Friday, September 16, 2011

அனுமனின் தாச பக்தி சேவை


தாச பக்தி சேவை
இறைவனை எஜமானாகவும், தன்னை அவருக்கு சேவை செய்யும் வேலைக்காரனாகவும் இருப்பதை "தாச பக்தி' என்பர். இதற்கான கர்ண பரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது.
ராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் குறிப்பறிந்து செய்து வந்தார். ராமபிரானுடன் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர்.
ஒரு நாள் ராமபிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், "அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடமும் தெரிவித்தனர்.
""
சுவாமி! உங்களுக்குரிய சேவைகளை அனுமன் மட்டுமே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை
நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும்! என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமர் அனுமதி வழங்கினார்.
காலையில் ராமர் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்று தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர்.
""
எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா?'' என்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ""ஆம்'' என்றனர். ராமர் புன்னகைத்து, ""இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா?'' என்று கேட்டார். அவர்களோ, ""அப்படி ஒரு நிலை வராது. நாங்கள் மிகத்துல்லியமாக தங்களுக்குரிய சேவைகளை ஒன்று விடாமல் சேர்த்துள்ளோம்,'' என்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.
அனுமனுக்கு ராமரின் உத்தரவு தெரிய வந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதாதேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு பெருத்த சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.
அன்று அனுமன், ராம... ராம... என்று ஜபித்தபடியே. ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்று கவனித்தார்.
பகலில் எல்லா சேவையும் குறைவின்றி நடந்தது. இரவில் ராமபிரான் உறங்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதா வந்தாள். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சும் இல்லை, அசைவும் இல்லை.
தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள். பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தனர். ""அண்ணா, அண்ணா'' என்று பதறினர். அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, ""இது நோயாகத் தெரியவில்லையே,'' என்று கிளம்பிவிட்டார்.
அனுமனை அழைக்கலாமா என்று அவர்களுக்கு தோன்றியது. ஆனாலும், குலகுரு வசிஷ்டரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவர் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை.
கடைசியில் வசிஷ்டர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்! என்றார். உடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.
ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் சொடக்குப் போடுவார். அதன்பிறகே என் வாய் மூடும், இது உங்களுக்கு தெரியாது அல்லவா,'' என்றார்.
""
இப்படி ஒன்று இருக்கிறதா?'' என்ற அவர்கள், ""இனிமேல் அவருக்கு சேவை செய்ய உனக்கு மட்டுமே முழுத்தகுதியுண்டு, தாச பக்தி சேவையில் உனக்கு நிகர் நீயே,'' என்று அனுமனைப் பாராட்டினர்.

ராமநாமத்தின் மகிமை


ராமநாமத்தின் மகிமை

ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேடி ஒரு இளைஞன் வந்தான். அப்போது, அவர் ஆஸ்ரமத்தில் இல்லை. அருகிலுள்ள நதிக்கரைக்கு தியானத்துக்காக சென்றுவிட்டார்.
பரபரப்புடன் வந்த இளைஞன், அங்கிருந்த சீடரிடம்,""ஐயா! என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. குருதேவர் இங்கு இல்லை.
நீங்களாவது அதைக் காப்பாற்ற வழி சொல்லுங்கள்,'' என்றான்.
சீடர் அவனிடம்,""ஒரு காகிதத்தில் மூன்றுமுறை "ராம' என்று எழுது. அதைச் சிறிது தண்ணீரில் நனைத்து, அந்த நீரை குழந்தைக்குப் புகட்டு. சரியாகி விடும்,'' என்றார்.
இளைஞன் சென்று விட்டான். மறுநாள், அவன் ஆஸ்ரமத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்தான். ராமகிருஷ்ணர் அங்கே இருந்தார். முந்தைய நாள் நடந்த விஷயத்தைச் சொல்லி, தங்கள் சீடரின் அறிவுரைப்படி மூன்றுமுறை ராமநாமம் எழுதிய காகிதத்தை நீரில் நனைத்து, அந்த நீரை குழந்தைக்குப் புகட்டியதையும், குழந்தை உயிர் தப்பியதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. சீடனை அழைத்தார்.
""
முட்டாளே! ராமநாமத்தின் மகிமை உனக்கு தெரியாதா! ஒரு குழந்தையை உயிர் பிழைக்க வைக்கும் சின்ன விஷயத்துக்கா மூன்றுமுறை ராமநாமம் எழுதச் சொன்னாய். ஒரு தடவை எழுதினால் போதாதா! ராமநாமத்தின் மகிமை தெரியாத நீ ஆஸ்ரமத்தை விட்டு போய்விடு'' என்று கடிந்து கொண்டார்.
சீடர் அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ராமகிருஷ்ணரும் அவரை மன்னித்தார். ராமநாமத்தின் உயர்வுக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

Wednesday, September 14, 2011

மகாளய அமாவாசை

தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது.  மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்..

புராணங்களில் மகாளயபட்சம்

கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன்

பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாதுதான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை.

கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன்

அப்போது, அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று, தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!’ என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Sunday, September 11, 2011

தீ மிதி எதற்காக? ‌

தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா.  குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

உறியடி உற்சவம்

உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும்  அனைவருக்கும் கிடைத்ததாகிறது.

மணமகள் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன்

வட இந்தியாவில் இதுபோன்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் தென் இந்தியாவில் சில சமூக‌த்‌தினரிடம் அரிசியோ அல்லது நெல்லோ மரக்காவில் நிறைத்து, முக்கியமானவர்கள் வரும் போது சிவப்பு கம்பளம் விரிப்பது போல வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் நெடுக கொட்டுவார்கள். அதில் அவர்கள் நடந்து வருவதற்காக. அதாவது மணப்பெண்ணை அவர்கள் மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அதுதான் ஐதீகம். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது.

இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். ஏற்கனவே வீட்டில் ஒரு விளக்கு இருக்கும். ஆனால் புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு, நல்ல விளக்கு என்று சொல்வார்கள். அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள்தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம்.


ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மணநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.

Thursday, September 1, 2011

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று பொதுவான ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால், இப்படி பொய் சொல்லி திருமணம் செய்வது தவறு என்கிறது சாஸ்திரம். அப்படியானால், இந்த கலவடை எப்படி உருவானது? ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதை ஒருவருக்கொருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்று போகும் பட்சத்தில் அதை நடத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதி தந்திருக்கிறது. ஒரு இல்லத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மணமேடையும் அமைந்தாயிற்று. அப்போது ஏதோ ஒரு பிரச்சனை எழுகிறது. இரு வீட்டாரும் தகராறு செய்துகொள்கின்றனர். திருமணம் நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை... இந்த சூழ்நிலையில் அந்த திருமணத்தை ஏதாவது ஒரு பொய்சொல்லி நடத்த சாஸ்திரம் சம்மதிக்கிறது. அவ்வாறு பொய் சொன்னால் அது பொய் ஆகாது. அதற்குரிய தண்டனையும் கிடைக்காது. ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் போது சில நன்மைகள் கருதியும் பொய் சொல்லலாம். சீதாதேவியே ஒரு முறை பொய்சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தார். அப்போது அங்கிருந்த ராட்சஷிகள் சீதையிடம், அந்த குரங்கு எங்கிருந்து வந்ததென உனக்கு தெரியுமா? உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்களே என கேட்டதற்கு, யாரென்றே எனக்க தெரியாது. ஒரு வேளை இந்த வனத்தை அழித்தால் உங்கள் அசுர கூட்டத்தை சேர்ந்ததாக இருக்குமோ என நான் எண்ணியிருந்தேன், என பொய் சொல்லி ஆஞ்சநேயரை காப்பாற்றி விட்டாள். எனவே அவசியமான நேரத்தில் ஒருவரை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம். திருமணம் நடக்கும் முன்பே பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பிற்காலத்தில் பிரச்சனைகளைத் தான் உருவாக்கும்.

விநாயகர் சிறப்பு

ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப் பட்டுவரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் "கணபதீம்' என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு "ஜ்யேஷ்ட ராஜன்' என்ற பெயரும் இவருக்குண்டு.
இதற்கு "முதலில் பிறந்தவன்' என்பது பொருளாகும். பார்க்கவ புராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை "தந்தி' என்ற சொல்லால் அழைக்கிறது. "தந்தோ தந்தி ப்ரசோதயாத்' என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.

