Thursday, November 14, 2013

ஏற்ற விதத்தில் அமர்ந்து கொள்வது பிரார்தனைக்கும், தியானத்திற்கும் அவசியம்

மலையையே புரட்டிப் போட்டு விடுவான், ஆனால், ஒரு இடத்தில் பத்து நிமிடம் அசையாமல் உட்காரச் சொன்னால் அது அவனால் முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் காலில் குடைச்சல் ஆரம்பித்து விடும். இரத்த ஓட்டம் இல்லாமல் கால்கள் விறுவிறு என்று மரத்துப் போய் பெருங்கால் பிடித்துக் கொள்ளும். கால் நரம்புகள் முறுக்கிழந்து தொய்வடைந்து விடுவதால், கால்களை மடக்கி அமரும் போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு விடுவதால் இந்த அவஸ்த்தை ஏற்படுகிறது. அதுவே நரம்புகள் நல்ல வலிமையாக இருந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை. எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக சிறிது சிறிதாக இரத்தம் அந்தப் பகுதிக்குச் செல்லும். அதற்காகவே யோகாசனப் பயிற்சிகள் ஆன்மிக சாதகர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. தியானத்தில் நீண்ட நேரம் அமர்ந்தாலும் உடல் களைப்படையாமல் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

மனிதனின் முகத்தைக் காணும் போது அவன் சோர்வையும், உற்சாகத்தையும் கண்டு பிடித்து விடலாம். அவன் உடல் நிலையை மனநிலை முகத்தின் மூலமாக காட்டிக் கொடுத்து விடுகிறது.மனநிலையானது தன்னுடைய தன்மையை உடலின் மீது வெளிப்படுத்துகிறது. மேலும் உடல் நிலையையும் மனநிலையானது தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. சட்டையின் கைகளை மடித்துச் சுருட்டி விட்டுக் கொண்டு, நரம்புகள் புடைக்கும்விதமாக முட்டிகளை மடக்கி வைத்துக் கொண்டு, மீசையை திருக்கி விட்டுக் கொண்டு, கண்களை உருட்டி விழித்துக் கொண்டு நீங்கள் அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்த முடியாது. அது போல முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு, கைகளை முன்புறமாக நீட்டி, முகத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்த முடியாது. எனவே ஏற்ற விதத்தில் அமர வேண்டியது தியான யோகத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நம் முன்னோர்கள் வற்புறுத்திக் கூறுகிறார்கள்.

அவர்கள் சொல்வது என்னவென்றால், தரைக்குச் செங்குத்தாக நிமிர்ந்து முதுகுத் தண்டு நிற்க, காலகளும் தொடைகளும் எவ்வளவு விரிவான இடத்தை அடைக்க முடியுமோ அப்படி அடைத்துக் கொள்ளும்படி அமர வேண்டும் என்பதுதான். உடற்கூறு சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா ? கால்களை மடித்து வைப்பதுதான் தியானத்திற்கு உகந்த ஆசனமாகும். ஏனென்றால், உடலின் கீழ்ப்பகுதிக்கு இரத்தம் அதிகம் செல்ல வேண்டியதிருக்காது. தியானம் காரணமாக மூளைக்குத் தேவையான அதிக இரத்தம் கிடைக்கும். ஏனென்றால், தியானத்தின் போது மூளை நுட்பமாக இயங்குவதால் அதிகமான தூய இரத்தம் அதற்கு அவசியமாகும். அது கால்களை மடித்து நிமிர்ந்து அமர்வதால் மட்டுமே கிடைக்கும். மேலும் முதுகுத் தண்டை நிமிர்த்தி வைத்துக் கொள்வது ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்று இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். வளைந்த அல்லது சிரமத்துக்குள்ளாக்கப்பட்ட முதுகுத் தண்டு, நரம்புகளின் செயல்பாட்டிற்கு கேடு விளைவிப்பதுடன், நமது அறிவையும், உணர்ச்சிகளையும் குழப்பமடையச் செய்கின்றது. மேலும் கால்களை அகற்றி உட்கார்வதால் அனாவசியமான அசைவோ அதனால் வலியோ ஏற்படாது. முதிர்ந்த சாதகர்களுக்கு உடல் எப்படிக் கிடந்தாலும் தியானிப்பது சாத்தியமே. ஆனால், ஆரம்ப நிலைச் சாதகர்களுக்கு மனதையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய விஞ்ஞான பூர்வமான ஆமோதிக்கப்பட்ட ஆசனம் அவசியம் தேவையாகும்.

எனவே ஏற்ற விதத்தில் அமர்ந்து கொள்வது பிரார்தனைக்கும், தியானத்திற்கும் அவசியம் என்று நம் முன்னோர்களால் வற்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. அப்படி நிமிர்ந்து அமர்ந்து கொண்ட பிறகு நீங்கள் தியானத்தில் தீவிரமடையும் போது உங்கள் உடல் பெரிதாக இருப்பது போலவோ, நிறை அதிகரித்திருப்பதைப் போலவோ உணர்வீர்கள். ஆசனம் சரியாகச் செய்யப்பட்டால், ஆடாமல், அசையாமல் நிற்கும் முதுகுத் தண்டாலும், தோள்பட்டைகளாலும் ஆன சிலுவை ஒன்றில் உங்கள் உடல் மாட்டப்பட்டிருப்பது போல உணர்வீர்கள். உடல் நம்மோடு இருப்பது போலவே தோன்றாது. மெல்ல மெல்ல கழன்று ஆணியில் கோட் தொங்குவது போல உடலானது தோள்பட்டைகளில் தொங்குவது போலத் தோன்றும். யோகாசனப் பயிற்சிகளை முதியவர்களுக்கு செய்ய முடியாமல் போய் விடலாம். என்ன செய்வது ? இதற்காகவே அனைத்து தரப்பிருக்கும் ஏற்ற வகையில் யோகாசனப் பயிற்சியை எளிமையாக்கி வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்தருளியிருக்கிறார்கள். அந்த உடற்பயிற்சிகள் 15 நிமிடங்கள் செய்தாலே போதுமானதாக இருக்கும். சித்தர்களின் யோகாசப் பயிற்சியை நுட்பமாக ஆராய்ந்து, அவற்றால் எந்தெந்த நரம்புகள் மற்றும் பகுதிகள் வலுப் பெறுகின்றன என்பதைக் கண்டு பிடித்து அதையே எளிமைப்படுத்தி தந்தருளியிருக்கிறார்கள். காலையும், மாலையும் உடற்பயிற்சியும், காயகல்பப் பயிற்சியும் செய்பவர்களுக்கு நாடி நரம்புகள் வலிமை அடைவதுடன், இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் எல்லாம் சீராகக் கிடைப்பதால் எவ்வளவு நேரம் தியானத்தில் அமர்ந்தாலும்உடலில் களைப்போ, வலிகளோ ஏற்படாது.

No comments:

Post a Comment