Tuesday, November 18, 2014

கல்லான மனமும் கனியாகும்

பாணாசுரன் என்ற அசுரன் கடும் தவம் இருந்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான்.
""உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்,'' என்ற பிரம்மா, ஒரு கன்னியின் மூலமாக அவனுக்கு மரணம் நேருமென்றும், அதுவரை தீர்க்காயுளைத் தருவதாகவும் உறுதியளித்தார். வலிமையற்ற ஒரு பெண்ணால், தன்னை என்ன செய்து விட முடியும் என்ற ஆணவத்தில், பாணாசுரன் உலக மக்களைக்
கொடுமைப்படுத்தி வந்தான்.
தன் குழந்தைகள் படும்பாடு கண்ட பார்வதிதேவி, கன்னியாக பூலோகத்தில் பிறப்பெடுத்தாள். பகவதி என்னும் திருநாமம் பெற்று, தவமிருந்து சக்தி பெற்று, பாணாசுரனை அழிக்கும் வல்லமை பெற்றாள்.
இதற்கிடையே, அவளைக் கண்ட நாரதர் அவளது அழகு பற்றி சிவனிடம் தெரிவித்தார். அவளை மணக்க விரும்புவதாக சிவன் தெரிவித்தார். இதை கன்னி பகவதியிடம் தெரிவித்தார் நாரதர்.
கன்னியாக இருந்தால் தான் அசுரனை அழிக்க முடியும் என்பதால், பகவதி திருமணத்துக்கு மறுத்தாள். இருப்பினும், ஈசனால் ஆகாதது ஏதுமில்லை என்பதால், காம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு,
கண் இல்லாத தேங்காயை எடுத்துக் கொண்டு, பொழுது விடிவதற்குள் தான் தங்கியுள்ள குமரிமுனைக்கு ஈசன் வந்துவிட்டால், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தாள்.
இதை சிவனிடம் நாரதர் சொல்ல, சிவன் உடனடியாக அந்தப் பொருட்களைப் பெற்று குமரி நோக்கி புறப்பட்டார். விபரீதத்தை உணர்ந்த நாரதர், சேவலாக மாறி கூவி, விடிந்து விட்டதாக நாடகமாடினார். சிவன்
திரும்பி விட்டார். பகவதிதேவி, பாணாசுரனை அழித்து வெற்றிக்கொடி நாட்டினாள். கன்னியாகுமரியில் வீற்றுள்ள அந்த கன்னி பகவதியை வணங்கினால், கல்லான மனமும் கனியாகும்.

No comments:

Post a Comment