Thursday, May 5, 2016

நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு.

நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் நிலவும் என்று எண்ணுவதால் அந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக எண்ணி உபயோகிக்கிறார்கள். புராணங்களின்படி அவள் மஹாலஷ்மியின் மூத்த சகோதரி ஆவார். லஷ்மி தேவியைப் போல அழகான உருவில் இல்லாமல் அமங்கலமான உருவில் இருந்தாலும் உலகில் உள்ள அறுபத்தி நான்கு தரித்திரங்களை விலக்கி வாழ்வில் வசந்தம் ஏற்பட வழி தருபவள் அவளேயாகும். மூதேவி என ஒருவரை திட்டுவதின் மூலம் அவளை நம்மை அறியாமல் ஆராதிக்கின்றோம் என்பதே உண்மையாகும். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி யார்?
வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தீய மற்றும் நல்ல குணங்களை எடுத்துக் காட்டி, அவற்றின் பலாபலன்களை உலகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மஹாவிஷ்ணு மூதேவியைப் படைத்தாராம். மூதேவியை பத்தாம் நூற்றாண்டுவரை பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் மக்கள் வணங்கி வந்துள்ளார்கள். முக்கியமாக தென் இந்தியாவின் பல ஆலயங்களிலும் அவளை போற்றி ஆராதித்து உள்ளார்கள். அவளை மூதேவி என தென் இந்தியாவிலும் ஜேஷ்ட தேவி என வட இந்தியாவிலும் அழைக்கின்றார்கள்.
காஞ்சி ஆலயத்தில் மூதேவி எனும்
ஜேஷ்ட தேவியின் சிலை
பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் மன்னர்கள் கட்டிய பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு தனி சன்னதிகள் அமைத்து இருந்தார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள திருச்சி திருவானைக்காவல் ஆலயத்திலும் கூட அவள் வழிபடப்பட்டு வந்துள்ளது தெரிகின்றது. மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி லஷ்மி தேவிக்கு முன்பாக அவதரித்து அவளுக்கு மூத்தவளானவளாக இருந்துள்ளார். லஷ்மி தேவி அவதரிக்கும் முன் அவள் வெளிப்பட்டதினால் மூத்தவள் என ஆகி, மூத்த தேவி அதாவது முதலில் வந்த தேவி என்பதாக இருந்த சொல் மெல்ல மெல்ல வாய்மொழிப் பேச்சில் மூதேவி என மருவி உள்ளது. அதே போல சமுஸ்கிருத மொழியிலும் ஜேஷ்ட என்றால் மூத்த என அர்த்தம் இருப்பதினால் லஷ்மி தேவிக்கு மூத்தவளான மூதேவியை மூத்த தேவி என்ற பொருளில் வடமொழியில் ஜேஷ்ட தேவி என அழைக்கின்றார்கள். மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவியின் வரலாற்றுக் கதை கீழே உள்ளது.
அவள் அவதாரம் குறித்து பல கதைகள் உலவுகின்றன. பத்மபுராணக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது முதலில் அதில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை உலகின் நன்மையைக் கருதி சிவபெருமான் முழுங்கியவுடன் அடுத்து அதில் இருந்து அமங்கலமான உருவில் ஒரு பெண் வெளி வந்தாள். அவளைத் தொடர்ந்து லஷ்மி தேவியும், பிற தெய்வங்களும் வெளிவந்தார்கள்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி குறித்த கிராமிய வாய் மொழிக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தைக் எடுத்தபோது அதில் இருந்து முதலில் வெளிவந்த அமங்கலமான தோற்றம் கொண்டப் பெண் யார் என்று தேவர்கள் விஷ்ணுவைக் கேட்டபோது அவர் அப்படி அப்படி வெளி வந்தவள் லஷ்மியின் அவதாரமே என்றும், அவள் முதலில் வெளி வந்ததினால் அவள் அவள் அனைத்து பெண் தெய்வங்களுக்கும் மூத்த சகோதரி ஆவாள் என்றும் அவளை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக தாம் படைத்ததாகவும் கூறினார்.
பெண் தெய்வங்களில் முதன்மையானவள் பார்வதி தேவி என்பதினால், முதலில் வெளி வந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அனைத்து பெண் தெய்வங்களுக்கும் மூத்த சகோதரி ஆவாள் என்று விஷ்ணு கூறியதைக் கேட்டவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி நிச்சயமாக பார்வதியின் அவதாரமாகவே இருக்க வேண்டும் என நம்பினார்கள்.
அதன் பின் நடைபெற்ற நிகழ்சிகளுக்குப் பின்னர் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்ததும், அதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூறி சர்வேஸ்வரனான சிவபெருமானையும், தம்மைக் காத்த விஷ்ணுவையும் வணங்கித் துதித்தார்கள். அப்போது அங்கிருந்த தேவர்களின் சார்பாக நாரத முனிவர் விஷ்ணுவிடம் அவர் மணக்க உள்ளது லஷ்மிகரமான லஷ்மி தேவிதான் எனும்போது முதலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை ஏன் படைத்தார் எனக் கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்களிடம் விஷ்ணு பகவான் கூறலானார் :
'என்னுடன் வெளிவந்த பிரும்மா உலகைப் படைத்தபோது சில நியமங்களுக்கு உட்பட்டே அவரால் அதை படைக்க வேண்டி இருந்தது. முதலில் படைக்கப்பட்ட சத்ய யுகத்தில் மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் மற்றும் மரங்கள் போன்றவை படைக்கப்பட்டன. மனிதர்களில் அனைத்து உயிரினங்களும் நல்ல குணங்களைக் கொண்டவையாக இருக்குமாறு படைக்கப்பட்டு விட்டால் மரணம் அடைந்ததும் அவை அனைத்துமே சொர்கத்துக்கு சென்று விடும். சொர்கத்துக்கு செல்லும் ஆத்மாக்கள் மறு பிறப்பு எடுப்பது இல்லை. ஆகவே படைக்கப்பட்ட அனைத்துமே சொர்கத்துக்கு சென்று விட்டால் அவை அடுத்து வர உள்ள யுகத்துக்கு செல்ல முடியாமல் அந்த யுகங்கள் படைக்கப்பட்டத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இரவும் பகலும் மாறி மாறி வருவது போல- தீமைகளும், நன்மைகளும் சேர்ந்தே வந்து கொண்டு இருந்தால்தான் உயிரினங்களில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு பிரகிதியின் தத்துவம் என்ன என்பதும், நன்மை தீமை என்பது என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதெல்லாம் புரியும். அந்த நிலை நிலவினால்தான் அடுத்தடுத்து வர உள்ள யுகங்களின் தத்துவம் மக்களுக்கும் புரியும் என்பதை மனதில் கொண்டே மனிதப் பிறவிகளுக்கு நன்மை மற்றும் தீமைகளை எடுத்துக் காட்டும் இரு அவதாரங்களை நான் உருவாக்க வேண்டி இருந்தது.
பிரும்மாவினால் முதலில் நான்கு யுகங்கள் படைக்கப்பட்டன. ஒவ்வொரு யுகத்திலும் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் பல்வேறு ஜீவ ராசிகள் வாழ வேண்டும் என்பது விதியாயிற்று. படைக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் மற்றும் மரங்கள் என அனைத்திலும் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப உயிர்கள் தரப்பட்டு முதல் யுகமான சத்ய யுகத்தில் பிரும்மாவினால் படைக்கப்பட்டன. அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அந்த உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கைக் காலம் முடிந்ததும் அடுத்தடுத்த யுகங்களில் பிறவி எடுக்கச் செல்லும் என்பதும் நியதி ஆகியது.
பரமாத்மனின் நியதியின்படி முதல் யுகமான சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமே நிரந்தரமானது. அடுத்தடுத்து வரும் யுகங்களில் பிரும்மாவினால் புதிய உயிரினங்களைப் படைக்க முடியாது. சத்ய யுகத்தில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களே அடுத்தடுத்த யுகங்களில் அவையவை செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ரூபங்களில் நுழைகின்றன. ஆனால் சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட அதே அளவிலான எண்ணிக்கையில் அந்த உயிர்கள் அடுத்தடுத்த யுகங்களில் பிறவி எடுக்க முடியாது. அவை அனைத்தும் அவை செய்த நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அதே உயிரினமாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ வெவ்வேறு தோற்றங்களில் பிறவி எடுக்கும். அத்தனை ஏன், அவற்றில் சிலவற்றுக்கு அடுத்த யுகத்திலேயே பிறவி கிடைக்காமலும் போக வாய்ப்புண்டு. இரண்டு யுகத்துக்குப் பிறகு மூன்றாம் யுகத்தில் கூட அவை பிறப்பு எடுக்க காத்திருக்க வேண்டி இருக்கலாம்.
