Wednesday, November 19, 2014

உடைமை ஆசையைத் துறக்க இறைவன் செய்த லீலை!

ஒரு கமண்டல ஆசையில் இப்படி மூட நம்பிக்கைக்கு வழி வகுத்துவிட்டோமே!
ஒரு சந்நியாசி கங்கையில் குளிக்கச் சென்றார். அவரின் ஒரே சொத்து கமண்டலம் தான். கங்கையில் முங்கிக் குளிக்கும் போது யாராவது கமண்டலத்தை லவட்டிவிடுவார்கள் என்ற பயம்! அக்கம்பக்கம் எவருமில்லை.உடனே கமண்டலத்தை மணலில் புதைத்து ஒரு கோபுரம் போல் அடையாளத்திற்காக மண்ணை மூடிவைத்தார். " அப்பாடா! இன்னைக்காவது நிம்மதியாக கங்கையில் நீராடலாம்!" என்று நீராடச் சென்றார். கமண்டலம் தொலையாது என்ற சந்தோசத்தில் நீந்தி நீந்தி குளித்தார். அரை மணி நேரம் குளித்து நதியை விட்டு வெளியே வந்த சந்நியாசி பார்த்த காட்சி அவரைப் பதறச் செய்தது. அவர் செய்த மணல் கோபுரம் போல் நூற்றுக் கணக்கான மணல் கோபுரங்கள் நதிக்கரையில்! அச்சசல் அவரது கமண்டலக் கோபுரம் போலவே! " சிவ சிவா! என் கமண்டலத்தை எப்படி அடையாளம் காண்பேன்!" எனப் பதைத்தார்.
ஒவ்வொரு மணல் கோபுரமாக எட்டி உதைக்கத் தொடங்கினார். பலர் ஓடி வந்து அவரைப் பிடித்துவைத்து " சாமி! ஏன் இந்த சிவலிங்கங்களை எட்டி உதைக்கிறீர்கள்! கங்கையில் குளிக்கும் முன் இப்படி மணல் லிங்கங்களைச் செய்துவிட்டு பக்தர்கள் குளிப்பது மரபு!" என்றார்கள்.
"எந்த மடையன் சொன்னான் ?!" என்றார் சந்நியாசி . பின் மறுபடியும் மணல் மேடுகளை உடைத்துக் கமண்டலம் தேட ஆரம்பிக்கவிடாமல் அவரைக் கட்டாகத் தூக்கி " இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!" என்று பல காதம் தொலைவில் கொண்டுவிட்டார்கள்.
"நானா பைத்தியம்! நீங்கள் தானடா முட்டாள்கள் !" என்றார். " அடச் ச! நாம் செய்த மணல் குவியலை ஏதோ ஒருவன் மறைந்திருந்து பார்த்து பொருள் புரியாமல் அவ்வாறே செய்ய ஒரு கமண்டல ஆசையில் இப்படி மூட நம்பிக்கைக்கு வழி வகுத்துவிட்டோமே!" என நொந்தார்.
அவரது உடைமை ஆசையைத் துறக்க இறைவன் செய்த லீலை!
கீதையும் இதை அழகாகச் சொல்கிறது. " போற்றத் தக்கவர்கள் எதைச் செய்தாலும் சாதாரண மக்கள் அவ்வாறே செய்வார்கள்.
அதனால் போற்றத் தக்கவர்கள் மிக மிக எச்சரிக்கையாக நெறிபிறழாமல் "சான்றாக" வாழ்ந்து சான்றோன் எனப் பெறவேண்டும்!"

No comments:

Post a Comment