அன்ன தானம்
சாதாரணமாக பத்துப்பேருக்கு, நூறு பேருக்கு அன்ன தானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப்பார்த்தால் அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது ? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷ்ப்படுகிற போது அந்த அன்ன தாதாவின் சந்தோஷ்த்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது ? சாப்பிடுகிறவனைவிடச் சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன மகா பாவங்களைச் செய்து -- காரியத்தில் செய்யாவிட்டாலும் மனசினால் மகா பாவங்களை நினைத்து -- ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்யதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடானு கோடி ஜீவன்களுக்கும் கல்ப கோடி காலமாய்ச் சோறு போட்டுக்கொண்டிருக்கிற ஒருத்தி அன்னபூரநேஸ்வரியான அம்பாள் தான். அவளுடைய அன்பையும் அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது அம்பாள் சௌந்தர்ய ஸ்வரூபம் என்கிறார்கள் அவளைப்பற்றி "சௌந்தர்ய லஹரி" என்றே ஆசார்யாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை சௌந்தர்யா, லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்பு தான் அழகாகிறது காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஓர் அழகல்ல கொஞ்சம் கோபம் வந்தால், சளி ஜூரம் வந்தால் சரீர அழகு போய் விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமுர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள் எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்களை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.
- பரமாச்சார்யார்
No comments:
Post a Comment