொரு முக்கியமானதை அடியேன் கூறுகின்றேன். கடவுளுக்கு உயிர் பலி கொடுப்பதும், அதனை வாங்கி புசிப்பதும் மிகப்பெரிய பாவச்செயலாகும். ஒரு வாயில்லா ஜீவனை கொன்று அதை தனக்கு சமர்ப்பிப்பதை கடவுள் ஒருப்பொழுதும் ஏற்கமாட்டார். கடவுள் அதை அருவருக்கிறார். மேலும் ஒரு உயிரை பலியிட்டு கடவுளுக்கு கொடுப்பது , ஒரு குழந்தையை பலியிட்டு அதின் தாயிடம் கொடுக்கின்ற மாதிரி. மேலும் இந்த பாவம் ஜென்ம ஜென்மமாக வந்து துன்புறுத்தும். இதற்கு பிறகாவது நீங்கள் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.
சரி. உங்கள் வழியிலேயே வருகிறேன். இந்த கருத்தை சம்பந்தப்பட்ட ஒரு ஆன்மீக கதையை பார்ப்போம்.
அந்த காலத்திலும் இது போன்ற கொடுமையான சம்பவங்கள் அரங்கேறியது. அக்காலத்தில் சில உக்ர தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பது வழக்கமாயிருந்தது. மக்கள் தாங்கள் செய்வது தவறு என்று அறியாமல் செய்து வந்தார்கள்.
இத்தகைய காலத்தில் ஹரிதாசர் என்ற மகான் வாழ்ந்து வந்தார். ஒரு சிறந்த திருமால் பக்தர். எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போல மதிப்பவர். அவர் தன் சீடர்களுடன் திருமாலின் நாமத்தை பாடிக்கொண்டே ஊர்ஊராக செல்வார். எல்லா ஊர்களுக்கும் சென்று திருமாலின் புகழை மக்களிடத்தில் பரப்புவார். மக்களின் மனதில் பக்தியையும் அன்பையும் எழச்செய்வார். இதுவே ஹரிதாசரின் நாள்தோறும் வழக்கமாயிருந்தது.
ஒரு நாள் ஹரிதாசர் வழக்கம்போல் தன் சீடர்களுடன் திருமாலின் புகழை பரப்பிவிட்டு கிளம்பினார். அப்பொழுது அவருக்கும் அவர் சீடர்களுக்கும் சற்று களைப்பாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். அப்பொழுது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு காளி அம்மா கோவில் இருப்பதை கண்டார்கள். அங்கே சென்று ஓய்வெடுக்கலாம் என்று முடிவுசெய்தனர்.
ஹரிதாசர் தன் சீடர்களுடன் காளி கோவிலை அடைந்தார். ஹரிதாசர் உள்ளே சென்று அம்மாவை தரிசனம் செய்தார். காளி அம்மா பிரம்மாண்ட கிரீடம் அணிந்து, முக்கண்களுடன், கையில் திரிசூலம் ஏந்திய வண்ணம், புன்னகை தவழ காட்சிக்கொடுத்தார். ஹரிதாசர் காளி அம்மாவை புகழ்ந்து பாடினார். அவரின் கவிப்பாடும் திறனால் காளி அம்மாவை மகிழ்வித்தார். காளி அம்மாவையே கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அந்த கொடுமையான சம்பவம் அரங்கேறியது.
ஒரு கையில் கத்தியையும், மறுக்கையில் ஆட்டுக்குட்டியையும் ஏந்திக்கொண்டு ஒருவர் காளி அம்மா கோவிலுக்கு வந்தார். தன் ஒருக்கையில் இருந்த ஆட்டுக்குட்டியை காளி அம்மாவின் காலடியில் வைத்தார். தன் இருக்கைகளிலும் கத்தியை பிடித்துக்கொண்டு நின்றார். ஹரிதாசருக்கு அவர் செய்தது வியப்பாக இருந்தது. இவர் என்ன செய்யப்போகிறார் என்று யோசித்தப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த கணம் அவர் செய்த காரியத்தை பார்த்த ஹரிதாசருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால், அந்த ஆட்டுக்குட்டியை வெட்டினார். அந்த ஜீவனை பலியிட்டு, காளி அம்மாவுக்கு சமர்ப்பித்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த கொடுமையான செயலைப் பார்த்த ஹரிதாசர் துடிதுடித்தார்.
அந்த கோவிலுக்கு வந்தவர் செய்த காரியமும், அதை பார்த்துக்கொண்டு அசையாமல் இருக்கும் அம்மாவின் புன்னகை தவழ்கின்ற முகமும் ஹரிதாசரின் மனதில் கலங்கத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை காளி அம்மாவின் முகத்தை ஏறெடுத்து பார்த்தார். மேலும் அந்த ஆட்டுக்குட்டியின் அழுகைக்குரல் ஹாரிதாசரின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் யோசித்து பார்த்தார். " ச்சே... இதெல்லாம் என்ன தெய்வம். தன் கண்ணுக்கு முன்னே நடக்கும் கொடுமையை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றுக்கொண்டிருக்கிறது. ஒரு தெய்வம் எப்படி உயிர்பலி கேட்கும் " என்று அலுத்துக்கொண்டார்.
ஹரிதாசர் தன் சீடர்களுடன் கோவிலை விட்டு வெளியேற தீர்மானித்தார். அவர் தன் சீடர்களுடன் கோவிற்வாசலை நோக்கி நடந்ததுதான் தாமதம். சட்டென்று காளி அம்மா ஹரிதாசருக்கு தரிசனம் அளித்து, அவரையும் அவரின் சீடர்களையும் தடுத்து நிறுத்தினார்.
அண்டசராசரத்திற்கும் அன்னையாக விளங்கும் காளி அம்மா ஹரிதாசரை புன்னகை தவழும் முகத்துடன் நோக்கினார். " ஏன் ஹரிதாசரே, உங்கள் அன்னையின் மீது இவ்வளவு கோபம் " என்று கேட்டார். ஹரிதாசர் அம்மாவை நோக்கி " உன் கண்ணிற்கு முன்னால் நடக்கும் கொடுமையை பார்த்துக்கொண்டு நீ அமைதியாக இருக்கின்றாய். உயிர்பலி நடக்கும் இடத்தில் யாம் இருக்கமாட்டோம். அதனால் இப்பொழுதே இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறோம்" என்று கூறினார்.
அதற்கு காளி அம்மா, " தயவுசெய்து இந்த இடத்தை விட்டு போகாதீர்கள். தங்களை போல மகான் கால் பதித்ததால் இது புண்ணியம் அடைந்தது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார். ஹரிதாசர் அம்மாவிடம் " தாங்கள் இன்று முதல் எந்த உயிர்பலியையும் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே காளி அம்மா " இன்று முதல் நான் உயிர்பலி ஏற்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தார். ஹரிதாசர் மனமகிழ்ந்து காளி அம்மாவை போற்றினார். காளி அம்மாவும், ஹரிதாசர் மற்றும் அவருடைய சீடர்களும் சைவ உணவினை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.
அன்று முதல் இன்று வரை எந்த தெய்வமும் உயிர்பலி ஏற்பதில்லை என்பது நிச்சயமான உண்மை.
எனவே மக்கள் அனைவரும் வாயில்லா ஜீவன்களை பலியிடுவதையும், அதை புசிப்பதையும் ( அசைவம் உட்கொள்வதையும் ) நிறுத்திவிட்டு சாத்வீக முறையில் வாழ்ந்து நலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment