பத்மாட்சன் என்ற மன்னன், மகாலட்சுமியை தன் மகளாகப் பெற வேண்டுமென்று ஆசைப் பட்டான். இதற்காக நாராயணனை வேண்டி தவமிருந்தான். அவனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, ஒரு மாதுளங்கனியைக் கொடுத்துவிட்டு மறைந்தார். மன்னன் அந்த கனியை அரண்மனைக்குக் கொண்டு சென்றான். வழியிலேயே அந்த பழம் பெரிதாகி விட்டது. அதிர்ந்தவன், அதனை உடைத்தபோது உள்ளே ஒரு குழந்தை இருந்ததைக் கண்டான். அழகிய சிலை போல பிறரைக் கவரும் அழகுடன் இருந்த குழந்தைக்கு, "பதுமை' எனப்பெயரிட்டு வளர்த்தான்.
"பதுமை' என்றால் "சிலை'. அந்தப் பெண் திருமணப்பருவத்தை அடைந்ததும், சுயம்வரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல நாட்டு மன்னர்களும் வந்தனர். அதில் ராவணனும் ஒருவன். சுயம்வரத்திற்கு வந்திருந்த யாரையும் பத்மாட்சனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, வானத்தில் உள்ள நீலத்தை யார் தன் உடலில் பூசிக் கொள்கிறாரோ, அவருக்கே தன் மகளைத்தருவேன் என்ற விசித்திரமான போட்டியை அறிவித்தான். வந்திருந்தவர்களுக்கோ குழப்பம்! பத்மாட்சன் தங்களுக்கு பெண்ணைத் தரக்கூடாது என்பதற்காக அந்த போட்டியை நடத்துவதாகச் சொல்லி எதிர்த்தனர். மேலும், தங்களுக்கு வில், வாள் போட்டி அல்லது அறிவு திறன் தொடர்பான போட்டிகள் வைக்கும்படி கூறினர்.
பத்மாட்சன் அதை ஏற்கவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தான். கோபம் கொண்ட மன்னர்கள், பத்மாசுரனின் அரண்மனையைச் சூறையாடினர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பதுமை, ஒரு அக்னி குண்டத் திற்குள் புகுந்து கொண்டாள். பத்மாட்சனை வென்ற அரசர்கள், பதுமையைத் தேடினர். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் சென்று விட்டனர். இந்நிகழ்ச்சி நடந்து பல்லாண்டுகள் கழித்து, அக்னி குண்டத்திலிருந்து வெளியில் வந்தாள் பதுமை. தான் வளர்ந்த அரண்மனை மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு கலங்கினாள். தன்னால் உண்டான அழிவிற்கு, பரிகாரம் வேண்டி பெருமாளை வேண்டி தவமிருந்தாள்.
அப்போது வான் வழியாக சென்று கொண்டிருந்த ராவணன், பதுமையைக் கண்டான். அவளிடம் சென்று தன்னை மணந்து கொள்ளும்படி கூறினான். அவள் கேட்கவில்லை. அவளைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயன்றாள்.
மறுபடியும் தன்னைக் காத்துக்கொள்ள அக்னிக்குள் புகுந்து கொண்டாள் பதுமை. எப்படியும் அவளை அடைந்தே தீருவதென்ற முடிவெடுத்த ராவணன், தீயை அணைத்து, அதற்கடியில் தோண்டிப் பார்த்தான். அங்கு நவரத்தினங்கள் மட்டுமே கிடைத்தது. அதை ஒரு பெட்டியில் வைத்து, அரண்மனை பூஜையறையில் வைத்து விட்டான். ஒருசமயம் அவன் ரத்தினப்பெட்டியைத் திறந்தபோது, அங்கு பதுமை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அப்போது பேசிய குழந்தை, ""ராவணனே! அநீதியான ஆட்சி நடத்தும் உன்னை அழிக்காமல் விடமாட்டேன். அதற்கான காலம் விரைவில் வரும், காத்திரு!'' என்றது.
கோபமடைந்த ராவணன், அக்குழந்தையை அப்போதே கொல்ல முயன்றான். ஆனால் மண்டோதரி தடுத்து, குழந்தையை எங்காவது விட்டுவிடும்படி வேண்டினாள். எனவே, ராவணன் பெட்டியை பூட்டி பல மைல் தூரத்திலுள்ள ஒரு இடத்தில் மண்ணிற்கடியில் புதைத்துவிட்டு வரச் செய்தான். அந்த பெட்டியை ஏவலர்கள் மிதிலாபுரி என்னும் இடத்தில் புதைத்தனர். அங்கு ஆட்சி செய்த மன்னர் ஜனகர், ஒரு யாகம் செய்வதற்காக தங்கக் கலப்பை கொண்டு உழுதார். அப்போது ஒரு பெட்டி சிக்கியது. அதுதான் ராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி. அதிலிருந்து கிடைத்த குழந்தையை அவர் வளர்த்தார். அந்தக் குழந்தை "சீதை' என பெயரிட்டார். நீலமேக வண்ணனாகிய ராமருக்கு மணம் முடித்து வைத்தார். ராவணனும் சீதையின் சாபப்படி அழிந்தான்.
No comments:
Post a Comment