Monday, July 29, 2013

நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?

 நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?
பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூட்சுமம் என்று இரண்டு வகைப்படும். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். ஆரம்ப நிலையில் சமயதீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை விசேஷ தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும். எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகலநலன்களையும் தரவல்லவை.

* செவ்வாயின் அருளைப் பெற எப்படி வழிபட வேண்டும்?
செவ்வாய் கிழமையன்று செவ்வாய் கிரகத்திற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சிவப்பு வஸ்திரம், சிவப்பு அரளி சாத்தி அர்ச்சனை செய்து துவரம் பருப்பு சாதம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். துவரையை சிவப்புத் துணியில் முடிந்து இயன்ற அளவு பணம், வெற்றிலை, பாக்கு சேர்த்து தானமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் செவ்வாயின் அருள்
பெறலாம்.

* நாகதோஷ பரிகாரமாக பூஜை செய்தால் பிரசாதத்தை என்ன செய்வது?
பரிகாரம் செய்யச் சொன்னவர்கள் இது பற்றிக் கூறவில்லையா? பிரசாதம் என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான். பரிகாரம் செய்த பிரசாதம் என்பதால் தூக்கி எறிந்து விட முடியாது. நீங்களும் சாப்பிட்டு, பிறருக்கும் விநியோகம் செய்யுங்கள்.

* விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வளர்பிறை சதுர்த்தி சாதாரண சதுர்த்தி. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி. இப்படி மூன்றுவகையாக உள்ளது. வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து, இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம். ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாள் என்பதால் ஒட்டுமொத்தமாக எல்லாரும் கொண்டாட வேண்டும்.

* கோபுரம் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
தாராளமாக வழிபடலாம். திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி, அண்ணாமலையார் படங்கள் கோபுரத்துடன் கூடியதாக கிடைக்கின்றன.

No comments:

Post a Comment