Saturday, April 9, 2016

அன்னபூரணியின் அன்ன நியதி

அன்னபூரணியின் அன்ன நியதி
அன்ன நியதி என்றால் உணவுமுறை சார்ந்த நெறிமுறைகள் எனப் பொருள்படும். அவை:
1) உணவை வீணாக்க கூடாது - பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
2) உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் - நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம். விரத நாட்களில் காக்கைக்கு உணவளிப்பர். பறவைகளிலே காக்கைகளிடம் ”பகிர்ந்து உண்ணும் குணம்” பரவலாக உள்ளது. ஆகவே காக்கைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக அவற்றிடமிருந்து பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நாம் பாடமாக படித்துக் கொள்ளலாம்.
3) அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் ’அன்போடு’ நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை. அன்போடு கொடுக்கப்படும் உணவு என்பதால் அது கண்டிப்பாக ஆரோக்கியமானதாக தான் இருக்கும். எனவே, தாராளமாக அதை உண்ணலாம்.
4) ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.
5) புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். ஆயினும் எல்லா இந்துக்களும் ஆன்மீகப் பயிற்சியில் முழுமையாக ஈடுபாடு காட்டுவதில்லை. சமூக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இந்துக்கள் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களிலாவது விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

No comments:

Post a Comment