Monday, November 24, 2014

வீண் பழியும் இலவம் பஞ்சும்

வீண் பழியும் இலவம் பஞ்சும்
ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.
பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே!
நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.
உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது.
திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” 
என்று கூறினார்.
வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.

No comments:

Post a Comment