Tuesday, February 18, 2014

நமது ஆலயங்கள் ஆற்ற வேண்டிய பணிகள்

நமது ஆலயங்கள் ஆற்ற வேண்டிய பணிகள்
சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
(முன்னாள் உதவிப் பணிப்பாளர், இந்து கலாச்சார அமைச்சு)
ஆலயங்கள் கிராமத்தின் உயிர்மையம்
ஆன்மா இறைவனிடம் லயப்படும் இடமே ஆலயமாகும். பசுவின் குருதியெங்கும் பரந்தோடுகின்ற பாலானது பக்குவப்பட்டு அதன் மடியிலே சுரப்பது போலப் பஞ்சபூதங்களிலும் வியாபித்திருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன் ஆலயங்களிலே தெய்வ சாந்நித்தியத்துடன் வீற்றிருந்து அருள் புரிகின்றான். ஆலயங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்த நமது முன்னோர்கள் கிராமங்கள் தோறும் பல ஆலயங்களைக் கட்டினார்கள். கோயில்கள் இருக்கும் சூழலிலே தான் மக்கள் குடிமனைகளைக் கட்டினார்கள். ஷஷகோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்|| என்றே தமிழ் மூதாட்டி ஒளவையாரும் கூறியுள்ளார். கோயில் இல்லாத ஊர் பற்றைகள் சூழ்ந்தும், வன விலங்குகள் வாழ்வதுமாகிய காடாக மாறி விடும் என்பதைத் ஷஷதிருக்கோயிலில்லாத திருவிலுரும் அடவிக் காடே என அப்பர் பெருமானும் குறிப்பிடுகின்றார்.
சமூகத்தின் உயிர் மையங்களாகத் திகழும் கோயில்கள் ஆன்மீக நிலையங்களாக மட்டுமன்றி கலைகளை வளர்க்கும் கலாமன்றங்களாகவும், அறம் பேணும் அறச்சாலைகளாகவும், பசிப்பிணி போக்கும் மருத்துவ நிலையங்களாகவும், அறிவூட்டும் அறிவாலயங்களாகவும் பலவகைப் பரிமானங்களில் திகழ்ந்த வரலாற்றினைத் தமிழகத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிலவியதை வரலாற்று மூலகங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆலயங்களில் நடைபெற வேண்டியவை
ஆலயங்களில் நித்திய நைமித்தியக் கிரியைகள் ஒழுங்காக நேரம் தவறாமல் நடைபெறுதல் மிகவும் முக்கியமானதாகும். இவற்றுக்கு முட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் பல தீமைகள் ஏற்படும். அரசனுக்கு தீங்குகள் ஏற்படுவதோடு மழைவளமும் குறையத் திருட்டுக்களும் நாட்டில் அதிகரிக்கும் எனத் தனது குருநாதராகிய திருநந்தி தேவர் தனக்கு எடுத்துரைத்தார் என்கிறார் திருமூலர்.
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்து ரைத்தானே
ஆலயங்களில் நடைபெறும் சகல காரியங்களும் விழாக்களும் மக்களிடம் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி மனிதன் புனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவதாக அமைதல் வேண்டும். கேளிக்கைகள், களியாட்டங்கள் நடைபெறும் இடங்களாக ஆலயங்கள் மாறக்கூடாது. சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் நிலையங்களாக இருத்தல் வேண்டுமே ஒழிய சமூகப் பிரிவினைகளை வளர்க்கும் இடங்களாக ஆலயங்கள் அமைதல் கூடாது.
சிவாலயங்களுக்கு செல்லும் சிவனடியார்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சிவாலய தரிசனவிதி என்ற நூலில் நாவலர் பெருமான் தெளிவாக விளக்கியுள்ளார். ஷஷநீறில்லா நெற்றி பாழ்|| என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் வாக்காகும். திருநீறு அணியாதவர்களின் முகம் சுடலைக்குச் சமன் எனச் சூத சங்கிதை என்ற நூல் கூறுகிறது. நீராடித் தோய்த்துலர்ந்த வஸ்திரம் தரித்து சிவ சின்னங்களை அணிந்து கொண்டு பய பக்தியுடன் அடியார்கள் ஆலயங்களுக்குச் செல்லுதல் அவசியமாகும். பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை எதுவும் ஆலயத்தினுள் பேசக் கூடாது.
ஆலய வீதிகளைத் தூய்மைப் படுத்தல், ஆலயத்தைக் கூட்டிக் கழுவிச் சுத்தம் செய்தல், தீப விளக்குகளை ஏற்றுதல், மாலை கட்டுதல், வாகனம் காவுதல், குடை பிடித்தல், சாமரை வீசுதல், தீவர்த்தி பிடித்தல், சுவாமிpக்குப் பின்னால் பஜனை பாடுதல், ஆகிய திருத்தொண்டுகளில் ஏதாவது ஒன்றில் அடியார்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும். வேதாகம ஒலியும், திருமுறை ஒலியும் மட்டுமே ஆலயத்தில் ஒலிக்கப்படல் வேண்டும். கைத் தொலைபேசிகளின் ஒலிகள் ஆலயத்தினுள் கேட்பதை நிறுத்த வேண்டும். மகோற்சவ காலங்களில் சமயச் சொற்பொழிவுகள் இடம் பெறுதல் அவசியமாகும். ஆலயச் சூழலும் ஆலயமும் மிகவும் புனிதமாகப் பேணப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
தொண்டர்களுக்கும் பக்தர்களுக்கும் உரிய இடமே ஆலயமாகும். அசுர குணம் படைத்தவர்கள் எவரும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது.
ஷஷமிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்||
என்றே சேந்தனாரும் திருப்பல்லாண்டில் கூறுகின்றார். தொண்டு செய்பவர்கள் மதிக்கப்படல் வேண்டும். போற்றப்படல் வேண்டும். இன்று நமது ஆலயங்களில் ஊதியத்திற்காகத் தொழில் செய்பவர்களே மிகுதியாகக் காணப்படுகின்றார்கள். இவர்கள் ஆலயங்களைத் தமக்குத் தொழில் வழங்கும் நிறுவனங் களாகவே நினைக்கிறார்கள். நமது சமூகம் தொழில் செய்பவர் களைப் போற்றுகின்றதே ஒழியத் தொண்டு செய்பவர்களை உதாசீனம் செய்தே வருகிறது. பக்தர்களும், தொண்டர்களும் ஆலயத்திற்கு மிகுதியாக வருகை தந்தால் ஆலயத்தின் அருள் வீச்சு அதிகரிக்கும்.
பிரதிஷடா குருவின் பணிகள்
ஆலயங்களில் பிரதிஷ;டை செய்யப்பட்டிருக்கும் இறை உருவங்களில் தெய்வ சாந்நித்தியத்தை ஏற்படுத்தும் பணி பிரதிஷ;டா குருவாகிய சிவாசாரியாரிடத்திலேயே உள்ளது. அர்ச்சகருடைய பிரபாவத்தினால் தான் சிலை சிவனாகத் தெரிகிறது என்பதை ஷஷஅர்ச்ச கஸ்ய பிரபாவேன சிவா பவதிசங்கர்|| எனக் காரணாகமம் கூறுகிறது. சிவாச்சாரியார் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசாரிய அபிNஷகம் அனைத்தும் பெற்றவராய், ஆகமக் கிரியா வல்லுணராய், குரு, சிவாக்கினி, கடவுள் ஆகிய மூன்றிலும் நீங்காத பற்றுடையவராய், காம குரோதங்களில் இருந்து விடுபட்டவராய் பொது ஜனங்களில் பற்றுடையவராய் இருத்தல் வேண்டும் என்று ஆகமம் கூறுகிறது. சிவக் கோலத்தோடு பக்தி பூர்வமாகச் சிவாச்சாரியார்கள் கிரியைகளைச் செய்தால் ஆலயம் திருவருள் சுரக்கும் நிலையமாக மாறும். அடியார்கள் தமது வாழ்வில் இகபர நலன்கள் அனைத்தையும் பெறுவர். நாட்டின் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். கொலை, களவு போன்ற தீய செயல்கள் எதுவும் நாட்டில் இடம் பெறாது.
காரணாகமம் குறிப்பிட்ட பிரதிஷ;டா குருவிற்குரிய இலக்கணங்களைப் பேணாதவர்கள் ஆலயக் கிரியைகளைச் செய்தால் எதிர்மறையான விளைவுகள் பல நாட்டில் ஏற்படும். வீரம் கொண்ட மன்னர்களுக்குக் கூடப் பொல்லாத நோய்கள் ஏற்பட்டு விடும். செல்வச் செழிப்பு மிக்க நாடு பஞ்சத்தில் வாடும் நிலைக்குத் தள்ளப்படும்.. தனி மனித வாழ்வில் ஒழுக்கத்தைப் பேணாத அந்தணர்கள் பிரதிஷ;டா குருவாக இருந்தால் அரசனுக்கும் நாட்டிற்கும், மக்களுக்கும் துன்பந்தான் ஏற்படும் எனத் திருமந்திரம் கூறுகிறது.
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தற்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர் கொண்ட நந்தி எடுத்துரைத்தானே.
