Wednesday, November 13, 2013

ரமணரின் ஆற்றல் #

 
 
 
ரமணரின் ஆற்றல் #


ஒருநாள் ஒரு சாது பகவானை நாடி வந்தார். அவர் மந்திர சித்தி பெற்றவர். அவர் அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, “ இதோ பாருங்கள் என்னால் ஒரு செப்புக் காசை தங்கமாக மாற்ற முடியும். உங்கள் பகவானால் முடியுமா?” என்றார்.
...
பகவான் வழக்கம் போல் மௌனமாக இருந்தார்.

ஆர்வம் கொண்ட சில பக்தர்கள் அந்தச் சாதுவிடம் ஒரு செப்புக் காசைக் கொடுத்தனர். அவர் அதை வாங்கித் தன் கையில் சில நிமிடம் வைத்திருந்தார். பின்னர் அவர் அதை பக்தர்களிடம் திருப்பிக் கொடுத்த போது அது தங்கமாக மாறி ’பள பள’வென மின்னியது.

“பார்த்தீர்களா, என் ஆற்றலை. உங்கள் பகவானால் இது முடியுமா, சொல்லுங்கள்” என்று எகத்தாளமாகப் பேசிய அந்தச் சாது பகவானைப் பார்த்தும் கிண்டலாகச் சிரித்தார்.

பகவான் உடனே, “சரி, சரி. இன்னொரு செப்புக் காசையும் அவரிடம் கொடுங்கள். அதையும் தங்கமாக மாற்றட்டும்” என்றார்.

அந்தச் சாது, ‘ஆஹா.. என்ன பிரமாதம். கொடுங்கள். என் மந்திர சக்தியால் மாற்றிக் காட்டுகிறேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டார்.

நிமிடங்கள் கழிந்து நாழிகை ஆனது. அந்தச் சாதுவும் விடாமல் பல மந்திரங்களை முணுமுணுத்தவாறு இருந்தார். காசை வலக் கையிலிருந்து இடக் கைக்கும் இடதிலிருந்து வலதிற்கும் மாற்றிக் கொண்டே இருந்தார். பல மணி நேரம் தான் கடந்ததே தவிர, அந்தச் செப்புக் காசை தங்கமாக்க அவரால் முடியவில்லை.

“என்னால் முடியவில்லை. பகவானுக்கு முன்னால் என் சக்தி எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று சொல்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பகவானை நமஸ்கரித்து விட்டு அந்த இடம் விட்டுச் சென்றார் அந்தச் சாது.

பகவான் பக்தர்களிடம், “இந்த மாதிரி சித்து விளையாட்டுகள் எல்லாம் சில பயிற்சிகளால், மந்திர அப்பியாசத்தால் சித்திக்கும். ஆனால் அதனால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை. ஆத்ம விசாரமே தவம். யோகம், மந்திரம் தவம், தியானம் எல்லாமே ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுதான் மிகவும் முக்கியம். இந்த மாதிரி சித்து விளையாட்டுக்களில் கவனம் கொள்ளாதீர்கள். அது உங்களை கீழே இழுத்து விடும்” என்று அறிவுரை பகன்றார்

No comments:

Post a Comment