முதலில் படைக்கப்பட்ட நான்கு யுகங்களில் முதன்மையான சத்யயுகத்தில் மனிதர்கள், விலங்குகள், நீ வாழ்வன, செடி கொடிகள் மற்றும் மரங்கள் என பலவற்றையும் அதனதற்கு உரிய தக்க உயிரினத்துடன் பிரும்மா படைத்தார். படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால அளவிலான ஆயுள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. அந்த உயிரினங்களின் ஆயுள் முடிந்தவுடன் அவை மீண்டும் பிறவா நிலைக்கு சென்று விடும். ஒருவேளை அவை செய்யும் நல்ல செயல்களினால் அவற்றின் மீண்டும் பிறவாமை எனும் நிலையை (சொர்கத்தை அடைந்துவிட்ட நிலை) சத்ய யுகத்திலேயே அடைந்து விட்டால் அவை அடுத்த மூன்று யுகங்களும் முடிந்து மீண்டும் சத்ய யுகம் படைக்கப்படும்போதுதான் அங்கு புதிய பிறவி எடுக்கும். அதுவரை அந்த உயிரினங்கள் அடுத்தடுத்து வர உள்ள மூன்று யுகத்திலும் எந்த ரூபத்திலும் பிறவி எடுக்காமல் சொர்க்கத்தில் தங்கி இருக்கும். ஆனால் படைக்கப்பட்ட அனைத்திற்குமே மீண்டும் பிறவாமை என்ற பாக்கியம் கிடைக்காது. அவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே அந்த புண்ணியம் கிடைக்கும். அந்த கணக்கு உங்களுக்கு புரியாது. மீண்டும் புதிய சத்ய யுகம் படைக்கப்படும்போது முந்தைய சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட விகிதாரசாரத்தின்படி உயிரினங்கள் படைக்கப்பட மாட்டாது. அது வேறுபட்டு இருக்கும். இது பரமாத்மனின் நியதியாகும். ஆகவே பிறவா நிலை எடுக்க வேண்டும் எனில் நிறைய நல்ல செயல்களை புரிய வேண்டும். ஆகவேதான் தீயவை, நல்லவை எது என்பதை நன்கு புரிந்து கொண்டு நல்லவற்றைக் கடைபிடிக்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இரண்டு தன்மைகளைக் கொண்ட தெய்வீகங்களைப் படைத்தேன்.
விஷ்ணு கூறிக் கொண்டிருந்ததை அனைவரும் மெளனமாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். 'அதனால்தான் என் மனைவி லஷ்மியின் உருவை இரண்டாக்கி தீமைகளை எடுத்துக் காட்டும் ஒரு அவதாரத்தை முதலில் வெளிப்பட வைத்தேன். அந்த அவதாரமான மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தீமைகளின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு தீமைகளை செய்பவர்களுக்கு தீமைகளின் விளைவுகளை எடுத்துக் காட்டி அவர்களை நல் வழியில் செல்ல வழி வகுக்க வேண்டும் என்றே தீமைகளையும் தரித்திரத்தையும் தருபவளாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருப்பாள் என்ற நோக்கத்தில் அவளை வெளிவர வைத்தேன். ஆகவே லஷ்மியே இரண்டு உருவங்களில் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றாள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வெளியில் அமங்கலமாகத் தெரிந்தாலும், அவளை மக்கள் முதலில் வெறுத்தாலும் காலப்போக்கில் அவளே நன்மைக்கான பாதையை அமைப்பதற்காக தமக்கு துன்பங்களைத் தந்து நன்மை என்பது என்ன என்பதை உணர வழி வகுக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டு அவளை ஆராதிக்கத் துவங்குவார்கள். அவளிடம் சரண் அடைவார்கள். இப்படியாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தன்னிடம் சரண் அடைந்தவர்களை திருத்தி, அப்படி திருந்தியவர்களை மன அமைதியும் லஷ்மி கடாட்சமும் பெற தன்னுடைய சகோதரியான லஷ்மியிடம் அனுப்புகின்றாள்.
தீமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்களிடம் இருந்து மூதேவி எனும் ஜேஷ்ட தேவி விலகிச் செல்ல மாட்டாள். அவர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவர்கள் தாம் செய்யும் தவறுகளை புரிந்து கொண்டு நல்வழியில் செல்லும் அளவிற்கான மனமாற்றம் பெறும்வரை அவர்களுக்கு ஓயாமல் தொல்லைகளையும் கஷ்டங்களையும் தந்து கொண்டே இருப்பாள். ஆகவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவி எதற்காக படைக்கப்பட்டாள் என்பதைக் குறித்து மனக் குழப்பம் கொள்வது தேவை இல்லாதது'.
காஷ்மீர் தூம்ர தேவி ஆலய புராணக் கதையின்படி பரப்பிரும்மன் மூன்று தேவிகளைப் படைத்தவுடன் அமிர்தத்தை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து அனைத்து தேவிகளின் சக்தியையும் உள்ளடக்கி புகை மண்டலம் போலக் காட்சி தந்த நுரையில் இருந்து பயங்கரமாக தோற்றம் கொண்ட ஒரு பெண் முதலில் வெளிவர சிவபெருமானால் அவள் பரிவார தேவதையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாள். காளியைப் போலக் காட்சி தந்து கரிய நிறத்தில் வெளி வந்ததினால் அவளை தூம்ர காளி என அழைத்தார்கள் (காளி என்றால் கறுப்பி மற்றும் தூம் என்றால் புகை மண்டலம் என்றும் பொருள் ஆகும்). அதுவே பின்னர் தூம்ர காளி என உருமாறியது. அவள் புகை மண்டலத்தில் இருந்து வெளி வந்து அந்த புகை மண்டலத்தையே தன்னுள் இழுத்துக் கொள்ள புகை மண்டலம் அப்படியே மறைந்து போய் நீல வானமும், பனி போன்ற வெண்மையான கடலும் தெளிவாகத் தெரிந்தது.
அப்போது அவள் அவதாரம் குறித்துக் கூறிய விஷ்ணு பகவான் 'அனைவருக்கும் முன்னால் இந்தக் கடலுக்குள் இருந்த அமிர்தத்தில் இருந்து புகை மண்டலத்தில் இருந்து வெளி வந்துள்ள இவளை தூம்ர காளி என அழைப்பார்கள். இவளுக்கு அழிவில்லை. முதலில் புகை மண்டலமாக எதுவுமே கண்களுக்கு தெரியாமல் இருந்த நிலை மறைந்து இவள் வெளி வந்ததும் நிர்மலமாக அந்த இடம் காட்சி தந்தது என்பதின் மூலம் இவள் இருட்டை விளக்கி வெளிச்சத்தைத் தர வந்துள்ளவள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'. விஷ்ணு பகவான் தூம்ர காளியை அழிவற்றவள் என்று கூறியதின் அர்த்தம் என்ன எனில் அந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வேறு யாரும் அல்ல, ஆதியும், அந்தமும் இல்லாத ஆதி பராசக்தியின் அவதாரமே என அனைவரும் உணர்ந்தார்கள் .
வடநாட்டில் பல இடங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிதான் அலக்ஷ்மியும் என்று கூறி அவளை வணங்குவார்கள். அங்கு சில இடங்களில் நிலவும் புராணக் கதைகளில் அலக்ஷ்மி பார்வதிக்கு காவல் தேவதை என்று கூறப்பட்டு உள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள திருவானைக்கோவில் ஆலயத்தில் ஜேஷ்ட தேவிக்கு தனி சன்னதி உள்ளது. அந்த காலத்தில் திருவானைக் கோவில் என்பது ஜம்பக மரங்கள் சூழ்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்குதான் பார்வதியும் அப்போது தவத்தில் அமர்ந்து இருந்தாள். அவள் தவம் இருந்த இடத்தின் அருகிலேயே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் அவளுக்குக் காவலாக இருந்தாளாம். இதனால் பார்வதிக்கு காவல் தேவி எனக் கருதப்பட்ட அலஷ்மி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருவரும் இரு பெயர்களில் அழைக்கப்படும் ஒருவரே ஆகும்.
ராவணன் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின்
முன் நின்று சக்தியை இழந்தான்
மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சக்தியை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு கதை உள்ளது. இலங்கையை ஆண்டு வந்த ராவணன் ஒருமுறை தேவர்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவர்களை தோற்கடித்ததும் அல்லாமல் நவக்கிரகங்களையும் அவர்கள் வசித்து வந்திருந்த இடங்களில் இருந்து விரட்டி அடித்திருந்தான். மேலும் அந்த நவக்கிரகங்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களது சக்திகளை தான் சிம்மாசனத்தில் ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களில் அடக்கி வைத்து தினமும் அந்த படிக்கட்டுக்களின் மீது ஏறி நடந்தே தனது சிம்மாசனத்தில் அமர்வானாம். அதனால் அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் வேதனை அடைந்த நவகிரகங்கள் நாரத முனிவரை அணுகி தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு விமோசனம் கிடைக்க ஒரு வழி கூறுமாறு வேண்டினார். நாரதரும் அதற்கான ஒரே வழி அப்போது பூலோகத்தில் சிவபெருமானை வேண்டிக் கொண்டு பார்வதி தவம் இருந்த திருவானைக்காவல் ஆலய இடத்தில் அவளுக்கு காவலில் உள்ள ஜேஷ்ட தேவியை வணங்கித் துதிப்பதுதான் என்றும், அவள் எதிரில் ராவணன் சென்று விட்டால் அவனுக்கு தரித்திர தோஷத்தை தந்து அவன் சிவபெருமான் மூலம் பெற்று இருந்த அபார சக்தியை அவள் அழித்து விடுவாள் என்றும் அவளால் மட்டுமே அந்த நேரத்தில் தேவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறினார்.
