Monday, November 18, 2013

திருவிளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை

.இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்துத்தான் வணங்க வேண்டும். காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி தினமும் வணங்கினால் செல்வம் பெருகும். காலையிலும், மாலையிலும், குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகும்.

அதோடு நம் பாபமும் விலகும். விளக்கை கிழக்கு  நோக்கி வைப்பதுதான் சிறப்பு. எண்ணை இல்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. பூஜை முடிந்து பத்து நிமிடம் கழித்து விளக்கைக் குளிர வைக்க வேண்டும்.

அன்றாடம் மாலையில் ஒரு முக விளக்காகிய "காமாட்சியம்மன் திருவிளக்கின்'' திருவடியில் தாமரை மலரை வைத்து பாராயணம் செய்வது சிறப்பு ஆகும். திருவிளக்குப் பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வடுகிலும் வைத்து வர, வேண்டும்.

இதனால் அவர்களுடைய கணவர்கள் நலமுடன் வாழ்வார்கள். திருவிளக்கு பூஜை செய்யும் குத்து விளக்கை தலை வாழை இலை மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வையகத்தில் தழைத்தோங்கும், வாழ்வு செழிப்பானதாக அமையும்.

நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும். தினசரி வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது, "திருவிளக்கு அகவல்'' படித்துவர நன்மை உண்டாகும். திருவிளக்குப் பூஜையின் போது இடது கையால் எந்த மங்கல காரியங்களையும் செய்யக் கூடாது.

தீபம் ஏற்றும் போது ஒரே முயற்சியில் எரிவது நல்லது. தீபச் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது, மெல்லத்தணிந்து அடங்கக் கூடாது. மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாகச் சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும், அளவிற்கும் தகுந்தபடி எரிய வேண்டும்.

சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற்றிற்குக் காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றிவிட வேண்டும். பொதுவாக காமாட்சியம்மன் விளக்கின் திருச்சுடரைக் கொண்டு மற்றொரு விளக்கின் சுடரை ஏற்றமாட்டார்கள்.

பல அகல் விளக்குகளை அல்லது திருவிளக்குகளை ஏற்ற வேண்டியிருந்தால் முதலில் ஒரு விளக்கின் சுடரை ஏற்றி, அதன் மூலம் அனைத்து விளக்கின் சுடர்களையும் ஏற்றலாம். திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலையில், விளக்கின் குழியில் எண்ணெயைத் தொடர்ந்து வார்த்துக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

விளக்கில் குளம் போல் எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும். திருவிளக்கு பூஜையில் குத்து விளக்கிற்கு சிகப்பு வண்ண மலர்களைச் சாற்றலாம், லட்சுமி பூஜைக்கு செவ்வந்தி மலர் சாற்றலாம். விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றியவுடனே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும்.

விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது. திருச்சுடர் எதிர்பாராத காரணத்தால் தானே அணைவதும், எண்ணெய் இல்லாமல் அணைவதும் குற்றம் ஏற்படுத்தும் பூஜை நடைபெறும் போதும், மங்கலக் காரியங்கள் நடக்கின்ற போதும் லட்சுமிகரமாக எரிகின்ற திரிச்சுடரானது சட்டென்று அணைவது அமங்கலம் ஆகும்.

திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து நிற்கின்றாள். ஆகையால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது பெரிய குற்றமாகும். அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத்தட்டில் வைத்து, "எப்பொழுதும் எம் உள்ளொளி பெருக வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும், அல்லது பூக்களால் அணைக்கலாம்.

அல்லது பால் துளிகளைக் தெளித்தும் திருச்சுடரைக் குளிர வைப்பது (அணைப்பது) மிகவும் பொருத்தமானது ஆகும். அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். தீபம் லட்சுமி வாசம் செய்யும் இடம். மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க, எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். தீபம் வைத்த உடன் முகம் கழுவுதல், தயிர் கடைதல், காய்கறி நறுக்குதல், அரிசி களைதல் போன்றவைகளை செய்யக்கூடாது.

எரியும் விளக்கை தூண்டும் முறை:

விளக்கு எரியத் தொடங் கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை வந்துவிடுவாள். ஆகையால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும். எனவே திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.

மேலும் நேரம் ஆக ஆக விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப்பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே தொடர்ந்து தீபத்தை பிரகாசமாக்குவதற்கு சிறந்த முறை ஆகும்.

No comments:

Post a Comment