Tuesday, February 18, 2014

தமிழில் கும்பாபிஷேகம் சரிதானா?

தமிழில் கும்பாபிஷேகம் சரிதானா?
தஞ்சைப் பல்கலைக் கழகத்தில், கோயில் களஞ்சியத்துறை என்று தொடங்கினார்கள் (அந்தத் துறை சில காலத்துக்குப் பின் மூடப்பட்டுவிட்டது). தமிழ்நாட்டிலுள்ள சுமார் ஒன்றரை லட்சம் கோயில்கள் குறித்து, ஒரு முறையான ஆவணப் படுத்தத்தான் இந்தத் துறை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்திலுள்ள சுமார் 20000 கோயில்களுக்கு சென்று வழிபட்டிருக்கிறார் பூசை ச. ஆட்சிலிங்கம். சைவத் திருத்தலங்களைப் பொறுத்தமட்டில் ஆகமங்கள், பூஜைகள் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள நாட்டுப்புற தெய்வங்கள், மக்களிடம் பிரபலமாகி, அவை பெருந்தெய்வங்களாக மாறிவிட்டன. நமது சமயத்தில் பல பிரிவுகளைச் சார்ந்த மக்களின் வழிபாட்டு முறைகள் வித்தியாசமாக இருக்கின்றன. பொதுவாக நாம் பசுவை வணங்குகிறோம். ஆனால், நெல்லை பகுதியில் காளை வழிபாட்டுக்குரியது. நெல்லை பகுதியில் இசக்கி என்றும் திருவண்ணாமலையில் வேடியப்பன் என்ற பெயரிலும் சிறு தெய்வ வழிபாடு உண்டு. இதேபோல ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பாக பேசப்படும் சிறு தெய்வ வழிபாடு உண்டு" என்கிறார் ஆட்சிலிங்கம்.
ஆகம முறைப்படி சைவத்தலங்களில் நடக்கும் பூஜை முறைகளை சொல்லுங்கள்.
சிவபெருமானால் அருளப்பட்டவை ஆகமங்கள். 28 ஆகமங்கள், 18 ஆச்சார்யர்களால் 18 பூஜை முறைகளாக வகுக்கப் பட்டிருக்கின்றன. இது தவிர, 205 உபாகமங்களும் உண்டு. பூஜை முறைகள் குறித்த ஆகமங்கள் தொகுப்பு ‘பூஜா பத்ததி’ என்று அழைக்கப்படுகிறது. கோயில்களில் இதன் அடிப்படையில்தான் பூஜைகள் நடைபெற வேண்டும். சிதம்பரம் மற்றும் ஆவுடையார் கோயில்களில் வேதத்தின் அடிப்படையில் பூஜைகள் நடக்கின்றன. காலை, வைகறை முதற்கொண்டு அர்த்தஜாமம் (இரவு ஒன்பது மணி) வரை ஆறுகால பூஜை செய்ய வேண்டும். நமது கோயில்களில் கட்டாயம், ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும். (அதாவது, கோயில்களில் ஒரு காலம் பூஜை கூட) அப்படிச் செய்யாவிட்டால் மன்னருக்கு தீங்கு வரும். நாட்டில் வறட்சி வருமாம். ‘முன்னவனார் கோயில் பூஜைகள் முட்டில் மன்னர்க்கு தீங்குள வாரி வளங்குன்றும்’ என்கிறார் திருமூலர்."
வைதீக முறைப்படி பூஜை; ஆகம முறைப்படி பூஜை - இவைகளைப் பற்றி?
சிவாலயங்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்களை மக்கள் இறைவனின் அம்சமாகவே பார்த்தார்கள். சுவாமியைத் தொட்டு பூஜை செய்யும் வாய்ப்பு பெற்றவராயிற்றே. மக்களின் வாழ்வில் ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் அவர்கள் பங்களிப்பு இருக்கும். உதாரணமாக, வயலில் உழவின்போது முதலில் பொன்னேர் உழவு என்றுதான் தொடங்குவார்கள். அப்போது ஏரோட்டி தொடங்கிவைப்பவர் கோயில் சிவாச்சார்யார்தான். அதுபோல் அறுவடையை தொடங்கி வைப்பவரும் அவர். அறுவடை நெல், கோயிலுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பின்னரே விற்பனைக்குப் போகும். கோயில்களில் ஆகமப் முறைப்படி பூஜைகள் நடந்தது மட்டுமல்லாமல், சில கோயில்களில் பிரத்யேகமாக ஒரு பிரிவினர் இறைவனின் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உதாரணமாக, பழநி கோயிலில் போகரைத் தொடர்ந்து, புலிப்பாணி சித்தர் வகையறாக்கள்தான், பூஜை பொறுப்பில் இருந்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் தளபதி ராமசுப்பயர் என்பவரால் அந்த நடைமுறை மாறியது. இதுபோல நடைமுறைகள் மாறப்பட்ட கோயில்கள் பல உண்டு. காலப்போக்கில் வைதிகம் தெரிந்தவர்கள் கையில் பூஜை பொறுப்புகள் மாற, ஆகமங்களின் அமுலாக்கம் சற்று குறைந்ததும், சம்ப்ரதாயங்கள் விதிகளாகவும் உருவாகும் நிலை வந்துவிட்டது. தற்காலங்களில் சம்பிரதாயமே அடிப்படையாகப் போய்விட்டது. சம்பிரதாயம் என்பது, சூழ்நிலை, கால அவகாசம், தேவைகள் ஆகியவற்றைச் பொறுத்து, காலந்தோறும் மாறுதலுக்கு உட்பட்டது."
ஆலயங்களில் உற்சவங்கள் குறித்து?
