Saturday, October 22, 2016

வெள்ளை நிற மல்லிகையோ......... - சுவாமி விபுலானந்தர்


தென் தமிழீழத்தின் சிறப்புமிகு புலவரான சுவாமி விபுலானந்தரின் பாடல்களை மிக நன்றாகக் பாடியுள்ளார்கள். முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!

 

வெள்ளை நிற மல்லிகையோ......... - சுவாமி விபுலானந்தர்

 

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

 வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

 உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

 

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?

உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

 

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ

 மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ

 காப்பவிழ்ந்த மலருமல்லக் கழுநீர்த் தொடையுமல்ல

 கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

 

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?

மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

 

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ

 வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ

 பாட்டளிசேர் கொன்றையல்லப் பாரிலில்லாப் பூவுமல்ல

 நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

 

பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?

பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தற் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

No comments:

Post a Comment