நாரதர் கூறிய உபாயத்தின்படி தேவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். அதன்படி சனி பகவான் ராவணனிடம் சென்று அவனை கேலி செய்யத் துவங்க கோபமுற்ற ராவணன் சனி பகவானை விரட்டிக் கொண்டு அவரை பிடிக்க ஓடிவந்தான். சனீஸ்வரரும் வேண்டும் என்றே அவன் கவனத்தைத் திருப்ப அங்கும் இங்கும் ஓடியவாறு முடிவாக திருவானைக்காவலில் இருந்த ஜேஷ்ட தேவியிடம் சென்று அவளிடம் சரண் அடைந்தார். ராவணனுக்கு தேவர்கள் ஆடிய நாடகம் தெரியாது. அங்குதான் பார்வதியும் அப்போது தவத்தில் அமர்ந்து இருந்தாள். ராவணனுக்கு மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அங்கு இருந்ததும் தெரியாது. ஆகவே அதை அறியாமல் சனி பகவானை துரத்தி வந்த ராவணன் சக்தி மிக்க ஜேஷ்ட தேவி முன்னால் சென்று நின்றதும் அடுத்தகணம் அவளைக் கண்டு பயந்து நடுங்கி நின்றான். அவனும் பெரும் பண்டிதன் என்பதினால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி பார்வதியின் ஒரு தேவ கணமாகவே என்பதை அறிந்திருந்ததினால் திரும்ப ஓடிப்போக முயன்றான். ஆனால் பார்வதி தவம் இருந்த இடத்தில் அத்து மீறி நுழைந்தவன் மீது கோபம் கொண்ட மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவனை முறைத்துப் பார்க்க அவன் மூதேவி தொல்லையில் அகப்பட்டுக் கொண்டு தனது அத்தனை சக்தியையும் இழந்து நின்றான். அனைத்து சக்தியையும் இழந்து நின்றவனை தாக்க அதுவே தக்க தருமணம் என்பதை உணர்ந்த சனிபகவானும் அவனை ஏழரை நாட்டு சனி தோஷத்தில் சிக்க வைத்தார். அதுவே ராவணனின் அழிவுக்கு துவக்கம் ஆகி அவன் ராமபிரான் மூலம் மரணம் அடைய வழி வகுத்தது.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்றால் தரித்திரம் என்று தவறாக கருதப்படுகிறாளே அவளுக்கா இத்தனைப் பெருமை என வியக்க வேண்டாம். அவள் பார்வதியின் துணை அவதாரம் என்பதினால் அகிலாண்டேஸ்வரி எனும் பெயரில் திருவானைக்காவலில் உள்ள பார்வதிக்கு காவலாக அங்கு தேவகணமாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அமர்ந்துள்ளார் என்பதில் இருந்தே அவளுடைய முக்கியத்துவம் என்ன என்பதும், அவளை ஆராதிப்பவர்களது தீமைகளை அழிக்க பரமாத்மனால் படைக்கப்பட்டவள் அவள் என்பது தெரியும். இதை வெளிப்படுத்தவே ராவணனுக்கு துரதிஷ்டத்தை தந்து அவனது அழிவிற்கு வித்திட்டது மூலம் கடவுளை நிந்திப்பவர்களை தரித்திரம் பிடிக்க வைத்து அவள் அழிப்பாள் என்பதை பரமாத்மன் ஆடிய நாடகம் வெளிப்படுத்துகிறது.
இன்னொரு கிராமியக் கதையின்படி மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை தாந்த்ரீக சாதனைகளை செய்பவர்கள் சாதனாவின் முக்கியமான தேவியாக கருதுகிறார்கள். தந்திர சாதனாவின் பல கிளைகளில் ஆத்ம விவேகம் அடைவதும் ஒன்றாகும். அதற்கான மூல சக்தியை தருபவள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்பதாக தந்திர சாதனாக்களை செய்பவர்கள் கருதுவார்கள்.
தச வித்தியா தாந்தரீக வழிபாட்டில் சாதனாக்களை செய்பவர்கள் தூம்ர தேவி எனும் பெண் தெய்வத்தை ஆராதனை செய்தே சாதனாவை செய்வார்கள். தூம்ர தேவியின் வாகனம் வராஹி என்பதாகும். அதைப் போலவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனத்தில் வராஹி உள்ளது என்பதினால் தூம்ர தேவியும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஒருவரே என்பதும் ஒருவளே இரு உருவங்களில் காட்சி தருவதாக பண்டிதர்கள் கூறுவார்கள்.
இன்னும் சில இடங்களில் தாந்தரீக சாதனாக்களை செய்பவர்கள் அலஷ்மி எனும் தேவி ஒருவருடைய துன்பங்களையும், துரதிஷ்டம் மற்றும் தரித்திரங்களை களைகிறாள் என்பதாகவும் அவளே வாழ்க்கையில் வளம் பெறவும், பேரானந்தம் பெறவும் வழி வகுக்கின்றாள் என்பதாகவும் கருதி அவளை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் அலஷ்மி, தூம்ர காளி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆகிய மூன்று உருவங்களிலும் ஆராதிக்கப்படும் தேவி மூதேவி எனும் ஜேஷ்ட தேவியே ஆகும்.
சோழ மன்னர்கள் காலத்தில் ஏழரை நாட்டுச் சனியினால் பீடிக்கப்பட்டவர்கள் திருவானைக்காவலில் உள்ள கோவிலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியுடன் சேர்த்து அங்கு இன்னொரு சன்னதியில் எழுந்தருளி உள்ள சனீஸ்வர பகவானுக்கும் அபிஷேகம் செய்து ஆராதித்தப் பின் ஊனமுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கினால் சனி பகவானின் தொல்லையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்ற பரவலான நம்பிக்கை பத்தாம் நூற்றாண்டுவரை இருந்தது.
இதனால்தான் அந்த காலங்களில் மன்னர்களுக்கு ஆலோசனைகள் கூறி வந்திருந்த அரண்மனை ராஜகுருக்கள், அறுபத்தி நான்கு விதங்களிலான எந்த தரித்திரங்களும் தமது நாட்டில் தீய பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாட்டை செய்தவண்ணம் இருக்குமாறு மன்னர்களுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். பாண்டவ சகோதரர்களில் சகாதேவன் மட்டும் தவறாமல் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததாகவும், அதனால்தான் ஏழரை நாட்டுச் சனியினால் பாதிக்கப்பட்ட ஐந்து சகோதரர்களில் மற்ற சகோதரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களைப் போல சகாதேவருக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதான நம்பிக்கைக் கதை உள்ளது.
எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பல்லவ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது பல தமிழர்களின் குல தெய்வமாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஏன் நந்திவர்ம பல்லவ மன்னர் குடும்பத்திற்கும் கூட இவளே குலதெய்வமாக இருந்துள்ளாள். பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்பவர் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் நிர்மாணித்த கயிலாசநாதர் ஆலயத்தில் அவள் சிலையை வைத்து வழிபட்டுள்ளார். அது போல ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் மகேந்திர வர்ம பல்லவ மன்னன் கட்டியுள்ள குடைவரைக் கோவிலிலும் மிகப் பெரிய மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலை உள்ளது. அதன் பின் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்கள் காலத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிறப்பான வழிபாடுகள் இருந்துள்ளன என்பது அவர்கள் நிர்மாணம் செய்த பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளதில் இருந்து தெரிய வரும். இந்த இரு பிரிவு மன்னர்கள் காலத்தைத் தவிர சமண மதம் மேலோங்கி இருந்த காலத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் சமணர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளாள் என்பதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வினாயகப் பெருமானுடன் சேர்த்து வணங்கி வந்துள்ளார்கள்.
பல சிவன் ஆலயங்களிலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை பரிவார தேவதையாக அமைத்து இருந்ததாகவும் அவளது சன்னதியை அல்லது சிலையை எங்கு, எந்த திசையில் அமைக்க வேண்டும் என சிற்ப சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருந்ததாகவும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபாடு என்பது பத்தாம் அல்லது பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்துள்ளது எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபாடு மெல்ல மெல்ல பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறைய ஆரம்பித்து உள்ளது.
எந்த ஒரு கடவுளையும் ஓவியமாகவோ இல்லை சித்திரமாகவோ தீட்ட வேண்டும் என்றால் அதற்கு சில விதி முறைகள் உள்ளன, அந்த உருவங்கள் இப்படித்தான் அமைந்து இருக்க வேண்டும் என்பதாக விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியான விஷ்ணுதர்மோத்தரா என்ற நூலில் கூறப்பட்டு உள்ளது. அதில் மார்கேண்டேய முனிவர் தன்னிடம் சந்தேகங்களைக் கேட்ட வாஜ்ரா என்ற முனிவருக்கு கடவுட்களின் உருவம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறிய விவரங்கள் உள்ளனவாம். மார்கண்டேய முனிவர் அனைத்து கடவுட்களின் பல்வேறு ரூபங்களையும் நேரடியாக பார்த்து உள்ளவர் என்பதினால் கடவுளின் ரூபங்கள் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை அவரால் எடுத்துக் கூற முடிந்தது. ஆகவே அவர் வாஜ்ரா எனும் மன்னனுக்கு விளக்கிய தோற்றத்தில்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தரித்திரம் மற்றும் துரதிஷ்டம் போன்றவற்றுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு கூறப்பட்டாலும் சாதனாக்களை செய்பவர்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வங்களில் அவள் முக்கியமானவள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் தோற்றமும் அம்சங்களும் முக்கியமான சில தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றன.