ஆலயங்களை நிர்வகிப்போரின் தகுதிகள்
சமய ஒழுக்கத்தினைப் பேணுபவர்களே ஆலய நிர்வாகிகளாக இருத்தல் வேண்டும். ஆசார சீலர்களாக, சமய அனுஷ;டானங்களைப் பேணி வாழ்பவர்களாக, வழிபட வரும் அடியவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக் கூடியவர்களாக இருத்தல் அவசியமாகும். தான் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனாக இப்பிறப்பில் ஆலயத்தைப் பரிபாலனம் செய்யும் பதவி கிடைத்துள்ளது என்று நினைத்து தனது பணிகளைச் செய்தல் வேண்டும். கோயில் சொத்து சிவன் சொத்து. இது அக்கினிக்குச் சமன். கோயில் சொத்தில் கை வைப்பவர்களுக்கு குலநாசம் ஏற்படும். கோயில் நிர்வாகிகளுக்கு மறந்தும் ஆணவத் திமிர் ஏற்படக் கூடாது. ஆலயங்களில் ஆணவத் திமிருடன் அட்டகாசம் புரிந்த ஆலய நிர்வாகிகள் பலரின் வாழ்வே அஸ்தமனமாகிவிட்ட வரலாற்றினை நாமே நேரில் பார்த்திருக்கின்றோம்.
கலைகளைப் பேணுவது ஆலயங்களின் கடமை
இந்து சமயத்தில் சமயமும் கலைகளும் பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றன. கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் ஆகிய சகல கலைகளும் ஆலயங்களை மையமாக வைத்தே வளர்ந்து வந்தன. நுன்கலைகளாகிய இசை, நடனக் கலைகளை ஆலயங்கள் பேணி வளர்த்தல் வேண்டும். இறைவனை இசையினால் நம்பக்கம் இசைவிக்கலாம் என்றே வேதங்களும் கூறுகின்றன. இன்னிசை மலர்கள் என்று போற்றப்படும் அருளாளர்கள் தந்த திருமுறைப் பாடல்களைப் பண்ணோடு பாடும் பயிற்சி வகுப்புக்கள் ஆலயங்கள் அல்லது ஆலயச் சூழலில் உள்ள மடங்களில் நடாத்தப்படல் வேண்டும். இசைக் கருவிகளாகிய வயலின், மிருதங்கம் ஆகியவற்றை பயிலக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அவசியமாகும். மலர், நீர், தூப தீபம் ஆகியவற்றினால் இறைவனை வழிபடுவதிலும் பார்க்க நிருத்தியோபசாரம் ஆகிய நாட்டியத்தினால் வழிபடுவதையே இறைவன் பெரிதும் விரும்புவான் என நிருத்தியரத்னாவளி என்ற நூல் குறிப்பிடுகிறது. பரத நாட்டியம் ஒரு தெய்வீகக் கலையாகவே போற்றப்படுகிறது. இக் கலைகளைப் பேணி வளர்க்கும் கேந்திர நிலையங்களாக ஆலயங்கள் உருவாகுதல் அவசியமாகும்.
ஆலயங்கள் ஆன்மீக அலையைப் பரப்பும் ஒளி நிலையங்கள்
ஆலயச் சூழலில் அறநெறிப் பாடசாலைகள் அமைதல் மிகவும் அவசியமாகும். அற விழுமியங்கள் சிறிய வயதில் மாணவர்களின் உள்ளத்தில் பதிந்து விட்டால் அவர்களுடைய வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும். அறநெறிப் பாடசாலைகளில் நீதி நூல்கள், சமய நூல்கள் என்பவற்றை மாணவர்களுக்குப் போதிப்பதால் சிறிய வயதிலேயே ஆன்மீக நாட்டம் அவர்களிடம் தோற்றம் பெற்றுவிடும்.
அலைபாயும் மனிதமனம் ஒரு நெறிப்பட்டு இறைவனோடு இணைவதற்கு பிரார்த்தனை துணை செய்யும். பலர் ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்யும் கூட்டுப் பிரார்த்தனையினால் ஆலயத்தின் தெய்வீக சக்தி அதிகரிக்கும். புராண படனம் கோயில்களில் இடம் பெற்றால் மக்களுடைய சமய அறிவும் , மொழி அறிவும் வளர்ச்சி அடையும். வெள்ளிக்கிழமைகளில் விழாக் காலங்களில் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் எங்கள் சமயத்தின் கருப்பொருள்களை அறிந்து கொள்ளக்கூடியதாக சைவ நற்சிந்தனைகளை சமயச் சொற்பொழிவுகளை நடாத்துதல் மிகவும் இன்றியமையாததாகும். ஆலய வழிபாடு முடிந்து வீட்டிற்குச் செல்லும் அடியார்களின் சிந்தனையில் ஆரோக்கியமான சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு இவை துணை செய்யும்.
நன்றி: ஆத்மஜோதி, கனடா

No comments:

Post a Comment