பக்திக்கு எதுவும் தடையல்ல
பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையாக இருக்க முடியாது என்பதை, உலகிற்கு உணர்த்துகிறது, திருநாளைப்போவார் புராணம்.
திருநாளைப்போவார் – பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாலும், குலத்தொழிலான மாட்டுத்தோல், நரம்பு ஆகியவற்றையும் சேகரிப்பார். ஆனால், அவர், மற்றவர்களைப் போல், இவற்றை விற்று, பணம் சம்பாதிக்கவில்லை. கோவில்களுக்கு தேவையான பேரிகை, யாழ் போன்ற வாத்தியங்களை செய்ய கொடுத்து விடுவார். மிருகமாய் பிறந்த
அவை, மரணத்திற்கு பின், இறைப்பணிக்கு செல்லும் பாக்கியம், நந்தனார் மூலம் கிடைத்தது.
இவருக்கு, சிதம்பரம் சென்று, நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது, தணியாத ஏக்கமாய் இருந்தது. சிதம்பரத்திற்கு செல்ல நினைக்கும் போதெல்லாம், இவரது எஜமானர் ஏதாவது வேலையைக் கொடுத்து விடுவார். அதனால், "நாளை போகலாம்… நாளை போகலாம்’ என்று, தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால், "நாளைப் போவார்’ என்றே பெயர் வந்து விட்டது. மரியாதை நிமித்தமாக, "திரு’ சேர்த்து, திருநாளைப்போவார் ஆகி விட்டார்.
சிதம்பரம் செல்ல இயலாத நிலையில், தன் கிராமமான ஆதனூரின் அருகிலுள்ள, திருப்புங்கூரில் உள்ள, சிவலோகநாதரை தரிசித்து வரலாமே எனக் கிளம்பினார். அக்காலத்தில், தாழ்த்தப்பட்டோர், கோவில் உள்ளே செல்ல அனுமதியில்லை. எனவே, கோவிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டிப் பார்த்தார். ஆனால், சிவனை, நந்தி மறைத்தது. அதனால், வருத்தமடைந்த நந்தனார், சிவனிடம் வேண்ட, நந்தியை விலகியிருக்கச் சொன்னார் சிவன். நந்தி விலக, சிவதரிசனம் கிடைத்தது.
இவ்விடத்தில், சிலர், ஒரு சந்தேகத்தை கிளப்புவர். "சிவன் ஏன் நந்தியை விலகச் சொல்ல வேண்டும்! நந்தனாரை நேரடியாக உள்ளே அழைத்திருக்கலாமே… அவரும் ஜாதி வித்தியாசம் பார்த்தாரா…’ என்று.
இதற்கான காரணம், பின்னால் வருகிறது.
ஒருவழியாக, நந்தனார், சிதம்பரத்துக்கு கிளம்பி விட்டார். பொன்னம்பலத்தில் நடனமாடும், நடராஜரைத் தரிசிக்க பெரும் ஆசை. ஆனால், ஜாதித் தீ அவரை உ<ள்ளே அனுமதிக்கவில்லை. அவ்வூர் எல்லையிலேயே காத்துக் கிடந்தார்; மனம் உருகி அழுதார். அன்றிரவு, தில்லை வாழ் அந்தணர்கள் கனவில் தோன்றிய நடராஜப் பெருமான், "என் பக்தன் நந்தன், என்னைக் காணும் தகுதி பெற்றவன். அவனை தீயில் மூழ்கி எழச் செய்யுங்கள். பூணூலும், ருத்ராட்சமும் கொண்டு அதிலிருந்து எழுந்து வருவான். அவனை உரிய மரியாதையுடன் அழைத்து வாருங்கள்…’ என்றார்.
அந்தணர்களும், நந்தனார் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, தங்கள் கனவில், நடராஜர் உரைத்ததைச் சொன்னார்கள். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தீ மூட்டப்பட்டது. அக்னி குண்டத்தை வலம் வந்த நந்தனார், அதில் மூழ்கி எழுந்தார். பூணூலும், ருத்ராட்சமும் அணிந்து, உடலெங்கும் திருநீறு பூசி எழுந்து வந்த அவரை, அந்தணர்கள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜரின் முன்னால் சென்ற நந்தனார், அப்படியே அவரோடு, ஜோதியாக ஐக்கியமாகி விட்டார். அவரது குருபூஜை புரட்டாசி ரோகிணி நட்சத்திரத்தில் நடக்கிறது.
பார்த்தீர்களா… சிவன், நந்தனாரை திருப்புங்கூரிலேயே, கோவிலுக்குள் அழைத் திருந்தால், அது பெருமைபட பேசப்பட்டிருக்காது. ஊரறிய, அந்தணர்கள் புடைசூழ, சிவபக்தனுக்கு, செந்தணலும், குளிரும் என்பதை நிரூபிக்க, ஈசன், இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அது மட்டுமல்ல, பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையல்ல என்பதையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்.
இன்றும் கூட, இறைச்சிக்கடை வைத்திருப்போரிடையே ஆதங்கம் உண்டு. தங்களின் பாவமூட்டை ஏறிக்கொண்டே இருக்கிறதோ என்று! இத்தொழில், உங்களுக்கு, இறைவனால் அருளப்பட்டது. அதில், தர்மத்தை கடைபிடித்தால் போதும்; பாவம் ஏற்படாது.
நந்தனார் சரித்திரம் கேட்போருக்கு, வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பின், கைலாயம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும் என்பர். இவற்றை பெற்ற பெருமையோடு, சிவன் கோவில்களில், நாயன்மார் சன்னதியில் வீற்றிருக்கும், திருநாளைப்போவார் என்னும் நந்தனாரை தரிசித்து வருவோம்.
No comments:
Post a Comment