லிங்க புராணக் கதையின்படி அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த தேவியின் உருவம் அமங்கலமாக இருந்தது. அப்போது முதலில் வெளிவந்த அவளை யார் மணப்பது என்ற கேள்வி எழுந்தபோது துச்சாஹா என்ற முனிவர் அவளை மணக்க வேண்டும் என்பது முடிவாயிற்று. அமிர்த கலசத்தில் இருந்து முதலில் வெளிவந்த அந்த பெண் தெய்வத்தைக் குறித்து விஷ்ணு அனைவருக்கும் விளக்குகையில் அந்த அமங்கலமான பெண் லஷ்மியின் சகோதரியே என்றும், சில காரணங்களுக்காக தான்தான் அவளை படைத்து உள்ளதாக கூறினார். ஆகவே முதலில் வெளிவந்த தேவியை விஷ்ணு மணக்கவில்லை. ஆனால் அவரே அவளது திருமணம் நிகழ ஏற்பாடு செய்தப் பின் அவளுடைய இளைய சகோதரியான லஷ்மி தேவியை தானே மணம் புரிந்து கொண்டார்.
அனைவரும் முடிவு செய்தபடி துச்சாஹா முனிவர் அவளை மணந்து கொண்டாலும் வெகு விரைவிலேயே அவளால் வேத மந்திர ஒலிகளையும், நல்லவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதைக் கண்டவர் விஷ்ணுவிடம் சென்று அவளைப் பற்றி முறையிட்டார். ஆனால் விஷ்ணு அவள் அமங்கலமான இடங்களில் வசிக்கவே அவதரிக்கப்பட்டதினால் அவள் இருக்கும் இடங்கள் அதற்கு ஏற்ற முறையில் அமைந்து இருக்கும் என்றும் ஆகவே அவளுடன் ஒத்துப் போகுமாறு அறிவுறுத்தினார். அதைக் கேட்ட அந்த முனிவரோ அதை ஏற்க முடியாமல் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விட்டு விலகினார். இன்னொரு கதையின்படி அவளை மணக்க இருந்தவரின் பெயர் பிரபவன் என்று கூறப்படுகிறது. அதனால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை போடப்படும் இடங்கள், சாக்கடைப் போன்ற இடங்களில் இடங்களில் வாழும் மனிதர்களுடனும், மயிர் குப்பை, கழுதை, நாய்கள் சண்டையிடும் இடங்கள், மிருகங்களின் கழிவுகள் போன்ற இடங்களில் சென்று வசிக்க முடிவு செய்தாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது என்ன எனில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வசிக்க எண்ணியதாக கூறப்படும் அசுத்தமான இடங்கள் என்பது அசுத்தம் நிறைந்த பூமியின் இடங்கள் அல்ல, மாறாக மனதிலும் உள்ளத்திலும் தூய்மை இல்லாமல், தீய எண்ணங்களுடன் வாழும் மனிதர்களின் அசுத்தமான இதயம் மற்றும் மனத்தைக் குறிப்பதாகும்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி குடியிருக்கும் இடங்கள் அசுத்தங்கள் உள்ள இடங்கள் என்பதினால் அவள் வணங்கத்தகாதவள் ஆகிவிட மாட்டாள். அவளே தரித்திரம், ஏழ்மை, மற்றும் பல்வேறு துன்பங்களை தருபவள் எனத் வெளிப்படையாகத் தோன்றினாலும் அசுத்தம் என்பதும் சுத்தம் என்பதும் ஒருவரின் மனதிலும் இதயத்திலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளைக் குறிப்பன. ஆகவே எவர் ஒருவரின் மனதிலும், இதயத்திலும் அசுத்தம் என்கின்ற தீமைகள் உள்ளனவோ அங்கெல்லாம் மூதேவி சென்று அமர்ந்து கொண்டு அவர்களுடன் இருந்தவண்ணம் தீய எண்ணங்களை அழித்து அந்த இடத்தில் தூய்மை எனப்படும் தெய்வீகத்தை கொண்டு வருபவள் என்பது தத்துவார்த்தமாக இங்கு காட்டப்பட்டு உள்ளது. அதாவது மனித குலத்தில் உலவும் மாயை எனும் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் அழித்து புண்ணிய பலாபலன்களை கொடுத்து முடிவாக தெய்வீகத்தை சென்றடைய அவளே பாதை அமைத்துத் தருகின்றாள்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அருவருப்பான தோற்றத்தில் அழுக்கடைந்த துணிகளை உடுத்தியபடியும், சீவப்படாமல் பறந்தபடி உள்ள தலை முடியுடனும், கையில் ஒரு துடப்பம் ஏந்தியபடியும் இருக்க அவள் அமர்ந்துள்ள தேர் மீது பறக்கும் கொடியில் காகத்தின் உருவம் காணப்படுகிறது. இன்னும் சில ஓவியங்களில் அவள் அமர்ந்துள்ள தேரினை இரண்டு காகங்கள் இழுப்பது போல காட்சி உள்ளது. தச வித்தியா எனும் ஆராதனையில் சாதனாக்களினால் ஆராதிக்கப்படும் தூம தேவி என்பவளும் அதே உருவில் காட்சி தருகின்றாள். பண்டிதர்களின் கருத்தின்படி தூம தேவி மற்றும் மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி ஆகிய இருவரும் இரண்டு பெயர்களில் உள்ள ஒரே தேவியேதான் என்பதாகும் (பல்வேறு இடங்களிலும் ஆராதிக்கப்படும் தூம தேவி, தூம்ர காளி, அலஷ்மி போன்ற அனைவருமே மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவியே ஆகும்). இன்னும் சில ஓவியங்களில் மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி ஒரு கழுதை மீது அமர்ந்துள்ள நிலையில் காணப்படுகிறாள். அவள் கையிலும் துடைப்பம் ஒன்று இருக்க அவள் தேரின் மீது உள்ள கொடியில் காகத்தின் உருவம் காணப்படுகிறது. இன்னும் சிலவற்றில் அவளை சுற்றி கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் காணப்படுகின்றன. இப்படியாக அவளை சுற்றி காணப்படும் சின்னங்களின் தத்துவம் என்ன?
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அறுபத்தி நான்கு தரித்திரங்கள் உள்ள இடங்களில் இருந்தவாறு அந்த தரித்திரங்களையும் அறியாமையையும் விலக்கி அந்த இடத்தை தூய்மைப்படுத்துகிறாள் என்பதற்காக படைக்கப்பட்டு உள்ளாள். இந்த தத்துவத்தின் அர்த்தம் என்ன என்றால் மனிதர்களின் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, அவர்கள் தூய்மையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்ற மாற்றத்தை தரும் வகையில் அவர்களுடைய மனதிலும் இதயத்திலும் இருந்து கொண்டு அவர்களது அறியாமையை விலக்கி நல்வழிப்படுத்துகின்றாள் என்பதாகும் .
மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனமான கழுதை எதைக் வெளிப்படுத்துகிறது? துணியை துவைக்கும் வண்ணான் அழுக்கு மூட்டைகளை பொதி சுமக்கும் கழுதைகள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு நதிக்கரையில் சென்று அவற்றை சுத்தம் செய்து துவைத்தப் பின், அந்த துணிகளை மீண்டும் அதை அதன் மீதே ஏற்றிக் கொண்டு திரும்பி வருவார்கள். அந்த காலங்களில் 'பொதி சுமக்கும் கழுதைப் போல' என்ற வார்த்தை ஜாலம் உண்டு. அந்தக் கழுதைப் போலத்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தன்னை வணங்கித் துதிக்கும் பாவாத்மாக்ககளின் பாவமூட்டைகளை தன் மீதே சுமந்து கொண்டு அவர்களுடைய மன அழுக்குக்களை விலக்கி நல்ல வழிக்கு அழைத்துச் செல்கிறாள். அவளை சுற்றிக் காணப்படும் கொடிய விஷப் பாம்புகள் நல்ல வாழ்க்கைக்கு செல்ல வழிகேட்டு அவளிடம் தஞ்சம் அடைந்து உள்ள தீய எண்ணம் கொண்ட மனிதர்களைக் காட்டுகின்றது.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் முறமும், துடப்பமும் உள்ளது. அந்த முறத்தில் சில தானியங்களும் காணப்படுகின்றன. சில சிற்பங்களில் அவள் முறத்தில் இருந்து தானியங்களைக் கொட்டுவதைப் போல காட்சி தருகிறாள். அந்த தானியங்களை நெல் விதை என்பார்கள். பக்குவமான நெல்லில் இருந்து வெளிப்படும் அரிசியை முறத்தில் கொட்டி அதை தூக்கிப் போட்டு காற்றில் புடைக்கையில் அரிசியுடன் உள்ள உமி, மண், தவிடு மற்றும் சிறு கல் போன்றவை காற்றில் பறந்து கீழே விழுந்து விடும். உண்பதற்கான நல்ல அரிசி தானியங்கள் முறத்தில் தங்கிவிடும். பக்குவப்படாத நெல்லை தூக்கி எறிந்து விடுவார்கள். அவற்றை அடுப்பில் இருந்து எழும் நெருப்பில் போட்டு தணலாக மாற்றி அதைக் கொண்டே அரிசியை சமைத்து உண்பார்கள் (முன் காலங்களில் காஸ் அடுப்புக்களோ, இல்லை மின்சார அடுப்புக்களோ கிடையாது. அப்போதெல்லாம் வயல்வெளியிலும் வீட்டின் உள்ளேயும் பூமியை தோண்டி சிறு குழி உண்டாக்கி அதில் விறகுகளையும், அடுப்புக் கரியையும் போட்டு தீ மூட்டி அதனால் கிடைக்கும் தணலை கொண்டே சமைப்பார்கள். அதன் பின் பல காலம் பொறுத்தே மண்ணினால் ஆன சமையல் அடுப்புக்கள் வந்தன).
