Monday, July 15, 2013

வெற்றிலை

நாம் வாழும் இந்த பூமியின் மேல் மட்டத்தில் நீரை உறிஞ்சியபடி எத்தனையோ தாவரங்கள் முளைத்தெழுகின்றன. அவற்றில் தர்ப்பையும் வெற்றிலையும் தெய்வத்தன்மை வாய்ந்தவையாக எல்லாவிதமான பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

வாழ்க்கையில் எதிர் கொள்கின்ற வெற்றி தோல்விகளை வெற்றிலை ஆருடத்தின் வழியாக நம் முன்னோர்கள் அறிந்து கொண்டனர். இரு வீட்டின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கப்போகிறதென்றால் பேச்சுக்களில் அடிக்கடி வெற்றிலை என்ற வார்த்தை வருவதைக் காணலாம்.

வெற்றிலை எடுத்துக்குங்க! தாம்பூலம் தரியுங்க! நிச்சய தாம்பூலம் செய்தாகிவிட்டதா? பாக்கு வெற்றிலை மாத்தியாச்சா? தாம்பூலப் பிரசன்னம் பார்த்தேன் என்ற வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் வெற்றிலை தான் பிரதானமாகத் திகழும்.

தெய்வத்தன்மை மிகுந்துள்ள வெற்றிலை பற்றிய அபூர்வமான செய்திகள் புராணங்கள் சாஸ்திரங்களில் கிடைக்கின்றன. உடல் நோய்க்கு மருந்தாகவும், வாய்க்கு வாசனைத் திரவியமாகவும், ஜோதிடத்துறையில் பிரசன்னம் பார்க்கும் செய்திக்களமாகவும் வீடு மற்றும் கோயில் பூஜைகளில் முதல் பொருளாகவும், யாகப் பொருளாகவும், அஷ்டமங்களங்களில் தாம்பூலம் என்ற ஒரு திரவியமாகவும் பயனாவதிலிருந்து இதன் சக்தியை அறிய முடியும்.

வெற்றிலையின் காம்பில் - பிரம்ம தேவனும், நுனியில் மூதேவியும், மத்திய பாகத்தில் மகாலட்சுமியும் இருப்பதாக ஐதீகம் உண்டு. வெற்றிலையை முதன்மையாக வைத்து செய்யப்படும் பூஜைகளில் மிகவும் உன்னதமானது தாம்பூல தாரணி வழிபாடு.

சுமங்கலிப் பெண்கள் மூன்று பேரை மஞ்சள் கொடுத்து குளிக்க வைத்து, புதுப்புடவை சட்டை கொடுத்து அலங்கரிக்க வைத்து மனைப்பலகையில் அமர வைக்க வேண்டும். ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணின் முன்பும் 108 வெற்றிலைகள், வாசனை சுண்ணாம்பு, பாக்குகள் வைத்து, புவனேஸ்வரி அல்லது லலிதா பரமேஸ்வரி படத்தை எதிரில் வைத்து அருகில் முகம்பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். அடுத்ததாக தேவி மகாத்மியம்.

சவுந்தர்ய லகரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை ஒவ்வொரு சிறு பகுதியாகப் படித்து வர வேண்டும். ஒரு சிறு பாகம் படித்து முடிந்ததும் வெற்றிலை பாக்கை சுமங்கலிகள் போடச் செய்து அம்பிகை படத்திற்குக் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். இவ்வாறு சுமங்கலிகள் தாம்பூலம் போடுவதற்கு அம்பிகையே நேரில் வந்து எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறுவர்.

இப்படியாக, பாராயணம் செய்யும் முறை முடிந்ததும் மூன்று பெண்களையும் அம்பிகையாக பாவித்து மந்திரம் கூறி தூபதீபம், நிவேதனமாக சர்க்கரை அன்னம் படைத்து விழுந்து வணங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் வழக்கம்.  எட்டுவகை பூஜா திரவியங்கள் பட்டியலில் வெற்றிலையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ரவிக்கைத்துணி, மஞ்சள், சந்தனம், தாம்பூலம், வாழைப்பழம், மரச்சீப்பு, வில்வப்பழம் தாமரைமலர் ஆகிய எட்டுப் பொருட்களுடன் அரசுக்குச்சி, ஜாதிப்பத்திரி சேர்த்து நெய்யுடன் கலந்து, வெற்றிலையைத் தனியாக யாகமுறைசெய்து திலகம் இடுவதால் எந்த இடத்தில் ஆகுதி செய்கிறோமோ அங்கே செய்பவருக்கும் காண்பவருக்கும் மகாலட்சுமி தேவி செல்வப் பேற்றைத் தருகிறாள் என்கிறது சவுபாக்ய விரத சாஸ்திரம்.

செல்வம் சேர:

வியாழனும் வெள்ளியும் கூடுகிற வேளையான வியாழன் மாலை 6 மணி 32 நிமிடங்களுக்கு பதினாறு வெற்றிலை பாக்குகளை 4 வரிசையாக வைத்து 16 லட்சுமிகளை பூஜை செய்த பிறகு பதினாறு அட்சர குபேர மந்திரத்தால் செம்மலர் கொண்டு (ஓம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமக) வழிபடல் வேண்டும்.

No comments:

Post a Comment