Friday, April 22, 2016

சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்

சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்
ஒருவரின் பாப புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாப புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.
அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால் தனியாக செய்யமுடியவில்லை ஆகவே ஒரு உதவியாளர் தேவை என்று விண்ணப்பித்துக்கொண்டார்.
அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி இருக்கும் இடம் நோக்கி சென்றார் . சக்தி இல்லையேல் ஏது சிவம்?. அப்பொழுது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வதியும் தான் தங்க தாம்பாளத்தில் எழுதி வைத்திருந்த சித்திரத்தை பார்த்து வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.
சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் ( குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.
இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாப புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது.
அறியாமல் செய்த பாபங்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று விசனப்பட்டு அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.
.
சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.
சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் நாளை வரும் சித்ரா பவுர்ணமி (21.4.2016 வியாழக்கிழமை) அன்று சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.
ஸ்ரீ சித்ரகுப்த த்யான ஸ்லோகம் :
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகளீ பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்.
ஸ்ரீ சித்ரகுப்த காயத்ரி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயா



சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்
பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.
சித்ரா பௌர்ணமி :
சித்திரை நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால், இத்தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்ரா பௌர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனை பித்ருகாரகன் என்றும், சந்திரனை மாத்ருகாரகன் என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்.
சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வத்திருக்கின்றார்கள். அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி வரலாறு :
தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.
சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.
தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.
இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர்.
காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என அழைக்கப்படுகிறார்.

இத்தகைய சிறப்புகளை உடைய சித்ரா பௌர்ணமி நாளை (21.04.2016) அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றிய தகவல்களை நாளைய ழேவகைiஉயவழைn வாயிலாக

No comments:

Post a Comment