Sunday, February 6, 2011

போலிப்புகழ் வேண்டாமே - மாணிக்கவாசகர்

போலிப்புகழ் வேண்டாமே - மாணிக்கவாசகர்
போலிப் பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக் கொள்ளாமல், தகுதியானவர்களிடம் இருந்து தேடி வரும் பட்டங்களையே ஏற்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் மாணிக்கவாசகர். “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்று பாராட்டப்படும் நூலை எழுதி, சிவபெருமானிடமே பட்டம் பெற்றவர் இவர். இவரது குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். ஊரின் பெயரால் இவருக்கு, “வாதவூரார்’ என்று பெயர் சூட்டினர் பெற்றோர். கல்வித்திறன் மிக்க இவரை தன் அமைச்சராக்கினான் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன். ஒருசமயம், தன் குதிரைப் படையை மேம்படுத்துவதற்காக, நல்ல ரக குதிரைகள் வாங்கி வரும்படி, பெரும் செல்வத்துடன் வாதவூராரை மன்னன் அனுப்பினான். சிவபக்தரான அவர், திருப்பெருந்துறை (புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார் கோவில்) எனும் தலத்தை அடைந்தார்.
அங்குள்ள குருந்தமரத்தடியில் (காட்டு எலுமிச்சை) குருவடிவம் தாங்கி அமர்ந்திருந்தார் சிவபெருமான். அவரை சிவனென்று அறியாமல், குருவாக ஏற்று, அங்கேயே தங்கிவிட்டார் வாதவூரார். குதிரை வாங்க கொண்டு சென்ற பணத்தை, கோவில் திருப்பணிக்குச் செலவழித்து விட்டார். இதையறிந்த மன்னன், அவரை திரும்ப வர உத்தரவிட்டான். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, ஊர் திரும்புவதற்குள், இறைவனே குதிரைகளுடன் அங்கு வந்துவிட்டார். அத்தகைய குதிரைகளைப் பார்த்திராத மன்னன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், அன்றிரவில் குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டதை அறிந்து, இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்பதை உணர்ந்த மன்னன், வாதவூராரை சிறையில் அடைத்து விட்டான். அவர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்.
தன் பக்தனின் துயர் துடைக்க, ஒரு லீலையை நிகழ்த்தினார் இறைவன். வைகையில் வெள்ளம் பெருகி வரச் செய்தார். அதன் கரைகளை உயர்த்த வீட்டுக்கு ஒருவர் வரவேண்டுமென உத்தரவிட்டான் மன்னன். வந்தி என்ற மூதாட்டியின் வீட்டில் ஆளில்லாமல் போகவே, அவளுக்காக வேலைக்காரன் போல் வேடமிட்டு வந்து, அவள் சார்பில் கரையை அடைக்கச் சென்றார் இறைவன்.
சென்ற இடத்தில் தூக்கம் வருவது போல நடிக்கவே, பணிகளைப் பார்வையிட வந்த மன்னன், அவரது முதுகில் பிரம்பால் அடித்தான். அப்போது உலக உயிர்கள் முழுமைக்கும் முதுகு வலித்தது. வந்தது இறைவன் என்பதை அறிந்ததும், மன்னிப்பு கேட்டான் மன்னன். குதிரைகள் நரிகளானது சிவலீலை என்பது தெரிந்ததும், மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். மீண்டும் திருப்பெருந்துறை சென்ற அவர், தன் குருவிடமே தங்கியிருந்தார். ஒருநாள் குரு, தன் திருவடிகளை ஒரு பீடத்தில் வைத்து வணங்கும்படியும், தான் அங்கிருந்து செல்லப் போவதாகவும் தெரிவித்தார். மாணிக்கவாசகருக்கு அவரைப் பிரிய மனமில்லை. இருந்தாலும், குரு அங்கிருந்து மறைந்து விட்டார். பின்னர், சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்கச் சென்ற மாணிக்கவாசகர் அங்கே தங்கி, சிவனை நினைத்து உருகி, பல பாடல்களைப் பாடினார்.
அப்போது, அந்தணர் வடிவில் வந்த சிவன், “மாணிக்கவாசகரே… நடராஜரைப் பற்றி நீ பாடு; அதை நான் தொகுத்து எழுதுகிறேன்…’ என்றார். மாணிக்கவாசகரும், திருவாசகம், திருக்கோவையார் என்ற தலைப்பில் பாடல்களைப் பாடினார். இவற்றைத் தன் கைப்பட எழுதிய சிவன், “மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் எழுதியது…’ என கையெழுத்திட்டு கொடுத்து மறைந்தார். பின்னர், தில்லை அந்தணர்கள் திருவாசகத்துக்குரிய பொருள் என்னவென்று கேட்க, “இதற்கு பொருள் இந்த தில்லையம்பலவாணனே’ என்ற மாணிக்கவாசகர், நடராஜருடன் ஐக்கியமாகி விட்டார். இறைவனிடமே, “மாணிக்கவாசகர்’ எனும் பட்டத்தை வாதவூரார் பெற்றது போல, நாமும் சிறப்பான செயல்களைச் செய்து, தேடி வரும் பட்டங்களை மட்டும் ஏற்போம். நமக்கு நாமே பட்டம் சூட்டிக் கொள்வதில்லை என்று, மாணிக்கவாசகரின் குருபூஜை நாளில் முடிவெடுப்போம்.

1 comment:

  1. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete