Saturday, February 5, 2011

விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்

விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்
எல்லா விரதங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் யாவை என நாம் பார்ப்போமானால் அதிகாலையில் துயிலெழுந்தல், நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிதல், சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை (அநுட்டானம் பார்த்தல்) முறைப்படி செய்தல்,ஆலய வழிபாடு செய்தல், காலை, மாலை வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றி வழிபட்டு இயன்றவரை திருமுறைப்பாடல்கள் மற்றும் தோத்திரப்பாடல்களைப் பாடுதல், விபூதி, உருத்திராக்கம் முதலிய சமய சின்னங்களை அணிந்திருத்தல், காலை உணவினை நீக்கி மதியம் ஒரு வேளை மட்டும் இன்னமும், இரவில் பால் பழமும், அல்லது பலகாரம் உண்ணல் என்பன எல்லாவிரதங்களுக்குமே முக்கியமாக வேண்டப்படும் கட்டுப்பாடுகளாகும். விரதம் இருக்கும் பெண்கள், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும். வீடு வாசல்களைக் கழுவி சுத்தப்படு;த்த வேண்டும். இவ்விதம் விரதோத்தியாபனம் செய்பவர்களுக்காகவும், சாதாரணமாக பாரணை சமயத்தில் ஆலய தரிசனம் செய்வதற்காக வருபவர்களுக்காகவும், உபவாசவிரதங்களுக்கு மறுநாள் காலையில் ஆலயங்களில் நிகழும் விஷேஷ பாரணைப் பூசையை அதிகாலையிலேயே நிறைவேற்றி விரதம் அநுஷ்டிப்போர் எட்டரை மணிக்கு முன் தமது பாரணையை முடித்துக் கொள்ளும் வகையில் ஆலய நிர்வாகிகளும், குருமாரும் முன்வர வேண்டும்.
உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.
சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.
ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.
பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.
சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.
விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.
இவ்விரதங்களை அனுஷ்டிக்கத் தகுதியானவர்கள் யார் தகுதியற்றோர் யார்? என்றொரு கேள்வி எழுகிறது. சுத்த போசனமுடையோராயும் தீட்சை பெற்றவர்களாகவும், ஆசார சீலர்களாகவும் இருப்பவர்களே விரதங்களைக் கைக்கொள்ளத் தகுதி உடையோர் என்று விரத நூல்கள் எடுத்துரைக்கின்றன.
நோயாளர்களும், ஆசௌகரியமுடையோரும் பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் அனுட்டிக்கும் தகமை இல்லாதவர்கள் இவர்கள் விரதம் கைக்கொள்ள வேண்டுமாயின் தமக்காக வேறு ஒருவரை வரித்துக் கொள்ளவேண்டும். பெண்கள் தம் கணவரை அல்லது மகனை வரித்துக் கொள்ளலாம். நோயாளர் பிள்ளைகளை அல்லது குருமாரைக் கொண்டு விரதத்தை நோற்றலாம். பாலகர்களுக்காகப் பெற்றோர் நோற்றலாம். ஆசார மில்லாதோர் அல்லது அசௌகரியமுடையோரும் குருமாரை வரித்துக் கொள்ளலாம்.
சமையல் பாத்திரங்கள் விரதத்திற்கு எனத் தனியாகப் புதிதாகக் கழுவி சுத்தமாக ஏற்கனவே சமைத்ததாகவோ, அசைவ உணவுகளைச் சமைத்த பாத்திரங்களாகவோ இருக்கக் கூடாது. முதல் நாள் சமைத்த உணவுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது எண்ணங்களை சிந்தனையைச் செலுத்த வேண்டும்.
விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.
விரத நிபந்தனைகளை முழுமனதோடு ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். விரதங்களுக்கு தகுந்தபடி ஒருவேளை, இரண்டு வேளை மூன்று வேளையும் உபவாசம் இருத்தல் ஆகிய எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
விரத பூசையின் போது ஒவ்வொரு முறையும் விநாயகருக்கு பூசை செய்த பிறகே விரதத்திற்கான தெய்வங்களுக்கு பூசை செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட விரதங்களில் குறிப்பிட்ட முறைப்படியே ப+சை விதிகளையும், அனுட்டான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். விதியில் குறிப்பிட்ட மலர்களே அத்தெய்வங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாற்று மலர்கள் பயன்படுத்தக் கூடாது. இது விரதங்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பது முன்னோர் நம்பிக்கை
விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனைத் தரா.
விரத சம்ஹிதை என்னும் நூல் நோயாளிகள் மிகவும் வயதானவர்கள், குழந்தைகள் இப்படி உள்ளவர்கள் விரதம் பூசைகளில் கலந்து கொண்டால் போதும் என்கிறது. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி எழு தினங்கள் ஆன பிறகே விரதம் மேற்கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்கும் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால் அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவை விரத அனுஷ்டானங்களுக்கான பொது விதிகளாகும். இவற்றோடு சம்பிரதாய பூர்வமாக தமது பிரதேசங்களில் நிகழும் நடைமுறைகளையும், குருமூலமாக உபதேசிக்கப்பட்டவற்றையும் சேர்த்து முழுமனதான விரதங்கள் நம்பிக்கையோடு அனுசரிப்பதே முறையாகும்.
விரதம் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றை மனத்தில் உறுதியாகக் கொள்ளுவதையே விரதம் என்பார்கள். இவ்விதம் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றபோது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பதனை சாஸ்திரங்கள் தெளிவு படக்கூறுகின்றன. இவற்றை நாம் முறைப்படி கைக்கொண்டால் விரதஅனுட்டான பயனைப் பெற்றக்கொள்ளலாம்.





No comments:

Post a Comment