Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 107நதிகளை பாதுகாப்போம்.

கங்கைக்கரைக்கு வந்தார் ஒரு மகாமுனிவர். தவத்தால் மிகவும் சிறந்தவர். கர்வம் சிறிதும் இல்லாதவர், ஆனால், தன் பலத்தை தானே அறியாதவர். கங்கைக்கு வரும் சாதாரண மக்களெல்லாம், நதியில் மூழ்கி தங்கள் பாவத்தைக் கரைப்பவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், தவவலிமை மிக்க முனிவர் பெருமக்கள் அதில் நீராடினால் அவள் மகிழ்வாள். ஏனெனில், அவள் சுமக்கும் பாவங்கள் அனைத்தும் அந்த மகான்களின் தவவலிமையால் ஆவியாகி விடும். கங்கை பாரம் குறைந்து மகிழ்ச்சியுடன் செல்வாள். அதனால் தான் தீர்த்தங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மண மதத்தினர்
தங்கள் துறவிகளுக்கு "தீர்த்தங்கரர்' என்று பெயர் வைத்தனர். "நாரம்' என்றால் "தீர்த்தம்'. நாராயணன், நாரதர் போன்ற பெயர்களும் தீர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதே.
ஒரு சமயம் ஏராளமான பாவிகள் கங்கையில் வந்து நீராடினர். அவர்களில் கொலைக்குற்றம் செய்தவர்கள், மனைவியைக் கைவிட்டவர்கள், கன்னிப்பெண்களின் வாழ்வில் விளையாடி அவர்களை ஏமாற்றிய கொடும்பாவிகள் ஆகியோரெல்லாம் இருந்தனர். அவர்கள் கரைத்த பாவச்சுமையைத் தாங்கமுடியாமல் கங்கை கஷ்டப்பட்டாள். போதாக்குறைக்கு, பாழாய் போன மக்கள் சாக்கடையையும் கங்கையில் விழும்படி செய்தனர். இதனால் அவள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. இந்த நேரத்தில் தான் நாம் மேற்சொன்ன தவமுனிவர் வந்தார். கங்கையைப் பார்த்தார். சாக்கடை கலந்ததைப் பார்த்ததும் அவர் முகம் சுளித்தார். அப்படியே திரும்பி விட்டார். கங்கைக்கு மனது கனத்தது. ""ஐயோ! இப்படி நல்லவர்களெல்லாம் என்னைப் புறக்கணித்தால் நிலைமை என்னாவது? நான் பாவச்சுமை தாளாமல் மடிந்தும் வற்றியும் போவேனே!'' என நினைத்தவள், சாதாரணப் பெண் போல் மாறி, முனிவர் முன் சென்றாள்.
""மகானே! ! கங்கையில் தங்களைப் போன்றவர்களை நீராடாவிட்டால் அவள் எப்படி புனிதமாவாள்! இதில் கலக்கும் சாக்கடை மகான்களின் உடலுக்கு பாதகம் ஏதும் செய்யாதே! தயவுசெய்து தாங்கள் நீராடிச் செல்லுங்கள்,'' என்றாள்.
முனிவர் சம்மதிக்கவில்லை. எதும் பேசாமல் தன் வழியில் சென்றார். உடனே கங்கையே சுயரூபத்தில் காட்சி தந்தாள். முனிவர் அவளை வணங்கினார்.
""அன்னையே! உன்னில் கரையும் பாவங்கள் என்னவாகின்றன என்பதை எனக்கு
விளக்கியருளினால், நான் மகிழ்வுடன் உன்னில் நீராடிச்செல்வேன்,'' என்றார்.
""ஐயனே! பாவிகள் என்னுள் கரைக்கும் பாவங்களை நான் கடலரசனிடம் சேர்த்து விடுகிறேன். அது பாவக்கடல் என்று பெயர் பெறுகிறது. கடல்நீர் ஆவியாகி சூரியபகவானை அடைகிறது. சூரியபகவான் அதை மேகமண்டலத்திடம் ஒப்படைக்கிறான். அது மழையாய் கொட்டுகிறது. மீண்டும் அது பூமிமாதா மூலம் என்னையே வந்தடைகிறது. என்னிலுள்ளதை கரைக்கும் சக்தி உங்களைப் போன்ற மகான்களுக்கே உண்டு. அதனால் தான் கும்பமேளாவில் சாதுக்கள் நீராடுகின்றனர். அவர்களது சக்தியால் கரையும் பாவம், என் நாதனான சிவனின் நெற்றிக்கண் வெப்பத்தில் பஸ்பமாகி காணாமல் போய்விடுகிறது. எனவே தான் இங்கு வந்து குளிப்பதை உயர்ந்தது என்கிறார்கள்,'' என்றாள். மனத்தெளிவு பெற்ற முனிவர் கங்கையில் நீராடினார். கங்கையின் பாவம் கரைந்தது. பார்த்தீர்களா! ஆறுகளில் சாக்கடையைக் கலப்பதால், நதித்தாய்கள் வருந்துவதை! இனியேனும், நமது ஊர் நதிகளை பெற்ற தாயைப் போலவும், பிள்ளைகளைப் போலவும் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment