Tuesday, March 1, 2011

அட்சய திருதியைக்கு வாங்க வேண்டியது என்ன?

அட்சய திருதியைக்கு வாங்க வேண்டியது என்ன? அட்சய திருதியை தினத்தன்று தங்கம், பிளாட்டினம், வெள்ளி ஆகிய பொருட்களை வாங்குவது சிறப்பான பலனை அளிக்கும் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை உள்ளதா?
அட்சய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்உப்பு ஆகியவைதான்.
கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டில் உப்பு, அரிசியை முதன் முதலாக கொண்டு செல்வது கூட அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால், புதிய வீடு லட்சுமிகரமாக இருக்கும் என்ற காரணத்தால்தான்.
அட்சய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
அன்றைய தினத்தில் மங்களகரமான, லட்சுமிகரமான பொருட்களை வாங்குவதே வாழ்வு சிறக்க உதவும்.
இதேபோல் அவரவர் சக்திக்கு முடிந்த அளவு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் பொருட்களை வாங்கலாம். நம் நாட்டு மக்களிடையே தங்கம் மிகவும் மதிக்கப்படும் பொருளாக உள்ளது. தாலி செய்வதும் தங்கத்தில் என்பதை இங்கே கூற விரும்புகிறேன். எனவே, தங்கம் மங்களகரமான பொருளாகத் திகழ்கிறது.
பொருளாதாரச் சூழல் காரணமாக தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்கலாம். பொதுவாக அட்சயதிருதியை தினத்தில் தங்கத்தை விட வெள்ளி வாங்குவதே சிறந்தது என்று கூறுவேன். காரணம், வெள்ளி சுக்கிரனின் உலோகம். லட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

அந்த வகையில் அட்சய திருதியைக்கு தங்கமா? வெள்ளியா? பிளாட்டினமா? எது சிறந்தது என்று பார்த்தால் வெள்ளிதான் முதன்மையானது. அன்றைய தினத்தில் வெள்ளி வாங்குவது குடும்ப விருத்திக்கு உதவும்.
அட்சய திருதியைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று மட்டுமே கருதக் கூடாது. அன்றைய தினத்தில் பொருட்களை கொடுத்தாலும் பலன் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல், அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு அன்னதானம் அளித்தால் நல்ல பலனை அடையலாம்.
முன், பின் அறியாதவர்களை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய, கஷ்டப்படும் மக்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை உரிய முறையில் உபசரித்து அன்னதானம் வழங்கி அட்சய திருதியை தினத்தன்று ஆசீர்வாதம் பெற்றால் குடும்பம் சிறக்கும். இதேபோல் ஆடைகள், வஸ்திரங்கள் வழங்குவதும் சிறப்பான பலனை அளிக்கும்.



No comments:

Post a Comment