Monday, November 11, 2013

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களுள் சிறப்புமிக்கது கந்தசஷ்டி. சூரனை முருகப்பெருமான் வதம் செய்த நாளே சஷ்டியாகும். இந்த திருவிழா முருகன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அனைத்து தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதம் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரை விரதம் இருந்து, சஷ்டியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவேற்றினால் ஆயிரமாயிரம் ஆண்டு தவம் செய்த பலனை பெறலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து எழுந்த 6 சுடர்கள் 6 குழந்தைகளாக மாறின.

அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் 6 பேர் வளர்த்தனர். அவர்கள் வளர்த்த 6 குழந்தைகளையும் பராசக்தி வாரி அணைத்து ஒரே குழந்தையாக்கினார். அந்த குழந்தை தான் முருகப்பெருமான்.  இவர், பெண் கலப்பு இல்லாமல் சிவபெருமானின் சுத்த ஆண் சக்தியில் இருந்து தோன்றினார்.

அதனால் தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானை செந்தில் நகர் வாழும் ஆண்மைக்காரர் என்று போற்றி பாடினார். இதேபோன்று சக்தியில் பிறந்தவன்தான் சூரபத்மன். யாராலும் வெல்ல முடியாது என்று வரம்பெற்ற அவன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள், சூரபத்மனிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு பராசக்தியிடம் முறையிட்டனர்.

அதை ஏற்று பராசக்தி, முருகப் பெருமானுக்கு வேல் வழங்கி போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தார். 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான். அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும் இங்கும் அசைத்தபடி வருவான்.

சூரன்முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள். சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகன் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.

இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும். கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.

போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும். இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும்.

அது சூரனை சென்று தாக்கும். சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.

இதைத் தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்கமுகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள். அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான். நான்காவதாக மாமரமும் சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும். மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும்.

அத்துடன் சூரசம்ஹாரம் முடியும். இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும். சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருப்பான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.

போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசூரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள். இந்த போரின்போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான்.

அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார். கடைசியாக மாமரமாக தோன்றும் சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார்.

No comments:

Post a Comment