Wednesday, November 27, 2013

அது எங்கே இருக்கிறது பதினாலு லோகம் ?

ஈரேழு பதினாலு லோகங்களென்றும்,ஏழு கடல்கள், ஏழு மலைகளென்றெல்லாம் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறோம். கடல்களை அறிந்திருக்கிறோம். மலைகள் பலவற்றையும் அறிந்திருக்கிறோம். அது எங்கே இருக்கிறது பதினாலு லோகம் ? சொர்க்க லோகம், நரக லோகம், பாதாள லோகம், பூ லோகம், எம லோகம், சிவ லோகம், இந்திர லோகம், நாக லோகம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் சில லோகங்கள் கதைகளிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பதினாலு லோகம் எங்கிருக்கிறது ? மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தாலோ, செயற்கை கோள்களை வானமெங்கும் அனுப்பிப் பார்த்தாலோ கண்டு பிடிக்க முடியாது. ஏனென்றால் அது இங்கேதான் இருக்கிறது. இதைத்தான் ''இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே'' என்று பாடியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் கதைகள், புராணங்களெல்லாம் மக்களை பக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்காகவும், யோகத் தத்துவங்கள், ஆன்மிகத் தத்துவங்களை விளக்குவதற்காகவும் சொல்லப்பட்டவைகளே. அந்த அடிப்படையில் சொல்லப்பட்ட ஞான பூமிகள் பதினாலையே பதினாலு லோகங்கள் என்பார்கள். இதில் ஏழு அஞ்ஞான பூமிகள் என்றும், ஏழு ஞான பூமிகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அஞ்ஞானம் என்பது மனிதன் தன் ஆன்மாவை உணராமல் தன்னை தன் உடல் என்றுக் கருதிக் கொள்வதே அல்லாமல் வேறொன்றுமில்லை.தன்னை உணர்வதே ஞானம். இதற்குத் தடையாக இருக்கும் உணர்வுகளால் மனிதன் அடையும் அவஸ்தைகளின் படித்தரங்களையே ஏழு அஞ்ஞான பூமிகள் என்பார்கள். பொதுவாக மூன்று அவஸ்தைகளே சொல்லப்பட்டாலும், இன்னும் நுட்பமாக ஆராய்ந்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்டதே ஏழு அஞ்ஞான அவஸ்தைகள் என்கிற அஞ்ஞான லோகங்கள். மூன்று அவஸ்தைகள் நனவு, கனவு, சுழுத்தி என்பவை எல்லோரும் அறிந்ததே. இதை இன்னும் சூக்குமமாக ஆராய்ந்து நனவை நான்காகவும், கனவை இரண்டாகவும், சுழுத்தி ஒன்று என்றும் ஆக மொத்தம் அஞ்ஞான பூமி ஏழு என்றார்கள்.
அதாவது ஆதியில் இருந்த அகண்டமாகிய சத்தில் உதித்த ஓர் உணர்வாகிய அதுவே வித்து நனவு இது முதல் பூமி. இதையே சலிப்பு என்றும், சலனம் என்றும், பலவாறாக சொல்வார்கள். அந்த வித்தில் முளை போல தோன்றிய அகந்தையே நனவு. இது இரண்டாம் பூமி. இதில் நான் எனது என்கிற விருக்ஷம் படர்ந்து, விரிந்து வளர்கிறது. இதுவே மகா நனவு. இது மூன்றாம் பூமி. அழிவைத் தருகின்ற அகந்தையால் மனக் கோட்டை கட்டுவதையே நனவில் கனவு என்பார்கள். இது நான்காம் பூமி. இனி உறங்கும் போது கனவில் கட்டும் மனக் கோட்டையே கனவாகும். இது ஐந்தாம் பூமி. விழித்த உடன் கனவில் கண்டதை நினைத்துப் பார்பதே கனா நனவு என்பதாகும். இது ஆறாம் பூமி. மண்டும் இருள் போன்ற உறக்கம் சுழுத்தி இது ஏழாம் பூமி. ஆக இந்த ஏழு வகை உணர்வுகளால் நுகரும் அவஸ்தைகளையே ஏழு அஞ்ஞான பூமிகள் என்பர். ஒவ்வொரு உயிர்களும் தன்னை உணர்வதற்குத் தடையாக இருப்பது இந்த அவஸ்தைகளே. இவைகளைக் கடந்து ஞானத்தை நோக்கிப் மனதோடு உள்முகமாகப் பணப்படுவதையே ஏழு அஞ்ஞான லோகங்களைக் கடப்பதாகும்.
அடுத்து தீமையினின்று விலகி ஆத்ம விசாரணையில் விருப்பம் கொள்வதை சுப இச்சை(சுபேச்சை)என்பார்கள். இதுவே எட்டாவது பூமியாகும். ஞான பூமியில் இது முதலாவதாகும். இதில் தீவிரமடைந்து சத்சங்கங்களைச் சேர்ந்து சான்றோர்கள் கூறும் ஆன்ம விளக்கங்களை கூர்ந்து கவனித்து அவற்றைக் குறித்து மனதோடு ஆராய்வதை விசாரணை என்பார்கள். இது ஒன்பதாவது பூமி. விடாமல் தொடரும் மனைவி, மக்கள், பொருள் அதாவது, பாசம், பந்தம், பற்று என்கிற மூன்றையும் விட்டு நித்தியாசனத்தில் சதா ஈடுபடுவதை தனுமநஸி என்பார்கள். இதனால் அகந்தை நீங்கும். இது பத்தாவது பூமியாகும். இந்த மூன்று பூமிகளின் அப்பியாசத்தால் மனதில் திட வைராக்யமும், தான் ஆன்மா என்கிற உணர்வும் மேலோங்கும். இந்த நிலையையே பதிணொன்றாவது பூமியாகிய சத்துவாபத்தியாகும். தத்துவத்தில் மனம் கரைந்து புற விவகாரங்களை எல்லாம் மறந்த நிலையே பன்னிரண்டாவது பூமியாகிய அசம்சத்தியாகும். காணும் யாவும் ப்ரம்ம சொரூபமே என்று உணர்ந்து பேதங்களை கடந்து நிற்கும் நிலையே பதிமூன்றாவது பூமியாமிய பதார்த்த பாவனையாகும். இப்படியாக ஏழு அஞ்ஞான லோகங்களைக் கடந்து, ஞான பூமிகள் ஆறையும் விடா முயற்சியுடன் அப்பியாசம் செய்து வருபவர் ப்ரம்ம சொரூபத்தில் லயமாகி, ஆழ்ந்த சமாதி நிலையில் தன்னில் தானாய் உணர்ந்து பூரணமாகி விடுவதையே துரியம் என்பார்கள். இதுவே பதினாலாவது பூமியாகும். துரியத்தில் நிலைத்திருப்பதேதுரியாதீதம். அதுவே முக்தி. அதுவே பரமாத்மா. இதையே பதினாலு லோகங்களைக் கடந்து கடவுளைக் காணலாம் என்பார்கள்.
ஆயிற்று, பதினாலு லோகங்கள் எது என்பதையும், எங்கிருக்கின்றனஎன்பதையும் அறிந்தாயிற்று

No comments:

Post a Comment