இரண்டாவதாக அந்த முறத்தில் ஏன் அரிசி தானியம் காணப்படுகிறது ? அரிசி தானியம் தெய்வீகத் தன்மை பெற்றது என்பதினால்தான் வீட்டில் நடைபெறும் ஹோம குண்டம் மற்றும் யாக குண்டங்களில் அரிசியை நெய்யுடன் கலந்து உணவாகப் போடுவார்கள். மரணம் அடைந்தவர்களுடைய வாயில் கூட ஒரு பிடி வாய்க்கரிசி போடுவது அரிசியின் முக்கியத்துவத்தைக் காட்டும். தென் நாடாக இருந்தாலும் சரி, வட நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக உணவினர் போடுவது அரிசி தானியமே அல்லாது பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை. வேறு எந்த தானியத்துக்கும் அப்படிப்பட்ட தெய்வீக நிலை இல்லை என்பதினால் யமபெருமானே வணங்கித் துதிக்கும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் உள்ள முறத்தில் அரிசி இருப்பது ஆச்சர்யம் அல்ல.
மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி
மற்றும் அரிசி தேவியான தேவிஸ்ரீ
நெல் விதைகள் உள்ளே காணப்படும் அரிசி ஒவ்வொருவருடைய ஆத்மாவைப் போல உள்ளது. பெண்ணின் கர்பப்பையைப் போன்றது நெல். அதற்குள் உள்ள அரிசி தானியம் மெல்ல மெல்ல வளர்ந்து நன்கு முற்றியதும் அதை சாகுபடி செய்து அரிசியை பிரித்து எடுப்பார்கள். ஆகவே நெல் விதையை பெண் இனமாக கருதி அதை அரிசி தெய்வத்துடன் சம்மந்தப்படுத்தி போற்றுகிறார்கள். அரிசி தானியத்துக்கு இத்தனை மகத்துவம் ஏன் தரப்படுகிறது? அரிசியை பெண் இனம் என்பதின் காரணம் இந்த உலகிலேயே அரிசியின் தோற்றமே தேவிஸ்ரீ எனும் ஒரு பெண் தேவதை ஒன்றுடன் சம்மந்தப்பட்டதாகும். காம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, கிரேக்க தேசம் என உலகின் பல்வேறு நாடுகளிலும் அரிசி தேவதை என்பவள் போற்றி வணங்கப்படுகிறாள். அங்கெல்லாம் அரிசி தெய்வத்தை 'தேவி ஸ்ரீ' (Dewi Shree) என்கிறார்கள். நெல்லின் உள்ளே இருந்து முற்றிய அரிசி தானியம் வெளிவரத் துவங்கும் காலத்தை தானியத்தின் செடி கர்பமுற்றுள்ள காலம் எனக் கருதுகிறார்கள். ஆகவே செடிகளிலும் உயிர் உள்ளது என்ற தத்துவத்தை நம்புகிறார்கள். உயிருள்ள அனைத்திலுமே ஆத்மா எனும் ஜீவன் உள்ளது, ஒரு மரணம் நிகழும்போது அதற்குள் உள்ள ஜீவன் பறந்துவிடும். அது திரும்ப வருவது இல்லை. அது போலவே ஒருமுறை நெல்லில் இருந்து அரிசியை வெளியில் எடுத்து விட்டால் அந்த நெல் உபயோகம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. ஆத்மாவும் உடலும் போன்ற நிலை அது. மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் அவளை ஆராதிப்பவர்களது இதயத்தில் அமர்ந்து கொண்டு அங்குள்ள தீய எண்ணங்கள் எனும் தீமைகளை அகற்றி, இதயத்துக்குள் இயற்கையாக மெல்ல மெல்ல துளிர் விட்டபடி இருக்கும் தெய்வீகம் எனும் நல்லவற்றை இன்னும் பக்குவப் படுத்துகிறாள் என்பது அது காட்டும் தத்துவம். அரிசி உணவை உண்பது தென் இந்தியா மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் (ஒரிஸ்ஸா, வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா போன்ற பல இடங்கள்) அதிகம் உண்டு. அதனால்தானோ என்னவோ எதேச்சையாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு இந்த பகுதிகளில் அதிகம் உள்ளது.
முறம் எனும் சின்னம் எதைக் காட்டுகிறது? அனைத்து நெல் தானியங்களையும் முறத்தில் போட்டு புடைத்து உமி, மண், தவிடு, கல் போன்றவற்றை விலக்கி எடுத்துவிட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பார்கள். ஆகவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் உள்ள முறம் என்பது காட்டும் தத்துவம் என்ன என்றால் அரிசியை முறத்தில் போட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பது போல அந்த தேவியிடம் சென்று சரண் அடையும் ஆத்மாக்களில் உள்ள தீய எண்ணங்களையும், தீமைகளையும் அகற்றி அவை நல்ல வழியில் நடக்க வழி வகுக்கிறாள்.
அரிசி நெல்லை முறத்தில் போட்டு புடைத்து நல்ல அரிசியை பிரித்தெடுக்கும் முன்னால் அந்த நெல்லை உரலில் போட்டு நன்றாக இடித்து அதற்குப் பிறகே அதை புடைப்பார்கள். முறத்தில் போட்டு புடைக்கும்போது காற்றில் அதனுடன் கிடக்கும் தூசிகள் அனைத்தும் பறந்து போய் கீழே விழுந்து விடும். இதே போலத்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தீய எண்ணங்கள் கொண்டவர்களையும், தீமைகளை செய்பவர்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஏராளமான சோதனைகளையும், துன்பங்களையும் தந்து அவர்கள் தாம் செய்யும் தவறுகளை உணரச் செய்கின்றாள். துன்பத்தையும், துயரத்தையும் தாங்க முடியாமல் போகும்போது அவர்கள் தமது தவறுகளை உணரத் துவங்கி, கடவுளிடம் சரண் அடைகின்றார்கள். அந்த நிலைக்கு சென்று திருந்தத் துவங்கும்போது அவள் அவர்களை தன் பிடியில் இருந்து விடுதலை செய்கின்றாள்.
துணி துவைக்கும் வண்ணார்கள் துணியை கல் மீது அடித்து, கசக்கித் துவைத்து சுத்தம் செய்வதைப் போலவே அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களையும், தீராத துன்பங்களையும் தந்து கஷ்ட நஷ்டங்களை சுமந்து கொண்டு செல்லும் வாழ்கை எப்படிப்பட்ட நரக வாழ்க்கை எனும் வலியை அவர்களுக்கு தரும் என்பதை உணர வைக்கிறாள். அப்போது அவர்களுக்கு பூரணமான தெய்வ நம்பிக்கை ஏற்படத் துவங்க தெய்வங்களை வழிபடத் துவங்குகிறார்கள். அந்த நேரத்தில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவர்களுடைய தரித்திர வாழ்க்கையில் இருந்து அவர்களை விடுதலை செய்கின்றாள். இப்படியான வழியில் தெய்வீகத்தை ஒருவர் வாழ்க்கையில் உணர வைக்கவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவதரிக்கப்பட்டு இருக்கின்றாள். என்ன ஆனாலும் சரி தாம் திருந்தவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு தீமைகளை செய்தவண்ணம் இருப்பவர்கள் இன்னும் அதிக தரித்திர நிலையையும், துன்பங்களையும் அடைகின்றார்கள். பிறக்கும் எவருமே தவறுகள் செய்பவர்கள் அல்ல. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒருவரை நல்லவனாகவும், கெட்டவர்களாகவும் ஆக்குகின்றன. இப்படியாக முறத்தைக் கையில் உள்ள வேறு எந்த தெய்வத்தையும் காணவே முடியாது.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தூய்மையற்ற இடங்களில் வசிக்கின்றாள் என்பது ஆன்மீக கண்ணோட்டத்தில் என்ன என்றால் அவள் அழுக்கடைந்த மனதோடு உள்ளவர்களிடம் இருந்து கொண்டு அவர்களது தீய எண்ணங்களை விலக்கி வறுமையை ஒழிக்க அவர்களை லஷ்மி தேவியிடம் அனுப்புகின்றாள் என்பதேயாகும். அதைப்போல தூய்மையான இடங்களிலேயே லஷ்மி தேவி வாசம் செய்கின்றாள் என்பது மூதேவி எனும் ஜேஷ்ட தேவி மூலம் தீய எண்ணங்கள் விலகி தூய்மையான எண்ணங்களுடன் இருக்கையில் லஷ்மி தேவி அவர்களிடம் வந்து அவர்களுக்கு அருள் புரிகின்றாள் என்பதைக் குறிக்கும் நிலை ஆகும். இப்படியாக சகோதரிகளான லஷ்மி தேவி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆகிய இருவரும் ஒரே அம்சத்தின் இருபுறங்கள் ஆவார்கள்.
