Sunday, May 4, 2014

வசிய திருநீறு...

வசிய திருநீறு...
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவை...களை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின் "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.

No comments:

Post a Comment