Tuesday, November 26, 2013

கருணையே கடவுள்..!

கருணையே கடவுள்..!

காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான் ஒருவன். அவனுக்கு ஓரளவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. போகும் வழியில் ஒரு கருடன் காக்கைக் குஞ்சு ஒன்றுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். ‘அடடா, கடவுளின் கருணைதான் எத்தகையது! ஒன்றுக்கொன்று பகையான கருடனும்
காக்கையும்தான் எப்படி பழகுகின்றன! ஆதரவற்ற காக்கைக் குஞ்சுக்கு அதன் ஜன்மப் பகையான கருடன் உணவளிக்கிறதென்றால் கடவுளின் கருணையை
என்னென்பது!...

ஒரு பறவைக்கே இறைவன் இப்படி இரக்கம் காட்டுகிறார் என்றால், எனக்கு மட்டும் காட்ட மாட்டாரா என்ன?’ என்றெல்லாம் யோசித்தான் அவன்.
தானும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டான். இறைவன் யாரையாவது அனுப்பித் தனக்கும் உணவளிக்க மாட்டாரா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம்!

கடவுள் அவன்முன் தோன்றினார். ‘ஆஹா எனக்கு உணவளிக்க, வாழ்வளித்த இறைவனே வந்துவிட்டார்’ என்று ஆனந்தப்பட்டான் அவன்.

‘‘உனக்கு அறிவுரை சொல்லவே வந்தேன்’’ என்றார் கடவுள். ‘‘காக்கை குஞ்சுக்குத் தன்னிச்சையாக இரை தேடிக்கொள்ளத் தெரியாது. அதற்காக கருடனைக்
கொண்டு அதற்கு உணவு ஊட்ட வைத்தேன். ஏன் தெரியுமா? கை, கால்களெல்லாம் நல்ல முறையில் இருக்கும் நீ, அந்தக் குஞ்சைப் போல பிறர் உதவியை
எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகவும், முடியாதவர்களுக்கு அந்த கருடனைப்போல நீயும் உதவ வேண்டும் என்பதற்காகவும்தான்’’ சொல்லிவிட்டு கடவுள் மறைந்துவிட்டார்.

No comments:

Post a Comment