ஆனால் இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மூதேவி எனும் வார்த்தை உபயோகமற்றவர்களை திட்டும் வார்த்தை என தவறாகக் கருதுகின்றார்கள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஒருவருடைய தீய எண்ணங்களையும், தீய குணங்களையும் மாற்றி அமைத்து அவர்களை நல்வழிப்படுத்துபவளே என்பதை அவர்கள் புரிந்து கொள்வது இல்லை.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்பவள் தூம தேவி என்ற அவதாரத்தில் உள்ளபோது கையில் வெட்டப்பட்ட மாட்டின் தலையை ஏந்திக் கொண்டு காகத்தின் உருவம் கொண்ட கொடியை தன் தேரில் ஏற்றி வைத்திருக்க அவளது தேரினை இரண்டு காகங்கள் இழுப்பதைப் போல தோற்றம் தருவாள். அவளுக்குப் பிடித்த வாசனை சுடுகாட்டில் இருந்து எழும் புகையின் மணம். சுடுகாட்டில் உள்ள பிணங்களைக் கூட அவள் தின்பாள் என்பதும் நம்பிக்கை. இப்படிப்பட்ட ஸ்மசான (சுடுகாடு) சின்னங்களைக் கொண்ட இந்த தேவியான மூதேவியை ஏன் தச வித்யா எனும் தாந்த்ரீக முறையில் வழிபடுகிறார்கள்? அவளுடன் காணப்படும் காகம் எதை வெளிப்படுத்துகின்றது? தூம தேவி சுடுகாட்டில் உள்ள பிணங்களைக் கூட தின்பாள் என்பது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் சுடுகாட்டில் எரிக்கப்படும் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மா அங்கு வான்வெளியில் இருக்கும்போது அந்த ஆத்மாக்களின் பாபங்களை தன்னிடம் இழுத்துக் கொண்டு விடுகின்றாள் என்பதே ஆகும்.
காக்கையை யமலோகத்தின் தூதுவராக நினைக்கிறார்கள். அதனால்தான் சிரார்த்தம் போன்ற இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளில் பிண்டதானங்கள் செய்யும் வேளையில் ' காக்கை எனும் பறவையே, இந்த பிண்டதானத்தை ஏற்றுக் கொண்டு யமபெருமானின் லோகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆத்மாக்களின் பசியை தீர்த்து வை' என்று வேண்ட வேண்டும் என்பார்கள். அப்போது தன்னுடைய தூதுவரான காக்கை வயிறார உண்டதும் அந்த வீட்டில் உள்ளவர்களது ஆத்மா சாந்தியடைய யமராஜர் அருள் புரிகிறார் என்பது ஆன்மீக தத்துவம் ஆகும்.
அதனால்தான் தன்னை ஆராதித்தவர்கள் இறந்த பின் யம லோகம் சென்றாலும் அங்கு தன்னுடைய பக்தர்கள் யமனுடைய கொடுமையை அனுபவிக்கக் கூடாது என்பதினால் மயானத்தில் உலவும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவி தனது பக்தர்களின் ஆத்மாக்கள் மன பயம் இன்றி செல்ல வேண்டும் என்பதற்காக தனது தேரை இழுக்கும் காக்கையை அங்கு போடப்படும் பிண்டங்களை தின்னச் செய்து, அதன் மூலம் அந்த ஆத்மாக்களின் பசியைப் போக்கி மேலுலகத்துக்கு அனுப்புகிறாளாம். ஆகவே காக்கை மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சேவகம் செய்யும் பறவை. அது மட்டும் அல்ல யமதர்மராஜரின் தூதுவர் மற்றும் அவருடைய சகோதரராக கருதப்படும் சனி பகவானுக்கும் காக்கையே வாகனம் என்பதினால் யமராஜர், சனி பகவான் மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு இடையே நெருங்கிய தொடர்ப்பு உள்ளது என்பதாக ஆன்மீக நம்பிக்கை உள்ளது. இதனால்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வழிபட்டால் யம கணங்கள் மூலம் கிடைக்கும் தண்டனை குறைந்து யம பயம் விலகும் என்று அந்த காலங்களில் நம்பினார்கள். தந்தரீக சாதனாக்களை செய்பவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியே யமராஜர் மற்றும் சனிபகவானுக்கு அதிபதியாவார் என்பதாக நம்புகின்றார்கள். இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் யமராஜர், சனிபகவான் மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கும் சேவகம் செய்யும் பறவையான காக்கையை வணங்கினார்கள்.
சனி பகவானுக்கு வாகனம் காக்கைதான். அதே காக்கைதான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் தேரை இழுக்கும் பறவையும் ஆகும். அவளது கொடியிலும் காக்கையின் உருவம் உள்ளது. இதனால்தான் இருவருக்கும் பொதுவான அம்சமாக காக்கை இருப்பதினால் சனியின் தொல்லை இன்றி இருக்க வேண்டும் எனில் ஆலயங்களில் சென்று ஜேஷ்ட தேவியை ஆராதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்தது. மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு அவளது கட்டளைக்கு ஏற்ப காக்கையை வாகனமாக சனி பகவானே அனுப்பி வைத்தாராம் என்பதினால் சனிபகவான் மீது மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு அதிகாரம் உள்ளது புலப்படும். யமராஜருக்கும் காகமே தூதுவர். ஆகவே மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்கள், அவர்களுடைய செயல்கள் ஒருவருக்கொருவருடன் முரண்படுவதில்லை என்பது தெளிவாகும்.
இறந்தவர்களது உடல் எரிக்கப்பட்டதும் அதில் இருந்து வெளியேறும் ஆத்மா அந்த சுடுகாட்டில் எரிக்கப்பட்ட உடலின் மேற்பகுதியிலேயே சில காலம் சுற்றித் திரிந்தப் பின் மேலுலகம் செல்லும். அந்த ஆத்மாக்களை மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பாள். அப்போது அங்கு சுற்றித் திரியும் சில ஆத்மாக்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொண்டு அவளிடம் அடைக்கலம் ஆகி தாம் அறியாமையில் செய்துவிட்ட பிழைகளை மன்னித்து காக்குமாறு வேண்டிக் கொள்ளும்போது கருணை கொண்டு அந்த தேவியும் அந்த ஆத்மாக்களின் தீமைகளை விலக்கிவிட்டு, ஆத்மாக்களை தூய்மைப்படுத்தி மேலுலகத்துக்கு அனுப்பும்போது அவர்களுக்கு யம கணங்கள் தொல்லைகளைத் தரமாட்டார்கள். உயிருடன் இருக்கையில் தம்மை வணங்கித் துதித்ததினால் அந்த ஆத்மாக்களை நல்ல பிறவி எடுக்கும் வகையில் அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள். பண்டிதர்களின் கூற்றின்படி அனைத்து ஆத்மாக்களும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவை பூமியிலே இருந்தபோது செய்த நன்மைகளின் அளவைக் கொண்டு அவற்றால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனும் நிலையில் பரமாத்மன் நியதியை வைத்து உள்ளார்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி சுடுகாடுகளில் ஏன் சுற்றுகிறாள்? புராணங்கள் சுடுகாடுகளில் சுற்றுபவர் ஸ்மசானவாசி எனும் சிவபெருமான் என்பதாகக் கூறுகிறது. ஆகவே அங்கு அவருக்கு துணையாக, சேவகம் செய்ய சிவபெருமானின் துணைவியான பார்வதியின் அவதார கணங்களில் ஒன்றான மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அங்கு இருக்கின்றாள். அதனால்தான் அமிர்தம் கடைந்தபோது முதலில் வெளியான பார்வதியின் அவதார கணங்களில் ஒன்றான மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விஷ்ணு பகவான் மணக்கவில்லை. அவளை சிவபெருமானே தன்னுடைய பரிவார தேவதையாக ஏற்றுக் கொண்டு தான் அமர்ந்துள்ள பல ஆலயங்களில் பார்வதிக்கு காவலாக இவளையும் நியமித்து உள்ளார். இதனால்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலைகள் பெரும்பாலும் சிவன் மற்றும் சக்தியின் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவி சில ஓவியங்களில் வெண்மை உடை அணிந்து விதவைப் போல நகைகளை அணிந்து கொண்டிராமல் காட்சி தருகின்றாள். விதவை என்பது வீட்டிலும் சரி, சுற்றத்தாருடனும் சரி உலக ஆசைகளிலும் சரி அவை அனைத்தையுமே துறந்து நிற்கும் நிலை ஆகும் (முன் காலங்களில் கணவனை இழந்து விட்டப் பெண்கள் தமது அழகை உருக்குலைத்துக் கொண்டு, யாராலும் விரும்பப்படாத தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமுடியை முற்றிலும் வெட்டி எடுத்து விட்டு, நகைகளை அணிந்து கொண்டிராமல், எந்த விதமான விழா மற்றும் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தார்கள். உணவில் இருந்து ஆடைகள்வரை எந்த ஆசைக்கும் அடிமையாகி தம்மை மீண்டும் இழக்கலாகாது என்பதை கட்டாயப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகளை வைத்து இருந்தார்கள்). ஆகவே தந்திரக் கலையில் சித்தி பெற விரும்புபவர்கள் முதலில் தம்முள் உள்ள உலகப் பற்றை அழித்துக் கொள்ளத் துவங்கிய பின்னர்தான் அவர்கள் வேண்டிய சித்தி கிடைக்கும் என்பதைக் காட்டும்வகையில் அவள் விதவைக் கோலத்தில் காட்சி தருகிறாள்.
