Monday, February 7, 2011

மனம் போனபடி போகாதே! -

மனம் போனபடி போகாதே! -பகவான், மனிதனையும் படைத்து, அவனுக்கு பல விதமான உறுப்புகளையும் கொடுத்ததோடு, எண்ணங்களுக்கு காரணமான மனதையும் கொடுத்தான்; இந்த மனதில் தான், பல எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை செயல்படுத்த, உடல் உறுப்புகள் பயன்படுகின்றன. இந்த உடல் உறுப்புகளைக் கொண்டு, நல்ல காரியங்கள் செய்து, புண்ணியம் பெறலாம்; தவறுகளை செய்து, பாவத்தையும் சம்பாதிக்கலாம். புண்ணியம் செய்தவர்கள் நல்ல கதியடைவர்; அதாவது, புண்ணிய லோக வாசம் கிடைக்கும்.
புண்ணிய லோகம் என்பது, மேலே, மேலே என்று இரண்டு, மூன்று இடங்களை கடந்து சென்றடையும் லோகம். பரமபதம், வைகுண்டம் என்றெல்லாம் சொல்கின்றனரே… அந்த இடம். புண்ணியம் செய்தவர்கள், இந்த இடத்தை அடைவது ரொம்ப சுலபம். அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து, சகல மரியாதையுடன் தேவர்கள் அழைத்து போவர். அங்கே இவர்கள், சகல சுகபோகங்களுடன் இருப்பர்.
பாவம் செய்தவர்கள் பாவிகள். பாவம் செய்வதற்கும், பகவான் கொடுத்த உறுப்புகள் தான் உபயோகமாகின்றன. இப்படிப்பட்டவர்களை, எமதூதர்கள் வந்து, கட்டி இழுத்துப் போவர். போகும் வழி ரொம்பவும் கொடூரமானது. வழியில் சுடு மணல், நெருப்பு, ஆறு, கல், முள் நிறைந்த பிரதேசம் வழியாக இழுத்துக் கொண்டு போய், எமதர்மன் முன் நிறுத்தி, இவன் செய்த பாவங்களை பட்டியலிட்டு படிப்பர்; பாவத்துக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
சாதாரண நரகம், கும்பீ பாகம், ரவுரவம் என்றெல்லாம் பிரித்து வைத்திருக்கின்றனர். பாவத்தின் தன்மைக்கு ஏற்ப, அந்தந்த வகுப்புகள் தண்டனையாக கிடைக்கும். அங்கே போய் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதையெல்லாம் படிக்கும் போது, பயமாகத் தான் இருக்கும். ஆனால், மனம் சும்மா இருப்பதில்லையே… எதையாவது செய்யச் சொல்கிறது. பாவம், புண்ணியம் இரண்டுக்குமே மனம் தான் காரணம்; அதனால் தான், “மனம் போனபடி போகாதே…’ என்றனர். அது நல்ல வழியா, தவறான வழியா என்பதை, எப்படி தெரிந்து கொள்வது? மகான்களிடம் விசாரணை செய்; அவர்கள் நல்வழி காட்டுவர்.
மனிதன் எப்படியாவது நற்கதி பெற முயல வேண்டும். பிறந்து விட்டால் மட்டும் போதாது; பிறவிப் பயனை அடைய வேண்டும்!

No comments:

Post a Comment