Thursday, July 4, 2013

வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?

மனையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் எதிர் பார்க்கின்ற வசதிகளுக்கு ஏற்றபடி மனை அமையுமா? என்று மட்டும் பார்த்தால் போதாது. அந்த மனை எப்படி தனமுறை அமைந்திருக்கிறது என்று ஆராய வேண்டும். மனையின் கிழக்கு திசையும் வடக்குத் திசையும் தாழ்வாக அமைந்திருக்க வேண்டும்.

தெற்கு பக்கமும் மேற்கு பக்கமும் உயர்வாக இருக்க வேண்டும். இதுவே நல்ல மனையின் அடையாளம். இந்த மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் விருத்தி அடையும். குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். செல்வ வளம் பெருகும் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

முதல் படியாக, மனையின் சந்திர ஸ்தானம், சூரிய ஸ்தானம் எது என்று தெரிந்து கொள்க. மனையின் தெற்கு பாகமும், மேற்கு பாகமும் இணைந்து உருவாகும் முக்கோண பகுதியே சந்திர ஸ்தானம். கிழக்கும், வடக்கும் இணைந்து உருவாகிற முக்கோணப் பகுதியே சூரிய ஸ்தானம்.

அதாவது சந்திர ஸ்தானம் உயர்ந்தும், சூரிய ஸ்தானம் சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் தனத்தை சரி செய்வது வேண்டும். இரண்டு ஸ்தானமும் சமமாக இருந்தால் வெற்றி தோல்வி சமமாக இருக்கும். நடுப்பாகம் பள்ளமாகவும் நான்கு பக்கமும் உயர்ந்தும் இருந்தால் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

தென்பாகம் உயர்ந்து மற்ற மூன்று பாகங்கள் தாழ்வாக இருந்தால் தீய பலன்களும் உயிருக்கு ஆபத்தும் கூட ஏற்படலாம். இவ்வகை மனையில் வசிப்பவர்கள் கடனால் அவதிப்படுவார்கள். நடுப்பாகம் உயர்ந்து நான்கு பக்கமும் இறக்கமாக அமைந்திருந்தால் அடிக்கடி முன்னேற்றத் தடைகள் ஏற்படும்.

மனை அமைப்பும் - சில ராசி நிலைகளும் சில அமைப்புகள் கொண்ட மனைகள் ஒருசில பிரிவினர்களுக்கே ராசி உடையவையாக இருக்கின்றன. துவர்ப்பு மண் உடைய பூமி, தொழுவ வாடை கொண்ட பூமி, செந்நிற பூமி, மன்னர்கள், பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு பொருந்தும். நல்ல பலன்களைக் கொடுக்கும்.

சதுப்பு நில பூமி, தாமரைக்குளத்தின் மணம் உடைய பூமி, வெளிர் நிற பூமி வேத சாஸ்திரம் படிப்போருக்கு பொருந்தும். விளை நில பூமி, நீர்த்தன்மை மிகுந்த மனை, கறுப்பு நிற பூமி நடுத்தர வகையினருக்கு பொருந்தும்.

அடர்ந்த செடிகள் கொண்ட பூமி, பச்சை நிறம் உடைய பூமி ஆகியவை மிகவும் ஏழ்மை நிலை, இப்போதுதான் முன்னேறத் தொடங்குகிறார் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு பொருந்தும். இப்படிப்பட்டவர்கள் இந்த நிலம் வாங்கினால் விரைவில் செல்வந்தராகி விடுவார்கள்.

மண் மணமும் நிறமும்:

வீடு கட்ட மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய வாஸ்து முறைகளில் முக்கிய அம்சம் இது. மனை வாங்குவதை மண்ணு வாங்கிப் போட்டேன் என்று வழக்கச் சொல்லில் கூறுவார்கள். இந்த மண்ணின் இயல்புகளுக்கு ஏற்ப வாழ்க்கை நலன்கள் பெருகும்.

இதை வாஸ்து கண்ணாடியைக் கொண்டு அறியலாம். வாஸ்து லென்சால் இதை அறிந்து சொல்ல முடியும். மனையின் மண் நிறம் இளஞ்சிவப்பாக இருந் தால் நல்ல செல்வாக்குடன் செல்வம் சேர்ந்து நிம்மதியாக வாழ்வார்கள். சிவப்பு நிற மண் காணப்பட்டால் செல்வம் சேரும்.

சிறு நோய்களால் செலவு உண்டாகும். பெரிய பாதிப்பு ஏற்படாது. பழுப்பு நிற மண்ணுக்கும் இதே பலன்கள் ஏற்படும். கருமணல் மண் பரிசோதனையில் வந்தால் அளப்பரிய செல்வங்களுக்கு அதிபதி ஆவார். பழுப்பு நிற மண் முக்கால் வாசி நிறைந்திருந்தால் செல்வாக்கும் செல்வமும் சேர்ந்திடும்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் நிம்மதி போய் விட வாய்ப்பு உண்டு. மணல் மட்டுமே நிறைந்த மணற்பாங்கான மனையில் வீடு கட்டுபவர்களுக்கு புகழ் செல்வாக்கு இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. கலைஞர்கள் அரசியல்வாதிகளுக்கு இம்மனை ஏற்றது.

கூழாங்கற்கள் நிறைந்த மனைப்பகுதியில் வீடு அமைப்பவர்களுக்கு நிலையான வாழ்க்கை சீராக இருக்காமல் பணம் போவதும் வருவதுமாக இருக்கும். மனையின் மண்ணைப் பரிசோதனை செய்ய மண்ணுடன் நீர் கலந்து பிசைந்து கோபுரம் போல் நிற்க வைத்துப் பார்த்தால் இளகுவதுபோல் இறங்கக் கூடாது.

மறுநாள் பார்க்கும்போது அதில் நுரை வந்தால் செல்வந்தர் ஆவர். பொரித்துப்போனால் கடனும் செல்வமும் சேர்ந்தே வரும், தயிர் போன்ற வாடை வந்தால் இன்ப துன்பம் மாறி மாறி வரும். புளித்த வாடை வந்தால் அடிக்கடி நோய், செலவு வரும்.

நெய் மணம் கண்டால் சரிவுதான். தேன் போன்ற வாடை வந்தால் படிப்படியாக முன்னேற்றம் வந்து பெரிய பணக்காரக் குடும்பம் ஆவர். மீன் வாடை வந்தால் முன்னேற்றமின்றி ஏதோ வாழ்க்கை வண்டி ஓடும். இப்படி வாஸ்துவின் முதல் கட்டப்படியைக் காண வேண்டும்.

No comments:

Post a Comment