Thursday, November 27, 2014

கண்ணனின் அழிவிற்க்கு காரணமான அம்பு...

மகாபாரத நாயகர்கள் (பர்பரீக் (பார்பரிகா) )
கண்ணனின் அழிவிற்க்கு காரணமான அம்பு...
ஜரா என்ற வேடனின் (முற்பிறவியில் வானர வேந்தன் வாலி ஆவான்) கவனத்தைக் கவர்ந்து புத்தியை மறைத்து தனது இடது கால் பெருவிரல் அவனுக்கு ஒரு மானின் கண்ணாகத் தோற்றமளிக்கச் செய்து, அவன் எய்த பாணம் காலைச் சிதைத்து விட உயிர் துறந்தார் கிருஷ்ண பரமாத்மா என்பதை நாம் நன்கறிவோம். கிருஷ்ண பரமாத்மாவின் உடலில் பலவீனமாக உறுப்பு ஒன்று இருந்தது என்றால், அது கால் பாதப் பகுதிதான்.
ஒரு சமயம் துர்வாச மகரிஷி தேவகி நந்தனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார், அதாவது, எந்த ஆயுதத்தாலும் அவரது உடலின் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. கால் பகுதியைத் தவிர என்பதே அந்த வரம். அதுவே ஒருவிதத்தில் சாபமாகவும் மாறிவிட்டது. பலவீனமாக்கப்பட்ட அந்த இடது கால் பாண்டவர்களுக்குப் பலமாகவே அமைந்துவிட்டது என்பதைப் பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம். குரு÷க்ஷத்திரப் போரின் விளைவை மாற்றியமைத்த பெருமை அதற்கு உண்டு! மானுடனாக அவதறித்தால் அதற்கே உரிய மரணநிலையைத் தேர்ந்தெடுத்து வைகுண்டம் ஏக விருப்பம் கொண்டவர் அல்லவோ அந்த மாலவன்! அதற்கும் அந்தக் கால் காரணமாகி விட்டது.
அந்தப் பின்னணி நிகழ்வைப் பார்ப்போம்... தனது ஞான திருஷ்டியால் சஞ்சயன் பாரதப் போரின் நிகழ்வுகளை மன்னன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்னான். சஞ்சயனைத் தவிர மேலும் இருவர் போர் நிலவரத்தைக் கண்காணித்தார்கள். அர்ஜுனனின் மகன் அரவான் போர் ஆரம்பிக்கும்முன் களப்பலி கொடுக்கப்பட்டான். மற்றொருவன், பீமனின் பேரனும், கடோத்கஜனின் புத்திரனுமான பர்பரீக், குருதட்சணையாகத் தன் சிரசையே ஸ்ரீகிருஷ்ணருக்குக் காணிக்கை ஆக்கியவன்!
இருவரது விருப்பத்தையும் நிறைவேற்றும் விதமாகப் போர்களத்தின் அருகிலிருந்த ஒரு குன்றின் மீது அவர்களின் தலையை இருத்தி, போர்க்கள நடப்புகளைப் பார்வையிட வைத்தான் மாதவன்! மாவீரன் பர்பரீக்குக்கும், கிருஷ்ணரின் மறைவுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.
பராக்கிரமசாலி கடோத்கஜனுக்கும், தேவி காமாக்யாவின் உபாசகியும், மந்திரத் தந்திரங்களில் கைதேர்ந்தவளும் நரகாசுரனின் சேனாதிபதி முரனின் புத்திரியுமான மவுர்விக்கும் பிறந்தவன் பர்பரீக் (பார்பரிகா) சிறு வயதிலிருந்தே ஒப்புயர்வற்ற சிறந்த வீரனாக விளங்க, அவனுக்கு அனைத்துப் போர் வித்தைகளையும் அவனது தாயாரும், பாட்டி இடும்பியும் கற்றுத் தந்தார்கள். இவன் பரமேஸ்வரரிடமிருந்து இலக்கைத் துல்லியமாகக் கணிக்கும் இணையில்லா மூன்று அம்புகளைப் பெற்றான். அக்னி தேவன் மூவுலகையும் வென்று வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு தனுசை அவனுக்கு அளித்தான். ஸ்ரீகிருஷ்ணரைத் தன் மானசீகக் குருவாக ஏற்று, அவரிடமும் சிட்சை பெற்றான். அவனது முதல் அம்பு அழிக்க வேண்டிய இலக்குகளைக் குறிப்பெடுத்துவிட்டு அவனிடமே திரும்பிவிடும். யாரையெல்லாம் காப்பாற்ற வேண்டுமோ அவர்களை அடையாளமிட்டுத் திரும்பும் இரண்டாவது அம்பு. குறியிடாதவர்களை மூன்றாவது அம்பு அழித்துவிட்டுத் திரும்பும். ஆதலால் போர்க்களத்தில் அவனொருவனே வெற்றி வீரனாக திகழ்வான்.