Monday, December 8, 2014

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

மஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது" என்பது முது மொழி. நிறைய கதைகள் செவி வழியாய் அடுத்தடுத்த தலை முறைக்கு அனுப்ப படுகின்றன. அப்படி என்னை வந்தடைந்த கதை இங்கே.
அந்த நாளில் பாண்டவர் அனைவரும் கானகத்தில் உள்ளனர். அது பாண்டவர்களின் தந்தை பாண்டுவின் இறுதி கணங்கள். பாண்டுவுக்கு தான் மறைந்த பின் இந்த உலகில் தன் மைந்தர்கள் எப்படி வாழ போகிறார்கள் என்கிற கவலை. அவரது மனம் தீர யோசித்தது. தன் புதல்வர்களை அருகே அழைத்த அவர், தன் மறைவுக்கு பின் அவரது உடலை உண்டுவிடுமாறு பணித்தார். அப்படி செய்தால் அவர்கட்கு உலகில் எந்த தீங்கும் உருவாகாது என்பது அவர் கணிப்பு.
பாண்டுவும் மறைந்தார். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணன், பாண்டவர்களை தடுத்து நர மாமிசம் புசிப்பது மனிதர்களின் இயல்பு அல்ல என விளக்கினார். பின்பு பாண்டுவின் உடலை எரித்திட பாண்டவர்களை திசைகொருவராய் அனுப்பி விறகு முதலான பொருட்களை திரட்ட பணித்தார்.
பாண்டவர்களும் கண்ணனும் விறகு எடுத்து வர சென்றனர். ஆனால் சகாதேவனுக்கு ஒரு கேள்வி குழவியாய் குடைந்தது. அவனுக்கு கால காலமாய் மனிதனை தொடரும் முதுமொழி நினைவுக்கு வந்தது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அல்லவா என்பது அவன் எண்ணம். அதை அறிய தந்தையின் உடல் அருகே சென்றான். முதலில் தென்பட்டது தந்தையின் பெருவிரல். ஒரே கடியில் பெருவிரல் வாய்க்குள் அகப்பட்டது. பெருவிரல் உண்டபின், சகாதேவனுக்கு முக்காலமும் அறிகிற அறிய ஞானம் வந்தது.
அவனால் அனைத்து காலமும் அறிய இயலும். ஏறக்குறைய கடவுளால் மட்டுமே முடித்த விஷயம் மனிதனுக்கு வாய்த்த நிமிடம் அது.
அதே தருணத்தில் கண்ணனும் அவ்விடம் நிறைய கோபமாய் தோன்றினார். தோன்றிய கண்ணன் என்ன காரியம் செய்தாய் என திட்டியபடி நீ தெரிந்தவற்றை மற்றவர்க்கு சொன்னால், உன் தலை சிதறிவிடும் என சபித்தான். பதிலுக்கு சகாதேவன் எங்கள் ஐந்து பேரையும் காக்க தவறினால் உன் தலை சிதறி விடும் என சபித்தான்.
இருவரின் எண்ணமும் நிலை கொள்கின்றன. பின் நாட்களில் கண்ணனே ஐவரையும் போரில் காக்கிறான். முதுமையில் முதலில் உலகை விடுபவனும் அவனே. சாஸ்திரத்தில் கெட்டிக்காரன் சகாதேவன் எனும் முதுமொழி முகிழ்த்து வந்தது இதன் தொடர்ச்சி தானோ?

No comments:

Post a Comment