ஒருவர் நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்லும்போது எதிரில் விதவை, அலங்கோலமான பிச்சைக்காரன் அல்லது அனாதைகள் போன்றவர்கள் தென்பட்டால் அதை அபசகுனமாகக் கருதி மூதேவியைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது' என தவறாக எண்ணுவார்கள். இப்படி தவறாக எண்ணப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி பத்தாம் நூற்றாண்டு காலம்வரை பெருமளவு ஆராதிக்கப்பட்டு வந்து இருக்கிறாள். பல இடங்களிலும் நடைபெறும் பூஜைகளில் ஆராதிக்கப்படும் மேரு யந்திரத்தில் ஒன்பது படிக்கட்டுக்கள் உண்டு. அந்த படிக்கட்டுக்களை நவாவரணம் அல்லது நவபரணம், அதாவது ஒன்பது கவசம் என்று கூறுவார்கள். சிவன் குடி இருக்கும் மேரு மலையை பிரதிபலிப்பதாக கருதப்படும் மேரு சக்கரத்தில் புவனேஸ்வரி தேவி மேல் பகுதியில் அமர்ந்து இருப்பாள். சாக்த வழிபாட்டு முறையில் செய்யப்படும் பூஜைகளில் ஆராதிக்கப்படும் அந்த மேருவின் ஒன்பது படிக்கட்டுகளையும் பார்வதி தேவியினால் உருவாக்கப்பட்ட அறுபத்தி நான்கு பயங்கரமான சக்தி வாய்ந்த யோகினிகள் காவல் காத்து நிற்பார்கள். ஒவ்வொரு யோகினியும் ஒவ்வொரு கலையில் சிறந்தவர்கள். அவர்களில் ஒருவளே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஆவாள். மேரு யந்திர பூஜையை ஞான மற்றும் யோக மார்க்க வழிபாட்டு முறையில் செய்வார்கள். அந்த பூஜையில் புவனேஸ்வரி தேவி அமர்ந்து இருக்கும் மேரு மலை முகட்டுக்கு தடங்கல் இல்லாமல் செல்ல அந்த காவல் யோகினிகளை முதலில் ஆராதிப்பார்கள். இத்தனை மகிமை வாய்ந்த மேருவின் வாயிலில் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட வேண்டிய தேவியே என்பது இதனால் புலனாகிறது அல்லவா?
சில இடங்களில் காணப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலையின் இருபுறமும் இரு உருவங்கள் உள்ளதைக் காணலாம். அதில் ஒன்றாக மாட்டின் உருவமும், இன்னொன்றாக இளம் பெண் உருவங்களும் உள்ளன. மாட்டின் உருவத்தை நந்திதேவர் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலரோ அந்த மாட்டு முகத்தைக் கொண்டவரை, தமிழகப் பகுதிகளில் கிராமத்தினர் பலர் வணங்கும் (முக்கியமாக வண்ணார் எனும் இனத்தவர் வணங்கும்) மாடன் எனப்படும் மாடசாமி என்கின்றார்கள். ஏன் எனில் மாடசாமியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவரே என்பதும், நந்தி தேவர் சிவபெருமானின் வாகனம் என்பதும் ஐதீகமாக உள்ளது. இன்றைக்கும் கூட கிராமப்புறங்களில் சில கிராம தேவதை ஆலயங்களில் பெண் சிலைகள் சில கழுதையோடு இருப்பதைக் காணலாம். கழுதை என்பது மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனம் என்பதினால் அந்த பெண் கிராம தேவதைகள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்கின்றார்கள்.
இரண்டாவதாக உள்ள இளம் பெண்ணின் உருவம் வாக்கின் தேவதையான வாக் தேவதை என்று கூறுகிறார்கள். வாக்வாதினி மந்திரம் என்பது வாக்கு வலிமையைக் கொடுக்கும் மந்திரமாகும். அதைதான் காளி தேவி உஜ்ஜயினியில் காளிதாசனுக்குக் கொடுக்க அவர் நா வன்மை பெற்றார் என்பது நம்பிக்கை. அந்த வாக்கு வன்மையைத் தருபவளே மகா வித்யாவில் உள்ள ஒன்பதாவது தேவியான மாதங்கி தேவி ஆகும். மாதங்கி உபாசனை செய்வதின் மூலம் சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை வெகு விரைவில் அடைய முடியும். அப்படிப்பட்ட வலிமையைக் கொண்ட மாதாங்கி தேவியுடன் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட வேண்டியவளே என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் இப்படிப்பட்ட தோற்றங்களின் தத்துவங்களை நன்கு அறிந்திருந்த பண்டைக் கால ரிஷி, முனிவர்கள் அவர்கள் சேவகம் செய்து வந்திருந்த ராஜா மகாராஜாக்களுக்கு அவற்றை எடுத்துரைத்திருந்ததினால்தான் அந்த மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சன்னதிகளும் வைக்கப்பட்டு அவள் வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்கள் காலத்தில் மூதேவி எனும் ஜேஷ்டாதேவியின் வழிபாடு தென் இந்தியாவில், முக்கியமாக தமிழ் நாட்டில் பெருமளவு இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிலைகள் உள்ளதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை பல்வேறு பெயர்களில் ஆனால் அதே தோற்றத்தில் கிராம தேவதையாகக் கூட வழிபட்டு உள்ளார்கள்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிலை உள்ளதைப் போலவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவனாதர் எனும் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலை வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளது. அந்த காலங்களில் ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் முன்னர் தமது பயணத்தின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வேண்டிக் கொண்டு யாத்திரைக்கு கிளம்புவார்கள். அப்படிப்பட்ட வழிபாடு இன்றும் தொடர்கிறது. திருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆதி பராசக்தி என வணங்கப்படுகிறாள். அவள் சிலையின் இருபுறங்களிலும் இரண்டு உருவங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளுக்கு இடைப் பகுதியில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி புரிகிறாள். அவளை அனுக்கிரஹ தேவதையாக இந்த ஆலயத்தில் வழிபடுகிறார்கள். தமது வேண்டுதல்கள் நிறைவேற இந்த தேவிக்கு ஆடைகள் சாத்தி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் சப்த கன்னிகைகள் தமது சாபத்தை விலக்கிக் கொண்ட தலமான கடம்பவனேஸ்வரர் ஆலயத்திலும் ஜேஷ்ட தேவி வழிபடப்பட்டு வந்துள்ளாள். இந்த ஆலயம் சுமார் 1000 அல்லது 2000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் ஆகும்.
அது போலவே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயத்திலும் சப்த மாதர்கள், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, முருகன், நவகிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் போன்றவர்களுடைய சன்னதியைப் போலவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கும் சன்னதி உள்ளது என்பதில் இருந்து அவள் அந்த காலங்களில் வழிபடப்பட்டு வந்துள்ளது புரியும். இந்த ஆலயத்தில் காணப்படும் அவள் சிலையில் இருபுறமும் காணப்படும் இரு உருவங்கள் அவளது மகன் குளிகன் மற்றும் மகள் மாத்தி என்கிறார்கள். ஆனால் மற்ற ஆலயங்களில் அவளது சிலையின் இருபுறமும் செதுக்கப்பட்டு உள்ள இரு உருவங்களை நந்தி தேவர் என்றும், வாக் தேவதை என்றும் கூறுகிறார்கள்.
மாயவரத்தின் அருகில் உள்ள வழுவூரில் சூலை நோய்கள் (காலம் தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் அல்லது வயிற்று வலி நோய்) குணமாக பக்தர்கள் ஆராதிக்கும் வீரட்டேஸ்வர் என்ற சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம் ஆகும். அந்த ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட்டு வந்து இருக்கிறாள். வட நாட்டில் பல இடங்களிலும் சீதள தேவி என்பவளை மூதேவி எனும் ஜேஷ்ட தேவியாக வணங்கி வருகிறார்கள். அவள் அம்மை போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள வீராபுரம் என்ற சிவன் கோவிலை சேர்ந்த ஒரு ஆலயக் குளம் உள்ளது. அதன் படிக்கட்டுக் கரையிலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபடப்படுகிறாள்.
