Tuesday, November 26, 2013

பாற்கடலில் தோன்றிய லட்சுமி

ஒரு தடவை நாரத முனிவர் மகாவிஷ்ணுவை சந்தித்து ஆசி பெற சென்றார். அப்போது அவர் மகாவிஷ்ணுவை நோக்கி. ``பகவானே! தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமான மகாலட்சுமி பூவுலகில் பிறக்க வேண்டிய காரணம் என்ன?'' என கேட்டார்.

அதற்கு பகவான் நாராயணர், ``நாரதரே! ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரன் தம்முடைய பதவிச் செருக்கால் ஆணவம் பிடித்தவனாக வேறு நல்ல சிந்தனைகள் ஏதும் இல்லாமல் மதுவருந்தி பூவுலக பெண்களுடன் உல்லாசமாக பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.

ஒருதடவை இந்திரன் தனது யானை மீதேறி பவனி வந்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் எதிரே வந்து கொண்டிருந்தார். தேவேந்திரனைக் கண்டு மகிழ்ந்த துர்வாசர் அவனை ஆசிர்வதித்து எம்மிடமிருந்து பெற்றுச் சென்ற பாரிஜாத மலரை அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

என்னுடைய மகிமையினால் சிறப்புப் பெற்றிருந்த பாரிஜாத மலரின் பெருமையை உணராத இந்திரன் யானையின் தலை மீது அதனை அலட்சியமாக வைக்க, அது நழுவி யானையின் காலடியில் விழுந்தது. யானையோ பாரிஜாத மலரின் பெருமையை உணராது தன் காலின் கீழ் போட்டு மிதித்து நசுக்கிவிட்டது.

அடுத்த கணமே இந்திரன் தன்னுடைய செல்வச் செழுமையையும் பதவிச் சிறப்பையும் தனக்கிருந்த சக்திகளையும் இழந்து பரிதாபமாக தரையில் விழுந்தான். அந்தக் காட்சியைக் கண்ட துர்வாசர், `பரந்தாமனின் பெருமையை உணராது இழிவு படுத்தும் முறையில் செயல்பட்டதால் லட்சுமிதேவியின் அருட்கடாட்சம் அவரிடம் இல்லாமல் போகக் கடவது' என சபித்துவிட்டார்.

லட்சுமிதேவியின் அருளை இழந்த காரணத்தால் இந்திரன் வெறும் சாமானிய மனிதனாக கதி அற்று நின்றான். இந்திரன் பலவாறு துர்வாசரை வேண்டி மகாலட்சுமியின் நற்கருணை மீண்டும் தமக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டினான். `காலம் வரும்போது அவனுடைய சாபம் விமோசனமாகும்' என துர்வாசர் சொல்லிச் சென்றார்.

தேவலோகத்தில் தேவேந்திரனுடைய ஆட்சியும் சக்தியும் நிலைகுலைந்து விட்ட காரணத்தால் அரக்கர்களுடைய ஆதிக்கம் தேவலோகத்தில் அதிகரிக்க, அவர்கள் தேவர்களை கொடுமை செய்தனர்.

தேவேந்திரனும் தேவர்களும் நிலைகுலைந்து வேதனைப்பட்ட நிலையில் என்னிடம் ஓடிவந்து, அரக்கர்களின் கொடுமைகளில் இருந்து தங்களைக் காத்தருள லட்சுமியின் திருவருள் தங்களுக்கு மீண்டும் கிடைக்க அருள்பாலிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

``அவர்களுக்கு ஆறுதல் கூறிய நாராயணர், நீங்கள் எல்லாம் துர்வாச முனிவரைச் சந்தித்து அசுரர்களுடன் சமரசமாகப் போக விரும்புவதாகக் கூறி திருப்பாற்கடலைக் கடையுங்கள்.'' என்றார். அதன்படி பாற்கடல் கடையப்பட்டது. பாற்கடலில் பிறந்த லட்சுமியுடன் பல பொருள்களும் தேவதைகளும் வெளிப்பட்டன.

முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டு அதை பரமசிவன் உட்கொண்டு எல்லோரையும் காப்பாற்றினார். பின்னர் காமதேனு, உச்சஸ்சிவஸ் என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கௌஸ்துபம் என்ற மணி, மது இவை உண்டாயின. காமதேனுவை, வேள்வி செய்யும் ரிஷிகள் எடுத்துக் கொண்டார்கள்.

ஐராவதமும், உச்சஸ்சிரவசும் தேவேந்திரனுடைய உடைமையாயின. கள்ளை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். கவுஸ்துப மணியை மகாவிஷ்ணு எடுத்துக் கொண்டு மார்பில் அணிந்தார். பின்னர் மூதேவி வெளிப்பட்டாள். இதன் பின்னே லட்சுமிதேவி வெளிவந்தாள். கையில் மாலையுடன் இருந்த திருமகள் நான்கு பக்கமும் பார்த்தாள்.

எல்லாம் நிறைந்த ஒருவனை அடைய வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனிடமே தான் எப்போதும் இருக்க முடியும் என்று கருதி தேடினாள். விஷ்ணுவைத் தவிர ஏனையோர் ஒவ்வொருவரிடமும் ஒரு குறை இருப்பதைப் பார்த்தாள். சிலரிடம் பூர்ணமான தபஸ் இருந்தது. ஆனால் அவர்கள் கோபத்தை ஜெயிக்கவில்லை.

சிலரிடம் அளவிட முடியாத அறிவு இருந்தது. ஆனால் பற்றற்ற நிலையை அடையவில்லை. ஓரிடத்தில் ஐசுவரியம் நிறைந்திருந்தது. ஆனால் அவர் பிறரை அண்டியே வாழ்ந்தார். ஓரிடத்தில் அறநெறி இருந்தது. ஆனால் அருள் இல்லை. ஓரிடத்தில் தியாகம் இருந்தது.

ஆனால் அது விடுதலையைக் கொடுக்கவில்லை. மகாவிஷ்ணு ஒருவர்தான் எல்லா வழிகளிலும் சிறந்தவர். அவரே தனக்கு ஏற்றவர் என்று லட்சுமி தீர்மானித்தாள். ஆனால் இந்த விஷ்ணு லட்சுமியை அபேட்சிப்பவர்களிடம் சேருவதில்லை.

``பாணிக்கிரகண காலத்தில் ஒரு புது பிரச்சினை கிளம்பியது. எனக்கு முன் பிறந்த அலட்சுமி என்ற மூத்த தேவிக்கு திருமணம் ஆகாத போது தங்கையாகிய எனக்கு எப்படி கல்யாணம் நடப்பது'' என்றாள் லட்சுமிதேவி. மிக நியாயமான கேள்வி. ``மூத்த (மூதே) தேவியை யாரும் மணம் புரிய முன்வரவில்லை.

இந்த சங்கட நிலையை உயர்ந்த உத்தாலகர் என்ற மகரிஷி மூதேவியை மணக்க முன்வந்தார். தீயதையும் ஏற்கும் தீரத்தை உத்தாலகர் விளக்கிக் காட்டினார். திருமணம் செய்து கொள்ளுமுன் அலட்சுமியை பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்கிற தத்துவம் இதிலடங்கியுள்ளது.

லட்சுமி - மகாவிஷ்ணு திருமணம் நடந்தேறியது. திருமணம் என்பது ஒரு சுபமான காரியம். அதை செய்து கொண்டால் தான் ஆண் பெண்களுக்கு மங்களம் உண்டாகும் என்பதை எடுத்துக்காட்டவே மகாவிஷ்ணுவே திருமணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment