Tuesday, March 1, 2011

மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா?

மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா?
நட்சத்திரங்களிலேயே ‘மூலம்’ மிகச் சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. சில பண்டைய நூல்கள் மூல நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக குறிப்பிட்டுள்ளன. ‘ஆதிமூலம்’ (நட்சத்திரங்களுக்கெல்லாம் ஆதி ‘மூலம்’) என்ற சொல் கூட அந்த நூல்கள் கூறும் விடயத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நிறைய துறவிகள், கல்வியாளர்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளனர். எனவே, மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்பவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை.
‘ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்’ என்பதே பரவலாகக் கூறப்படும் பழமொழி. ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் எல்லா வகையிலுமே சௌபாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலத்தின் 4ஆம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் பிரச்சனைகளை சமாளிக்கும் மனத்தின்மை பெற்றவர்களாகவும், எதிரிகளை வெல்லும் (நிர்மூலம் செய்யும்) தைரியம் உள்ளவர்களாகவும் இருப்பர்.
எனவே, புகுந்த வீட்டில் உள்ள கணவரின் ரத்த உறவுகளை பாதிக்கும் நட்சத்திரம் மூலம் அல்ல என்று தெரிய வருகிறது.ஒரு பெண் ஜாதகத்தில் 9ஆம் இடம்தான் கணவருக்கு இளைய சகோதரன்/சகோதரியின் அம்சத்தைக் குறிக்கும். அந்த வகையில் பெண்ணுக்கு 9ஆம் இடம் சிறப்பாக இருந்தால் கணவரின் இளைய சகோதரன்/சகோதரிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதனை நடைமுறையிலும் பார்த்திருக்கிறோம்.
பொறுப்பின்றி சுற்றித்திரிந்த தம்பி, அண்ணன் திருமணத்திற்கு பின் நல்ல வேலையில் அமர்வார்; குடும்பத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்வார். எனவே, பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் என்றால் புகுந்த வீட்டிற்கு ஆகாது என்று கூறுவதில் உண்மையில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment