Tuesday, February 8, 2011

இறைவன் உண்டியலுக்கா மயங்குவார்? -

இறைவன் உண்டியலுக்கா மயங்குவார்? -
"" வியாபாரி ஒருவர் காலையில் எழுந்ததும் "கோவிந்தா, கோபாலா, மாயவா, மதுசூதனா, புண்டரீகாக்ஷ�, பத்மநாபா, வேங்கடரமணா, வேங்கடவா...' என பெருமாளை மனதார துதித்து, பக்தி பரவசத்துடன் வியாபாரத்தை துவக்குவார். அன்று வியாபாரம் சிறப்பாக இருக்கும். இரவில் கடையடைக்கும்போது, பணத்தைக் கட்டுப்போட்டே கை வீங்கிவிடும். அந்தளவுக்கு கொழுத்த வருமானம்...
இப்படியே பல நாட்கள் கடந்தது. ஒருநாள் ஏகாதசி விரதம். வழக்கத்தை விட இரண்டு மடங்கு தடவை சுவாமியைத் துதித்தார்.
""ஏ வெங்கேடேசா! உனக்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறதாம். இது உனக்குப் போதாது. நானும் உன்னை என் பார்ட்னராக சேர்த்துக் கொள்கிறேன். உனக்குத் தினமும் லாபத்தில் பத்தில் ஒரு பங்கை எடுத்து வைத்து விடுகிறேன். வருஷந்தோறும் திருமலைக்கு வந்து உன் பங்கை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி விடுகிறேன். புரியுதா?'' என்று இவராகவே இறைவனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுவிட்டு, அவருக்கென ஒரு பங்கையும் எடுத்து வைத்தார். இறைவனுக்கு பங்கை சரியாக எடுத்து வைத்த அவர், அரசுக்கு முறையாகச் செலுத்த வேண்டிய வரி எதையும் செலுத்தவில்லை. அரசாங்கத்தை ஏமாற்றி விடலாம். அதிகாரிகள் வந்தாலும் கூட வெங்கடேசனை பார்ட்னராக சேர்த்துள்ள தால் அவன் பார்த்துக் கொள்வான் என்ற அசட்டுத்தன மான தைரியம் வேறு!
அதிகாரிகள் விடுவார்களா என்ன! ஒருநாள் கடைக்கு வணிகவரித்துறையில் இருந்து அதிகாரிகள் வந்தனர். வியாபாரியிடம் "கணக்கை எடுங்க!' என்றார்கள். வியாபாரிக்கு வெடவெடத்து விட்டது. அவர்களிடம் பதில் சொல்ல நாக்கு தள்ளாடியது. அவர்கள் வியாபாரிக்கு அபராதம் போட்டு விட்டார்கள். அதுவரையில் லாபமாக கிடைத்த பணமெல்லாம் போய்விட்டது. அவ்வளவுதான்! வெங்கடேசன் இப்போது திட்டு வாங்க துவங்கிவிட்டார்.
""உன்னைப்போய் கும்பிட்டேன் பாரு, நெனச்சேன்! என்னைக்காவது ஒருநாள் இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியும். உன் நாமம் கண்ணை மறைச்சிருச்சா? இல்ல தூங்கிட்டியா? சரியான ஆளுதான்யா நீ! உன்னைப் போய் பார்ட்னரா சேர்த்தேன் பாரு! போ... போ...
இந்த வருஷம் உனக்கு உண்டியல் கிடையாது,'' என ஏகத்துக்கும் திட்ட ஆரம்பித்து விட்டார்.
பிறகென்ன! வியாபாரத்தை திரும்ப நடத்த கடன் வாங்க வேண்டிய நிலை வந்து விட்டது.
தப்பையும் செய்துவிட்டு கடவுளுக்கு உண்டியல் செலுத்தி சரிக்கட்டி விடலாம் என்று தான் உலகம் நினைக்கிறது. கடவுள் நமக்கு நல்லது செய்யாவிட்டால் கடுமையாகத் திட்டுகிறார்கள். இந்த ஏச்சும், பேச்சும் இறைவனை ஒன்றும் செய்யாது. நாம் நாத்தி கனானாலும் சரி... ஆத்திகனா னாலும் சரி...அவன் நமக்கு பயப்படவும் மாட்டான், அகப்படவும் மாட்டான். இறைவன் உலகில் பெருகும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும், பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கோபம் வந்தால் என்னாகுமோ தெரியவில்லை.





No comments:

Post a Comment