Monday, November 11, 2013

சிவ வழிபாடு ஒரு கண்ணோட்டம்

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அன்பாக அருட்பெருஞ் சோதியாக, இன்பமாக, மங்களமாகமறைப்பொருளாக எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன.

இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

பசுபதி, பூதபதி பூதநாதர் என்பன வேதங்கள் ருத்திரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரவடிவினன் ; ஜடாமுடி கொண்டவன், என்று ரிக் வேதத்தின் பிற்கால சூக்தங்கள் வருணிக்கின்றன. சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும்.

ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம். சுக்லயஞ்ஜூர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜூர்வேதம், ` நம சிவாய என்று முழங்குகிறது. பதஞ்சலி முனிவரின் ` மகாபாஷ்யம் ` சிவனின் பெருமையையும் சிவநடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்திரிக்கிறது.

வியாசர் அருளிய ` சிவபுராணம் ` ஆதிசங்கரரின் ` சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி தீபிகா ` ஆகியவை ஓப்பற்ற சிவபக்தி நறுமலர்கள், " சைவ சமயமே மிகப்பழமையானது, இப்போதும் உயிருள்ளதுமான சமயம் ;

சிந்துசமவெளி எங்கும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன " என்கிறார் தொல்பொருள் அறினர் ஜான் மார்ஷல். சிந்து சமவெளியில் " எணான் ` என்று வருவது எண் குணத்தான் என்னும் சிவனே என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கிறித்துவ சகாப்தத்துக்குப் பல நுறு ஆண்டுகள் முற்பட்ட மொகஞ்சதாரோவில் கண்டெடுத்த முத்திரைகள் பலவற்றில் சிவ வடிவங்கள் காண்கின்றன.

அவற்றில், ஒரு முத்திரையில் இறைவன், தவம் புரியும் ஞானக்கோலத்தில் யோகமூர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டிருகிறார். கி.மு. இரண்டாயிரம் நுற்றாண்டளவில் சைவம் தனிச் சமயமாகச் செல்வாக்குப் பெற்றுவிட்டது. காந்தாரநாடு சைவத்தின் நிலைகளனாக விளங்கியது.

சக வம்சத்து அரசன் மோகன் வெளியிட்ட செப்பு நாணயங்களிள் நந்தி உருவங்கள் பொறிக் கப்பட்டன. சிவலிங்க வழிப்பாட்டை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர்கள் நாகவம்சத்து அரசர்களே. ஆர்யாவர்த்தத்துக்குத் தென்புறத்தே இருந்த பாரசிவர், சுட்டு நாகர், மகாநாகர் ஆகிய ரச மரபினரா வழிப்பட்டதால் சிவனை தட்சிணாபதி, தெற்கத்தியர் என்று ஆரியர்கள் வழங்கினர்.

ரிக்வேதமும் ` தட்சிணாபதம் ` என்றே தென்னாட்டை குறிப்பிடுகிறது. இதனாலேயே இறைவனைத் ` தென்னாடுடைய சிவனே போற்றி !' என்று போற்றினர்.  சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன.

திருமாலுக்கும் பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்தப் பேரொளிப் பிழம்பாக, அண்ணா மலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம். தென்னகத்தில் சிவசக்தி ஐக்கிய வடிவே லிங்கமாகக் கருதப்படுகிறது.

ஆலயங்களில் சிவப்பிரான் லிங்க வடிவிலே எழந்தருளியுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் குடிமல்லம் ஆலயத்திலுள்ள சிவலிங்கமே மிகப் பழமையான லிங்கத் திருமேனி என்று கருதுவர். அந்தக் கோயிலின் காலம் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகும்.

சிவ வழிபாடு பிற நாடுகளிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியதையும், கடல் கடந்த நாடுகளில் சிவாலயங்கள் உள்ளதையும் வரலாறு கூறுகிறது. அமெரிக்காவில் கொலஹடே ஆற்றங்கரையில் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயம் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

சிவவழிபாடு காலத்தைவென்று ஞாலத்தில் நிலை கொண்டது. எனவே சிவன் அருள் ஒளிபெற அந்த ஞான மூர்த்தியைப் போற்றுவோம். ஹர ஹர மகாதேவா 

No comments:

Post a Comment