வலம்புரி விநாயகர்

பொதுவாக விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே "திருவலஞ்சுழி' என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. புகழ்பெற்ற ஸ்வேத விநாயகரும் (கடல் நுரையால் செய்யப்பட்டவர்) இங்கே இருக்கிறார். சங்குகளில் "வலம்புரி சங்குக்கு' அதிக விசேஷம். அதுபோல, வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் "ஓம்' என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக்கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது "ஓம்' என்பதை ஒத்திருக்கும்.

விநாயகர் ஸ்லோக சிறப்பு

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!'' என்ற ஸ்லோகத்தில் விநாயகரின் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால், இந்த ஸ்லோகத்தை சொன்னபிறகு யாகம், சுபநிகழ்ச்சிகள் முதலானவற்றைத் தொடங்குகிறார்கள். "சுக்லாம்பரதரம்' என்றால் "வெள்ளை வஸ்திரம் அணிந்தவர்' என்று பொருள். விநாயகருக்கு மட்டுமின்றி, சரஸ்வதி, சிவன் உள்ளிட்ட அநேக தெய்வங்களுக்கு வெள்ளை சாஸ்திரம் சாத்துவது இயல்பே. எனவே, இது விநாயகரைக் குறிக்கவில்லை. "விஷ்ணும்' என்றால் "எங்கும் பரந்துள்ள' என்று பொருள். எல்லா தெய்வங்களுமே எங்கும் பரந்துள்ளவை தான். எனவே, இங்கும் விநாயகர் என்ற பெயர் பொருத்தம் எடுபடவில்லை. "சசிவர்ணம்' என்றால் "சந்திரன் போல் அழகு' என பொருள். இதுவும், எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். "சதுர்புஜம்' எனப்படும் நான்கு கரங்களும் பல தெய்வங்களுக்கு உள்ளன. "ப்ரஸந்ந வதனம்' எனப்படும் "முகப்பொலிவும்' எல்லா தெய்வங்களுக்கும் உள்ளது. கடைசியாக வரும் "விக்நோபசாந்தயே' என்ற சொல் தான் விநாயகருக்கு பொருந்துகிறது. "விக்னம்' என்றால் "தடை'. "தடைகளை நீக்கி அருளும் விக்னேஷ்வரர்' என்பது, ஒரு செயலைத் துவங்கும் முன் விநாயகரை வணங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டுவதாக ஆகிறது. எனவே, தான் இந்த ஸ்லோகம் பெரும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

சதுர்த்தியன்று விநாயகரை வணங்க ஸ்லோகம்

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது முடியாவிட்டால் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.
""ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!
பொருள்: ஸுமுகன் (அழகிய முகம் உடையவர்), ஏகதந்தன் (ஒற்றைத் தந்தம் உடையவர்), கபிலர், கஜகர்ணர் (யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர்), லம்போதரர் (பெருவயிறு உடையவர்), விகடர்(யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்), விக்னராஜர் (தடைகளை நீக்குபவர்), விநாயகர்(தெய்வங்களில் முதல்வர்), தூமகேது (அழகானவர்), கணாத்யேக்ஷர்(தேவகணங்களுக்கு அதிபதி), பாலசந்திரர்( பிறைநிலா அணிந்தவர்), கஜானனர்(யானை முகம் கொண்டவர்), வக்ரதுண்டர்( வளைந்த துதிக்கை உடையவர்), சூர்ப்பகர்ணர் (அகன்ற காதுகளை

குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. நீங்கள் அடிக்கடி கோயில்களிலும், வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும்போது, அர்ச்சகர்கள் சொல்லி நாம் கேட்பது. இதோ, அந்த ஸ்லோகம்.
""சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!''
இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, "சுக்லாம்பரதரம்' துவங்கி "ப்ரஸந்ந வதநம்' வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.

Wednesday, August 31, 2011

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.

எளிமையின் நாயகன்

விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகரின் தோற்றம்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.

வடதிசையில் இருந்த இறைவன்

காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.

இருபத்தியோருபேறுகள்

விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோம்.