Monday, September 23, 2013

பித்ருக்களை நம்பினால் நல்லது நடக்கும்



பித்ருக்களை நம்பினால் நல்லது நடக்கும்
பித்ருக்கள் என்பவர்கள் யார்? மரணம் அடைந்த நம் முன்னோர்கள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இறந்த பிறகு பித்ரு லோகம் சென்று விடும் நம் முன்னோர்கள், அங்கிருந்தபடி நமக்கு நல்வழிகாட்டி உதவுகிறார்கள். சிலர் இதை நம்புவது இல்லை. சி

லர் பித்ருக்கள் என்ற வார்த்தையை கேட்டதுமே, ஏதே ஆவி அது... இது... என்று பயப்படுகிறார்கள். அப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உயிரோடு இருக்கும் வரை நாம் அவர்களிடம் எப்படி பழகினோம். எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தோம்.

இறப்புக்கு பிறகு ஏன் நாம் அந்த பாசத்தை கைவிட வேண்டும்? ஒருவர் மீது நாம் எந்த அளவுக்கு பற்றும், பாசமும் வைத்திருந்தோமோ, அவர் இறந்த பிறகும் அதே மன உணர்வுடன் இருந்தால், பித்ருக்களாக மாறிய அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

எல்லா வகை செல்வமும் பெற அவர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள். திருமணம் ஆவதற்கு முன்பே இளம்வயதில் மரணம் அடைந்து விடும் கன்னிப் பெண்களை, கன்னி தெய்வங்களாக நினைத்து வழிபடும் பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்களிடம் இருந்தது என்பதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன.

இன்றும் கூட தென் மாவட்ட மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த இளம்பெண்களுக்கு ``கன்னிக்கு கும்பிடுகிறோம்'' என்ற வழிபாட்டை நடத்துவதை காணலாம். அந்த கன்னிப்பெண்ணுக்கு பிடித்த உடைகளை ஒரு தனிப்பெட்டியில் வைத்து பூஜித்து வருவார்கள்.

அதுபோல எந்த ஒரு செயலை தொடங்கினாலும் மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபடுவதை தமிழக மக்கள் காலம், காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தகைய வழிபாட்டை ``நாந்தி'' என்று சொல்வார்கள்.

குறிப்பாக வீட்டில் சுபகாரியம் நடப்பதாக இருந்தால் முதல் நாளே முன்னோர்களுக்கு படையல் போட்டு ``நாந்தி'' வழிபாட்டை செய்து விடுவார்கள். எனவே மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் அவசியம் பித்ருக்கள் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

பித்ரு பூஜை செய்ய, தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்று நினைக்கக்கூடாது. உங்களால் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள் போதும். பித்ருக்களை வழிபட மந்திரம் தெரிந்திருக்க வேண்டுமே, ஐதீகம் புரிய வேண்டுமே என்று சிலர் தவிப்பார்கள், தயங்குவார்கள். அத்தகைய தவிப்போ, தயக்கமோ தேவை இல்லை.

 ``தாயே தந்தையே... நான் கொடுக்கும் இந்த தண்ணீரையும், எள்ளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொன்னால் கூட போதும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் மனம் குளிர்ந்து போவார்கள். எனவே பித்ரு பூஜைகள், தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருந்து விடாதீர்கள்.

அதிலும் வரும் மகாளய அமாவாசை தினம் (அக்டோபர் 4-ந் தேதி) மகிமை வாய்ந்தது. அன்று நீங்கள் செய்யும் தர்ப்பணமும், சிரார்த்தமும் நிறைவான பலன்களை அள்ளி, அள்ளித்தர வல்லது. மகாளய அமாவாசை ஆண்டுக்கு ஒரு தடவையே வரும்.

இந்த அமாவாசை தினத்தன்று செய்யப்படும் தர்ப்பணம் மிக எளிதாக, விரைவில் நம் முன்னோர்களை சென்று சேர்ந்துவிடும். இந்த ஆண்டு மகாளய அமாவாசையை தவற விட்டால், மீண்டும் இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு தான் கிடைக்கும். எனவே மகாளய பட்சத்தின் 15 நாட்களையும், மகாளய அமாவாசையையும் தவற விட்டு விடாதீர்கள்.

No comments:

Post a Comment