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பர்பரீக், தன் தாயாரிடம் ஒரு வாக்குறுதியையும் அளித்திருந்தான். அதன்பின் விளைவுகளை அறியாமலேயே போர்களத்தில் எந்தப் பக்கத்து சேனை வலுவிழந்து நிற்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து போரிடுவேன் எனச் சத்தியமளித்திருந்தான். அதன்படி பார்த்தால், மாறிமாறி இரு புறமும் நின்று போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்! முடிவில் அவன் ஒருவனே மிஞ்சியிருப்பான். கவுரவ சேனையை விட பாண்டவர்களின் சேனை பலம் குறைவாகவே இருந்ததால் பர்பரீக் பாண்டவர்கள் பக்கம் இருக்கவே தீர்மானித்தான். பாண்டவர்களைக் காப்பாற்ற விழைந்த கிருஷ்ணர் அவனை மடக்க யோசிக்காமலா இருப்பார். 
பர்பரீக்கைச் சோதிக்க எண்ணியவர் போல அவனை ஒரு அரசமரத்தின் அருகே அழைத்துச் சென்று அதன் இலைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கட்டச் சொன்னார். சவாலை ஏற்றுக் கொண்ட பர்பரீக், சில வினாடி கண் மூடி தியானித்தான். இத்தருணத்தையே எதிர் நோக்கிய மாயக் கண்ணன் மரத்திலிருந்து ஒரே ஒரு இலையைப் பறித்துத் தன் இடது பாதத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டான். பர்பரீக்கின் முதல் அம்பு மரத்திலுள்ள எல்லா இலைகளையும் கோர்த்துக் கொண்டு முடிவில் கிருஷ்ணரின் பாதங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.
ஏதுமறியாததுபோல் ஏன் இப்படி? என்று கிருஷ்ணரும் வினவ பாதத்தின் கீழ் இலை ஒன்று இருக்கிறது. அதைக் குறியிடாமல் அம்பு திரும்பாது என்று பர்பரீக் கூற, கிருஷ்ணரும் தன் பாதத்தைச் சுற்றி தூக்கினார். அம்பும் கிருஷ்ணரின் காலில் ஊடேறிச் சென்று இலையைக் குறியிட்டது! மூன்றாவது அம்பு எல்லா இலைகளையும் கட்டாகக் கட்டிவிட்டது. அதனாலேயே கிருஷ்ணரின் இடது பாதம் பலவீனமாகி அவரது மறைவுக்கும் காரணமாகிவிட்டது! அவனைப் போர்களத்திலிருந்து விலக்கி வைக்க முடிவெடுத்தார். அவன் எடுத்த சபதம் அறிவுக்கு எவ்வளவு பொருத்தமாயிற்று என்பதை விளக்கினார். அதனை ஏற்ற பர்பரீக் குருவின் விருப்பப்படி முடிவெடுக்கத் தீர்மானித்தான். குரு தட்சணையாக அவனது சிரசையே கிருஷ்ணர் தானமாகக் கேட்க பர்பரீக்கும் சற்றும் தயங்காமல் தன் கழுத்தைச் சீவி காணிக்கையாக்கினான். அவனது விருப்பப்படி அவன் சிரசு குரு÷க்ஷத்திரத்தின் அருகிலுள்ள ஒரு குன்றின் மீது சகலவித மரியாதைகளும் செய்விக்கப்பட்டு அரவானுடன் சேர்ந்து பர்பரீக்கும் பாரதப்போரின் நிகழ்வுகளைக் கண்காணித்தான்.
மேலும் அவனது வேண்டுகோளின்படி ஷ்யாம் எனும் தன் மற்றொரு பெயராலேயே அவனைக் கலியுகத்தில் எல்லாராலும் போற்றி வணங்கிட கிருஷ்ணர் வரமளித்தார். கலியுகக் கண்ணனாக விளங்கும் ஷ்யாம் பர்பரீகாவை வழிபடுபவர்கள் அவன் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நற்கதியடைவார்கள். விருப்பங்கள் நிறைவேறும். எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும் என்றும் அருளினார். மோட்சம் கிடைத்தது அவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீகிருஷ்ணரை மாய்த்த வேடன் ஜராவுக்கும் வைகுண்டப் பிராப்தி கிடைத்தது.

No comments:

Post a Comment