Saturday, February 22, 2014

சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்


சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான ...
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்! --------- (1)

ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! --------- (2)

பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே! --------- (3)

கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! --------- (4)

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்! --------- (5)

குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! --------- (6)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! --------- (7)

மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! --------- (8)

2 comments:

  1. நான் தமிழில் தேடிய ஒரு மந்திரம்.இதை தந்த ஜயாவுக்கு நன்றி.இதே போல் அனுமன் மந்திரம் தமிழில் தந்தால் பிரயோசனமாக இருக்கும்.

    ReplyDelete