Saturday, February 12, 2011

நாம் உயர சில விதிமுறைகள்!

நாம் உயர சில விதிமுறைகள்!

.இந்த ஆளுமையை வளர்க்க உதவுகின்ற நியதிகளைக் கண்டுபிடித்திருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது. அந்த நியதிகளையும் முறைகளையும் ஒழுங்காகக் கவனத்துடன் பின்பற்றுவதால் ஒவ்வொருவரும் தன் ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது அது. செயல்முறை வாழ்க்கைக்குரிய முக்கிய விஷயங்களுள் இது ஒன்று. கல்வி என்பதன் ரகசியம் இதுவே. இதனை அனைவரும் செயல்முறைப்படுத்திக் காண முடியும்.
இல்லறத்தார், ஏழை, செல்வந்தர், தொழிலாளி, ஆன்மீகவாதி என்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆளுமையை வலுப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்று.
தூல நியதிகளுக்குப் பின்னால், மிக நுண்ணிய நியதிகள் இருப்பது நமக்குத் தெரியும். அதாவது, பெளதீக உலகம், மன உலகம், ஆன்மீக உலகம் என்று தனித்தனியாக அந்த உண்மைகள் இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றே. அது நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கின்ற கூம்பு வடிவம் போன்றது என்று ஒரு வகையில் கூறலாம். அனைத்திலும் கனத்த பகுதி இங்குள்ளது. அது குவிந்து மென்மேலும் நுண்ணியதாகிச் செல்கிறது. மிகவும் நுண்ணியதை நாம் உயிர் என்கிறோம். அனைத்திலும் தூலமானது உடல். சரியாக இங்கு பிண்டத்தில் உள்ளது போன்றே அண்டத்திலும் உள்ளது. நம் பிரபஞ்சமும் இதைப் போன்றே உள்ளது - பிரபஞ்சம் புறத்தேயுள்ள மிகவும் தூலமான பகுதி. இது ஒதுங்கி மேன்மேலும் நுண்ணியதாகி மிக நுண்ணியதாகி, இறுதியில் இறைவனாகிறது.மிகப் பேராற்றல் இருப்பது நுண்மையில்தானே தவிர, தூலத்தில் அல்ல என்பதையும் நாம் அறிவோம். ஒருவன் பெரிய சுமையைத் தூக்குகிறான். அவனுடைய தசைகள் பருக்கின்றன, உடல் முழுவதும் கடும் முயற்சிக்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. அவனது தசைகள் வலுவானவை என்று நாம் கருதுகிறோம். ஆனால் மெல்லிய நூலிழை போன்ற நரம்புகளே தசைகளுக்குச் சக்தியை ஊட்டுகின்றன. இந்த நூலிழைகளில் ஒன்று, அந்தத் தசைகளைச் சேராதவாறு அறுபட்டால் போதும், வேலை செய்யும் திறனைத் தசைகள் முற்றிலும் இழந்துவிடும். இந்த மெல்லிய நரம்புகள் தம்மைவிட நுண்ணிய ஒன்றில் இருந்து ஆற்றலைக் கொண்டு வருகின்றன.
அது தன்னைவிட மிக நுண்ணிய ஒன்றாகிய எண்ணத்திலிருந்து அந்த ஆற்றலைப் பெறுகின்றது. ஆக, உண்மையில் ஆற்றலுக்கு உறைவிடம் நுண்பொருளே. ஆனால் தூல இயக்கங்களில் காண முடிவதில்லை. ஒரு தூலப் பொருள் அசையும் போது அதனைக் காண்கிறோம். எனவே இயக்கத்தையும் தூலப் பொருட்களையுமே பொதுவாக நாம் ஒன்றுபடுத்திப் பார்க்கிறோம். உண்மையில் எல்லா ஆற்றலும் இருப்பது நுண்மையில்தான்.
அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால், அது எண்ணமாகும் முன்பே, செயலாகும் முன்பே, அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை, நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும், ஆராயவும், அறியவும், இறுதியாக, அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் நம்மை நாம் அடக்க முடியும்.
தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை.
ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.
நுண்ணிய பகுதிகளை அடக்கி விட்டோமானால் பெளதீக உலகின் தீமையின் பெரும் பகுதியை நாம் ஒழித்து விட முடியும். நுண்ணிய இயக்கங்களை நாம் அடக்குவோமானால் ப கவலைகளை நீக்கி விட நம்மால் முடியும். இந்த நுண்ணிய ஆற்றல்களை அடக்க முடிந்தால் பல தோல்விகளைத் தவிர்த்துவிடலாம்.
- சுவாமி விவேகானந்தர்..

No comments:

Post a Comment