Tuesday, February 8, 2011

கோமாதாவை பூஜித்தால் -

கோமாதாவை பூஜித்தால் -
பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும். பசுமாடு என்றால், பால் கொடுக்கும் ஒரு விலங்கு என்று நினைக்கிறோம்; ஆனால், அது ஒரு தெய்வீக விலங்கு. மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த பசுக்கள் எப்படி தோன்றியது என்பதும் புராணத்தில் உள்ளது.ஆதிகாலத்தில், கடும் தவம் செய்து சுரபி என்னும் கோவையும், அதோடு கூட ஒரு ஆச்சரியமான புருஷனையும் உண்டு பண்ணினார் பிரம்ம தேவர். இவர்களின் வழி வந்தவை தான் பசுக்கள். இவர்களால் பசுக் கூட்டம் உண்டாயிற்று.
பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம். பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.
பசுவின் கொம்பு, முகம், நாக்கு இவைகளில் தேவேந்திரன் இருக்கிறான்; எல்லா துவாரங்களிலும் வாயு இருக்கிறான்; கால்களில் - சப்த மருத்துக்கன்; கொண்டையில்- ருத்ரன்; வயிற்றில்-அக்னி; காம்புகளில்- சரஸ்வதி; கோமயத்தில்-லட்சுமி; மலத்தில்-கீர்த்தியும், கங்கையும்; பாலில்-மேதை; வாயில்- சந்திர பகவானும்...
இதயத்தில் - எமனும்; வாலில் - தர்ம தேவதையும்; மயிர்க்கால்களில் - யாகம் முதலிய கிரியைகளும்; கண்களில் - சூரியனும்; பூட்டுக்களில் - சித்தர்களும்; அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும் உள்ளனர்.
இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். உலகிற்கு சிறந்த புண்ணியமும், ஹோமத் திரவியமும் கொடுக்கிறது.
சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, துக்கப்பட்ட பிறகு, வம்சத்து ரிஷி ஒருவர், பசும்பாலின் நுரையை உட்கொண்டு கோலோகத்தை அடைந்தாராம். பசுவை வளர்த்துப் பாதுகாப்பதிலேயே, கண்ணும், கருத்துமாக இருந்தார் அந்த ரிஷி. பசுவின் பாலை கறக்காமல், கன்றுக் குட்டி குடிக்கட்டும் என்று விட்டுவிடுவார்.
தாய்ப் பசுவிடம், கன்றுக் குட்டிகள் பால் குடித்த பிறகு, பசுவின் மடியில் இருக்கும் பாலின் நுரையை மட்டும் இவர் சாப்பிட்டு ஜீவித்து வந்தார். தபஸ்வியான இவர் இப்படி செய்து, பிறகு சொர்க்கம் சென்றார் என்பது கதை.பசு மாடு என்றால், அதன் பாலை ஒட்டக் கறந்து விடக்கூடாது என்பது தர்மம்; கன்றுக் குட்டிக்கும் பால் விட வேண்டும். நம் குழந்தை மாதிரி, பசுவுக்கு அதன் கன்றும் குழந்தை தானே! பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளில், ஒரு காம்பு தேவதைகளுக்கும், ஒன்று, பூஜைக்கும், ஒன்று, கன்றுக் குட்டிக்கும் என்பது சாஸ்திரம்.
கன்றுக்குட்டி இல்லாத பசுவின் பால், பூஜைக்கு உதவாது என்று சாஸ்திரம் உள்ளது. வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டியைக் காட்டி கறக்கப்படும் பசும் பால் கூட பூஜைக்கு உதவாதாம்.
புண்ணியமான ஜீவன் பசு. அதை ரட்சிக்க வேண்டும்; பூஜிக்க வேண்டும். பசுமாடு வந்து விட்டால், தடி எடுத்து அடித்து விரட்டாமலிருந்தாலே போதும், அதுவே புண்ணியம் தான்.

No comments:

Post a Comment