Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 57

கலைவாணி....பெயருக்காற்போல் கல்வியறிவு,. இசையறிவு மிக்கவள். பணக்கார வீட்டுப் பெண். பிறகென்ன! பணக்கார மாப்பிள்ளையைத் தானே தேடுவார்கள்! ஒரு நிலச்சுவான்தாரின் மகன் பிரமநாயகத்துக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை வீட்டில் இருந்த வசதியைப் பார்த்தார்களே தவிர, மாப்பிள்ளை அறிவுள்ளவன் தானா! மகளின் கல்வியறிவுக்கு சமமானவன் தானா என்றெல்லாம் சரிவர விசாரிக்கவில்லை.
புகுந்த வீடு சென்ற நாளில் இருந்து கலைவாணி, கணவனிடம் சிக்கி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மனைவி படித்தவள், தன்னை விட புத்திசாலி என்பதைப் புரிந்து கொண்ட அவன், தேவையில்லாமல் சில விஷயங்களில் மூக்கை நுளைப்பான்.
ஒருநாள், அவள் மாடத்தில் நின்ற போது, ஒரு மூடன் வந்தான்.
""அம்மா! உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு அணில் ஓடுகிறதே, அதனிடம் இருந்து ஒரு இறகு பறித்து தாருங்கள். காது குடைய வசதியாக இருக்கும்,'' என்றான். அப்போது, பிரமநாயகம் வந்தான்.
""அறிவிலியே! காது குடையும் இறகை அணிலிடம் எப்படியடா பறிக்க முடியும்? ஆமை தான் இறகு தரும் என்ற விஷயம் உனக்கு தெரியாதா! முட்டாளே, ஓடிவிடு!'' என விரட்டினான். அவன் ஓடியே போய்விட்டான்.
தலையில் அடித்துக் கொண்டாள் கலைவாணி. இருந்தாலும், கொண்டவனை என்ன செய்வது? விதியே என குடித்தனம் நடத்தினாள்.
ஒருநாள், அவள் சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் கற்பு நெருப்பில் மதுரை எரிந்த பகுதியை உணர்ச்சிப்பூர்வமாகப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் கணவன் வந்தான்.
""கலை, என்ன படிக்கிறாய்?''
""சிலப்பதிகாரம் வாசிக்கிறேன்''
""அப்படியா! கம்பர் பாடினாரே! அந்தப் பெண் கூட காட்டுக்கு கணவன் கூட போனாளே! நல்ல பெண். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்,''.
""இல்லை..இல்லை.. இது இளங்கோவடிகள் பாடியது''
""ஆமாமா...மறந்து சொல்லி விட்டேன். கம்பர் மகாபாரதம் அல்லவா பாடினார். ஏழு பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்றாளே! அவள் கதை தானே!''
அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
""இல்லை, இது கற்புக்கரசி கண்ணகியின் கதை''.
பிரமநாயகம் சிரித்தான்.
""வர வர எனக்கு மறதி ரொம்பத்தான் அதிகமாயிட்டு போகுது! அவளது புடவையைக் கூட துச்சாதனன் பிடித்து இழுத்தானே! அதை கொஞ்சம் சத்தமாக வாசி. சிறப்பான பகுதி, நானும் கொஞ்சம் கேட்கிறேன்,'' என்றான்.
அவள் அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. கண்ணீர் முட்டியது. இவனைக் கட்டியதற்கு, நம் தந்தையார், ஒரு எருமை மாட்டைக் கட்டி வைத்திருக்கலாம், என்ன செய்வது?'' என்று புலம்பினாள்.
மனஅமைதிக்காக,பூஜையறைக்குள் சென்று இறைவனை எண்ணிப் பாடினாள்.
"சரிகமபதநீ'' என்று ஏழு ஸ்வரங்களையும் கூட்டிப் பாடவும், அவன் அங்கும் வந்து விட்டான்.
பூஜையறை என்று கூட பாராமல், அவளை ஓங்கி உதைத்தான்.
""ஏன் அடித்தீர்கள். நான் ஒரு தவறும் செய்யவில்லையே!
""ஏனடி! என்னைப் பார்த்து தானே பாடினாய்! புருஷனுக்கு கொஞ்சம் கூட மதிப்பு தராமல் "நீ' என பாடுகிறாயே. புருஷனை தகுந்த மதிப்புடன் "நீங்க' என்று அழைக்க வேண்டும் என்ற விஷயம் கூடவா உனக்குப் புரியவில்லை,'' என்று சொல்லி விட்டு நிற்காமல் போய் விட்டான்.
ஒருநாள், தமிழ்ப்பாட்டி அவ்வையார் அவர்கள் இல்லத்துக்கு வந்தார். அங்கு நடந்த கூத்தையெல்லாம் கவனித்தார்.
""இப்படி ஒரு அறிவுச்சுடரை இந்த அறிவிலிக்கு மனைவியாகப் படைத்த பிரம்மனை மட்டும் நான் பார்த்தால், அவனது ஒரு தலையை சிவபெருமான் கொய்தது போல, மற்ற நான்கு தலைகளையும் நான் திருகி எறிந்து விடுவேன்,'' என்ற பொருளில் ஒரு வெண்பா பாடினார்.
பார்த்தீர்களா! பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளுக்கு வரும் கணவன் பற்றி, அவனது பணியிடம், சுற்றுப்புறங்களில் நன்றாக விசாரித்து, பெண் கொடுங்கள். இல்லாவிட்டால், கலைவாணியின் கதையாக ஆகி விடும்.

No comments:

Post a Comment