108 நாமங்களைக் கூறி லஷ்மி தேவியை ஆராதிக்கும் தோத்திரத்தில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் இடம் பெற்று இருக்கிறாள். அதில் சில வரிகள் கீழே உள்ளன:
• ஓம் சௌந்தர்யா லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஸ்வர்க லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஷைன்ய லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜகல் லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜேஷ்ட லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி
இப்படியாக பத்தாம் நூற்றாண்டுவரை பரவலாக பல இடங்களிலும் வழிபடப்பட்டு வந்துள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு பின்னர் குறையத் துவங்கி உள்ளது. விஷ்ணுவினால் படைக்கப்பட்டதாக கூறப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விஷ்ணு ஆலயங்களில் வழிபடாமல் சிவபெருமானின் ஆலயங்களில் வழிபடுகின்றார்கள் என்பது ஆச்சர்யம் தரும் செய்தியாகும். பத்தாம் நூற்றாண்டு முதல் அவளுடைய முக்கியத்துவமும், வழிபாடும் குறைந்ததற்கான காரணங்கள் சரிவரத் தெரியவில்லை.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மூதேவியின் வழிபாடு மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது என்பதின் காரணம் சமூகப் பிளவே. மக்கள் கடவுட்களையும் ஆரியக் கடவுள் மற்றும் திராவிடக் கடவுள் என பிரித்துப் பார்க்கத் துவங்கினார்கள். அந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பாண்டிய மற்றும் பெரும்பாலான சோழ மன்னர்கள் அந்தணர்கள் அல்லாதவர்களே. ஆகவே அந்த மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருந்த தெய்வீக வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு கட்டத்திலும் வறுமையில் இருந்த பெருவாரியான சமூகத்தினரால் பெரிய அளவில் ஏற்கப்பட்டு வந்துள்ளது. பெரும்பாலான இடங்கள் கிராமப்புறங்களாகவே இருந்ததினால் மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டன. புராணங்களைப் படித்தோம் என்றால் கடவுட்கள் பலரும் தமது சாபங்களைக் களைந்து கொள்ள பூமிக்கு வந்தபோது அடர்ந்த காடுகளிலும் நதிக் கரையிலும் அமர்ந்து தவம் செய்துள்ளார்கள் என்பது தெரியும். அந்த இடங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே அமைந்து இருந்தன. இப்படியாக அவர்கள் அமர்ந்து இருந்த புனித இடங்களில் எழுந்த ஆலயங்கள் மிகச் சிறிய அளவில் கிராமங்களில் இருந்துள்ளது. அவற்றை வழிபாட்டுத் தலம் என்ற பெயரில் அமைத்து இருந்துள்ளார்கள். அந்த வழிபாட்டுத் தலங்கள் மரத்தடிகளில் இருந்துள்ளன. ஆற்றின் கரைகளில் இருந்துள்ளன. மேலும் அவற்றில் பலவிதமான தெய்வங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருந்துள்ளன. அந்த ஆலயங்களின் சிலவற்றின் சக்தியை உணர்ந்த மன்னர்கள் பின்னர் மிகப் பெரிய ஆலயக் கட்டடங்களை எழுப்பி அதில் அந்த சக்தி மிக்க தெய்வங்களின் சிலைகளை நிறுவினார்கள். கிராம தேவதை ஆலயங்களாக இருந்தவை பிற்காலத்தில் பெரிய ஆலயங்களாயின.
இரண்டாவதாக அந்த காலங்களில் அந்தணர்கள் ஆதிக்கமும் அதிகம் இருந்தது. அந்தணர்கள் வேத பாடங்களை நன்கு படித்திருந்த வல்லுனர்கள் என்பதினால் எந்த பிரிவை சேர்ந்த மன்னர்கள் என்றாலும் அவர்கள் நடத்திய பல்வேறு புனித காரியங்களுக்கும் அவர்களது உதவி தேவையாக இருந்தது. இதனால் ஆலயங்களில் பல கட்டுப்பாடுகள் தோன்றத் துவங்கின. சன்னதிகளில் அனைத்து பிரிவினரும் அனுமதிக்கப்படவில்லை. பூஜைகளில் சமஸ்க்ருத மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆனால் கிராமங்களில் வெட்ட வெளியில் அமைந்து இருந்த ஆலயங்கள் எனப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் யார் வேண்டுமானாலும் சென்று தெய்வங்களுக்கு மாலைப் போட்டோ, பூக்களைத் தூவியோ நேரடியாக வழிபட முடிந்தது. ஆனால் அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை. சில பிரசாதங்கள் அசைவ உணவுகளாகவும் இருந்தன. கிராமங்களில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் ஏழைகள். தினமும் குளித்துவிட்டு மாற்று உடை அணிய வசதி அற்றவர்கள். அவர்களும் திறந்தவெளி ஆலயத்தில் வந்து வழிபட்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு செல்வதை பிராமணர்கள் தவிர்த்து வந்தார்கள்.
இதன் விளைவாக வேத வழி ஆலயங்கள் என்றும் வேத முறையில் இல்லாத ஆலயங்கள் எனவும் ஆலயங்கள் பிரித்துப் பார்க்கப்பட்டன. வேத வழியிலான ஆலயங்களில் ஆகம வழிபாட்டு முறை அமைய மற்ற ஆலயங்கள் ஆகம வழிபாட்டு முறை அற்ற ஆலயங்கலாயின. கிராமங்களில் இருந்த ஆலயங்கள் கிராம தேவதை ஆலயங்கள் என அழைக்கப்படலாயிற்று.
கிராம தேவதைகள் என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் என்றே பெரும்பாலானவர்கள் கருதும் அளவிற்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. மூல தெய்வங்களின் அதாவது முதல் நிலைக் கடவுட்கள் எனக் கருதப்பட்ட தெய்வங்களின் பரிவார தேவதைகள்தான் கிராம தெய்வங்கள் என்றும் அவர்களுக்கு தனித் தன்மையும், சக்தியும் கிடையாது எனவும் கருதப்பட்டன. முதல் நிலைக் கடவுட்கள் என்பவர்கள் சிவன், விஷ்ணு, பிரும்மா, பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி என்பவர்கள் ஆவர். கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள், அதாவது ஆலயங்களில் உள்ள தெய்வங்களுடைய படை வீரர்கள் என்று கூடக் கூறும் அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.
அந்தணர்களின் கடவுள் என வணங்கிய பிரிவில் வேத முறையிலான வழிபாட்டுக்குறிய தெய்வங்கள் எனக் கருதப்பட்ட சிவபெருமான், வினாயகர், விஷ்ணு, ராமர், ஹனுமான், பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி, அவர்களுடைய பல்வேறு ரூபங்களான லலிதா திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி தேவி மற்றும் பல்வேறு ரூப அம்பாள் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் அதில் பார்வதியின் அவதாரமான மாரியம்மன் குடும்ப வகையினரான அம்மன்கள் எனப்பட்ட தெய்வங்களை சேர்த்துக் கொண்டது இல்லை. ஆரம்ப காலங்களில் பிராமணர்கள் முருகன், கிருஷ்ணர், வள்ளி மற்றும் மாரியம்மன் போன்றவர்களை ஏற்கவில்லை என்றாலும் காலப்போக்கில் அவர்களையும் வழிபடத் துவங்கினார்கள்.
அதே நேரத்தில் அந்தணர் அல்லாதோர் கிருஷ்ணர், முருகன், பரசுராமர்,காத்தவராயன், சூலி, பேயாண்டி, குதிரை வீரன் மற்றும் வள்ளி, மாரியம்மன், மகமாயி, ரேணுகா தேவி, எல்லம்மாள், காளி, யோகினிகள், மற்றும் பலவித அம்மன்கள் போன்றவர்களை வணங்கி வந்தார்கள். ஆகவே அவர்களை வணங்கிய கடவுட்களை அந்தணர்கள் தவிர்த்தே வந்திருந்தார்கள். அந்தணர்கள் வணங்கிய பெண் தெய்வங்களை அம்பாள் என்ற பெயரிலும், பிற சமூகத்தினர் வணங்கி வந்த அதே பெண் தெய்வங்களை அம்மன் என்றும் பெயரிட்டு உருவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிலும் அபிப்பிராய பேதத்தை உருவாக்கினார்கள்.
மூதேவி எனும் ஜேஷ்ட தேவியைப் பொருத்தவரை அவள் யோனினி என்றும், தாந்த்ரீக கடவுள் எனவும் கருதப்பட்டதினால் அவளை ஆகம மற்றும் வேத வழி முறையில் இல்லாத தெய்வம் எனக் கருதி அவளை வழிபடுவதை தவிர்த்தார்கள்.
பல இடங்களிலும் ஆட்சியில் இருந்த மன்னர்கள் தம் ஆட்சி பலமாக இருக்க, எதிரிகளை அழிக்க பல்வேறு முறையிலான தாந்த்ரீக வழிபாட்டை கடைபிடிக்கத் துவங்கினார்கள். அவை தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக முறைகளில் ஆன வழிபாட்டை அதிகரித்தது. அந்த மந்திர தந்திர வழிபாட்டு முறையில் லஷ்மி தேவியின் சகோதரி என்று கூறப்பட்டு வந்திருந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி முக்கியமானவளாக இருந்தாள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தென் இந்தியாவின் பல இடங்களில் மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு பெருமளவில் ஆராதிக்கப்பட்டு வந்திருந்ததினால், வைதீக முறைகளில் இருந்த மூல தெய்வங்களின் பெருமைகள் குறையத் துவங்க அதை ஏற்க முடியாமல் அவளது வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில்அந்தணர்கள் செயல்படத் துவங்கினார்கள்.
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்திற்குப் பிறகு அந்தணர்கள் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியது. அவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அந்தணர்கள் அல்லாதவர்களின் கடவுளாக, மாந்த்ரீக தாந்த்ரீக மோகினியாக, தரித்திர தேவியாக, அமங்கலமான தேவியாக சித்தரித்து, அவளது அருமை மற்றும் பெருமைகளை குறைத்துக் கூறி பரவலாக வழிபடப்பட்ட மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு குறைய தம்மால் ஆன செயல்களை செய்யத் துவங்க மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. ஆனால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி மகாலஷ்மிக்கு சற்றும் குறைந்தவள் அல்ல என்பதும், அவளே லஷ்மி கடாட்ஷம் கிடைக்க காரணமாக இருக்கின்றாள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக இருப்பதினால் பிற்காலத்தில் அவள் வழிபாடு பல இடங்களிலும் மீண்டும் தொடரத் துவங்கி உள்ளது.

No comments:

Post a Comment