பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும். மனிதன் முடிவில்லாத பிரமாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் அந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது
.
கடவுள் பிரம்மாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது. ஆனால் அந்த வட்டத்தின் மையம், எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இதுதான்.
.
சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத்தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கும் உண்டு. ஆனால் தெய்விகத் தன்மை மட்டும் தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது. இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். பெறுகிற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தன்களாக்கி விடுக்கின்றன.
.
நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதே நல்லொழுக்கம். கீழ்நிலைக்கு இழுத்துச் செல்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற இந்த மூன்று குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். உன்னிடமுள்ள தெய்வீ கத் தன்மையை வளர்க்கக் கூடியதுதான் நல்லெழுக்கமாகும். உன்னிடமுள்ள மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பை உன்னிடமிருந்து அழித்துவிட்டு மனிதத்தன்மை கொண்டவனாக மாற வேண்டும். அதாவது அன்புள்ளமும் தர்ம சிந்தனையும் உடையவனாக இருக்க வேண்டும்.
.
பிறகு நீ அந்த நிலையையும் கூடக் கடந்து சென்று தூய ஸத்-சித்-ஆனந்தமாக ஆக வேண்டும். சுடும் தன்மை இல்லாத நெருப்பாகவும், அற்புதமான அன்புள்ளவனாகவும், ஆனால் அதே சமயத்தில் பாமர மனிதனின் உணர்ச்சி வசப்பட்ட அன்பு என்ற பலவீனத்திற்கும் துன்ப உணர்ச்சிக்கும் உட்படாதவனதகவும் நீஆக வேண்டும்.
.
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும், அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால்அவன் லௌகிகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே ஆவான்.
.
நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான், நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும். ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது குன்ம வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி, அது மத வாழ்க்கை ஆகாது. துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது. அதைத் தவிர பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது? அப்படி இருப்பது பயங்கரமானது உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால். அன்றையத் தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இரு. வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்துகொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
.
தீர்க்கதரிசிகளின் ஆற்றல் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்தே நீ அறிந்ததில்லையா? அது எங்கே இருந்தது? அவர்களில் எவராவது தத்துவத்தைப் பற்றியோ, மிகவும் நுட்பமான தர்க்க நியாயங்களைப் பற்றியோ, அருமையான ஒரு நூலாவது எழுதியிருக்கிறார்களா? அவர்களில் ஒருவருமே அப்படி எதுவும் எழுதியதில்லை. ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்கள் பேசினார்கள்.
.
நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய்.புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய். உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது; வலிமையைத் தருகிறது; உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வளவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.
.
ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் லட்சியமே; மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது என்பதுதான் மேலும் கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபடமுடியும்?- இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.
.
நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால் உனக்குள்ளே இருப்பதுதான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால் அதை நாம் வெளியில் பார்க்க முடியாது-இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடந்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.
.
உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மைதான் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கு உரிய சான்றாகும்.நீ ஒரு தீர்க்கதரிசியாக இல்லாவிட்டால் கடவுளைப் பற்றிய எந்த உண்மையும்ஒரு போதும் இருந்திருக்க முடியாது. நீ கடவுளாக இல்லாவிட்டால், கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கபோவதும் இல்லை – இந்த உண்மையே வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டிய லட்சியம் என்று வேதாந்தம் சொல்லுகிறது.
.
நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆகவேண்டும். நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறார். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.
.
ஆன்மாவினால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது மதத்திற்கு மிகவும் முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உண்டென்றால், அது நான் பலவினமானவர்கள் என்று சொல்வதுதான்.
.
கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை என்று வேதாந்தம் சொல்லுகிறது. உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக்கொண்டிருக்கிறாய். மேலும், எல்லா விதமான கற்பனைப் பிதற்றல்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறாய்.
.மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளாகும். எல்லா விலங்குகளுங்கூடத் தெய்வத்தின் கோயில்கள் தாம். ஆனால் மனிதனே இவற்றுள் மேலானவன். கோவில்களில் தாஜ்மகாலைப் போல மனிதன் உயர்ந்தவன். கடவுளை நான் அத்தகைய கோவிலில் வழிபட முடியவில்லை என்றால், வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.
.
சமயசாதனையின் நுட்ப ரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை; அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வதுதான் சமயசாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிட மாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்.
.
ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன்கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும். எல்லையில்லாத சக்தி, சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி விரிந்து பரந்து கொண்டே இருக்கிறது. இதுதான் மனிதனுடைய வரலாறு சமயத்தின் வரலாறு, நாகரிகத்தின் வரலாறு, முன்னேற்றத்தின் வரலாறு ஆகிய அனைத்துமாகும்.
.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியமாகும். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது.ஒருவன் இங்கேயே இப்போதே, இன்பத்தைத் பெற வேண்டும். இப்படிபட்ட இன்பத்தைத் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.
.
எப்போதெல்லாம் எந்த ஒரு மதம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த மதத்துக்குப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். அதைப் போல ஆயிரக் கணக்கான மதப் பிரிவுகள் அதிகாரத்திற்கு வரப் போராடியபடி இருக்கலாம். ஆனால், உண்மையில் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய மதம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றும். வயிறு தான் மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவன் நடந்து செல்லும் போது வயிறு தான் முதலில் போகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுடைய தலை போகிறது, இதை நீங்கள் பார்த்ததில்லையா? மனிதனின் தலை முதலில் போகப் பல யுகங்கள் ஆகும்.
.
உங்களுடைய குழந்தைக் கனவுகள் கலைய ஆரம்பித்து பொருள்களை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க ஆரம்பிக்கும் போது, உங்களுடைய தலை போய் விடுகிறது. தலை முதலில் போக ஆரம்பிக்கும் அதே சமயத்தில் நீங்களே வெளியே போய்விடுவீர்கள்.
.
ரசாயனமும் இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்த பௌதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப் போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் ரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தைப் படிக்க வேண்டும் உன்னுடைய மனம், இதயம் அகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.
.
ஞானி பெரும்பாலும் பௌதிக விஞ்ஞானம் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தமக்குள் இருக்கும் புத்தகத்தைப் படிக்கிறார். அது பௌதிக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறான புத்தகமாகும்.
.
விஞ்ஞானியும் கூடப் பெரும்பாலும் மதத்தைப் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால் அவரும் கூடத் தவறான புத்தகத்தையே படிக்கிறார்; அதாவது அவர் தமக்கு வெளியே உள்ள புத்தகத்தைப் படிக்கிறார்.
.
நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்தத் தத்துவங்களை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றை என்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால் நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிபட்டவர்கள் இருப்பதை நீ காணலாம்.
.என் வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு நான் முயற்சி செய்தேன்; ஆனால் அதிலே ஒன்றுமில்லை என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள். ஆனால் அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும் காண்பாய்; ஒருவர் ரசாயன சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் உன்னிடம் வந்து ரசாயனத்தைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
நான் ரசாயன விஞ்ஞானியாகத் திகழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அப்படியிருந்தும் என் முயற்சியில் நான் ஒன்றும் வெற்றி பெற்றதாகப் தெரியவில்லை, எனவே ரசாயனத்தைப் பற்றிய எதையும் நான் நம்புவதில்லை என்று நீ அவரிடம் சொல்வாயானால், அவர் உன்னைத் திருப்பி, ‘எப்போது நீ முயற்சி செய்தாய்?’ என்று கேட்பார். நான் தூங்கச்செல்லும் போது ‘ஓ இரசாயனமே ! நீ என்னிடம் வா என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னிடம் வரவே இல்லை’ என்று நீ சொல்வாய்.
ரசாயன விஞ்ஞானி உன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, ‘அப்பனே! ரசாயனத்தைப் பற்றித்தெரிந்து கொள்வதற்கு அது வழியே அல்ல. நீ ரசாயனப் பரிசோதனைச் சாலைக்குச் சென்று, எல்லா வகையான அமிலங்களையும் காரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அவ்வப்போது உன் கைகளைச் சுட்டுப் பொசுக்கிக் கொள்ளவில்லை ? நீ அப்படிச் செய்திருந்தால் இரசாயனத்தைப் பற்றிய ஞானம் உனக்கு வந்திருக்கும்’ என்று சொல்வார்.
மதம் சம்பந்தமாக அப்படிப்பட்ட பெரிய முயற்சியை நீ எடுத்துக்கொள்கிறாயா ? ஒவ்வொரு துறைக்கும் அதைக் கற்பதற்கென்று ஒரு தனி வழிமுறை இருக்கிறது. அத்தகைய முறையில்தான் மதத்தையும் கற்க வேண்டும்.
.
சுவாமி விவேகானந்தர் 1897-ல் சொன்னது
No comments:
Post a Comment