ஒரே நாள் கொண்டாடும் ஏகதின உற்சவத்திலிருந்து, பத்து நாள் கொண்டாடப்படும் உற்சவங்கள் வரை நமது தலங்களில் பல சிறிய, பெரிய உற்சவங்கள் உண்டு. வேளாண்மை நமது கிராமங்களில் முக்கியத் தொழிலாததால், பல உற்சவங்கள் அறுவடைக்கு பின்னே, மக்கள் வளமாக இருக்கும்போதும், தொழில் இல்லா காலங்களிலும் நடத்தப்படுகின்றன."
தமிழில் கும்பாபிஷேகம் (குட முழுக்கு), ஆகம முறைப்படி சரிதானா?
சமீப காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. சரியா? என்று கேட்டால், இப்போதைக்கு சரியல்ல என்றுதான் சொல்லவேண்டும். ஏன்? தென்னகத்து ஆலயங்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்டவை. ஆகவே, ஆகமப் முறைப்படி தான் குடமுழுக்கு நடத்த வேண்டும். முற்காலத்தில் அகண்ட பாரத தேசத்தில், பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குட முழுக்கை பார்க்க வந்தனர். அவர்கள் எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காக வடமொழியில் (சமஸ்கிருதம்) பூஜை வரை முறைகளை அமைத்திருந்தனர். குட முழுக்கில் ஆசீர்வாதம் சொல்லும் மந்திரங்களில் அங்கம், வங்கம், மகதம், முதலிய 56 தேசங்களிலிருந்தும் மக்கள் காணிக்கையாக கொடுத்த பொருட்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படுவதாக வருகிறது. அந்நாளில் வடமொழி பொது மொழியாக இருந்ததால், இந்த முறை சரியானதாக இருந்தது. அப்போது சமஸ்கிருத ஞானம் எல்லோருக்கும் இருந்தது. சென்ற நூற்றாண்டுவரை தமிழ்வழி கும்பாபிஷேகம் என்ற சிந்தனை எழவில்லை. ஆனால், தற்போது மனம்போன போக்கில் வேள்விச் சடங்குகள் நடந்து வருகின்றன.
சிவன் வேள்வி குண்டத்தில் திருவாசகம் ஓதியும், அம்பிகை குண்டங்களில் அபிராமி அந்தாதி ஓதியும், முருகன் குண்டங்களில் கந்தர் கலிவெண்பா ஓதியும் வேள்வி நடக்கிறது. இந்த முறை சரியானதுதானா? என்ற கேள்விக்கு உரிய பதிலில்லை. மேலும் மந்திர வித்தெழுத்துக்களான, ‘ஓம்... ஸ்ரீம், ஹ்ரீம்’ ஆகியவற்றையும் தமிழ்வழியில் பயன்படுத்துவதில்லை. மனத்துக்கேற்ப வடமொழி மந்திரங்களை மொழி பெயர்ப்பு செய்கிறார்கள். இதனால், காலப்போக்கில் மூலமும் வழக்கொழிந்து, வழிமுறைகளும் சிதைந்து மொத்தமும் வீணாகிவிடும் அபாயமுள்ளது.
இரண்டு உதாரணங்கள். யாக சாலையில் பிரவேசம் செய்யும்போது, ‘பேரெழில் மிக்க பெரும் பந்தல் உட்புகுவோம்’ என்று தமிழில் சொல்கிறார்கள். இதில், ‘பந்தல்’ என்ற வார்த்தையை நகரத்தார் பகுதியில் ஆட்சேபிக்கிறார்கள். செட்டிநாடு பகுதிகளில் ‘பந்தல்’ என்பது இழவு வீட்டில் போடப்படுவது. எனவே, அந்தப் பகுதிகளில் ‘பந்தல்’ என்று வரும்போது, ‘காவணம்’ என்று சொல்லவேண்டும். இதுபோல ஒரு தமிழ்ச்சொல் பல பகுதிகளில் பலவாறாக அர்த்தம் கொண்டுள்ளது.
அடுத்த முரண்பாடு தத்துவார்த்த அடிப்படையிலானது. சமயக் குரவர்கள் நால்வரை கும்பத்தில் எழுந்தருளச் செய்வதாக தமிழில் சொல்வார்கள். வடமொழியில் முப்பத்து முக்கோடி தேவர்களை எழுந்தருளச் செய்வதற்கும், தமிழில் சமயக் குரவர்களை எழுந்தருளச் செய்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. சைவம் கூறும் உயர் நெறிப்படி, ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ‘பரமுக்தி’ என்ற மீட்டும் வாரா நிலையை அடைந்தவர்கள். அவர்களை கும்பத்தில் எழுந்தருளச் செய்வது எவ்விதம் பொருத்தமாகும்?
இதுபோல பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் தமிழ்வழி குடமுழுக்கில் உண்டு. தற்போதைய நிலைப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது சரியல்ல என்பது என் கருத்து. எதிர்காலத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வழிமுறைகளும், நெறிகளும் உருவாக்கப்படுமேயானால், வாழ்த்தி வரவேற்கத் தயாராக இருக்கிறோம்."

1 comment:

  1. தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயில் எதற்க்கு? தமிழகத்திற்க்கு அற்ப்ப இழிகுல மொழியான சமஸ்கிரதம் தமிழர்களுக்கு தேவையில்லை! தாய்மொழியே தாயினும் சிறந்தது!
    கடவுளையும் விட புனிதமானது! தொன்மையானது!
    மொழியில்லாமல் கடவுள் என்னும் கற்ப்பனை பாத்திரம் படைக்கப்பட்டிருக்க முடியாது!

    ReplyDelete