Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்40-முடிந்தால் ஆள் பார்த்து உதவுங்க

ஆள் பார்த்து உதவுங்க

ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து ஓநாயாக்கி விட்டார். பலசாலியான அது, தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி விட்டது. ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனே, ஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார்.
சிறுத்தையை பார்த்த சிறுத்தை "இது நமது இனமாயிற்றே' என விட்டுச் சென்றுவிட்டது. சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது.
சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார்.
புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்கநிலைக்கு உயர்ந்த சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
""இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளை, இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால், நாம் படாதபாடு படவேண்டியிருக்கும். எனவே, இவரைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்றெண்ணி பின்னால் நின்று பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட முனிவர் தண்ணீரைத் தெளித்து ""போ நாயே!'' என விரட்ட, அது மீண்டும் சொறிநாயாகி அழுதுகொண்டே சென்றது.
உதவி செய்வது முக்கியம். ஆனால், அதையும் தகுதியானவர்களுக்கு தான் செய்ய வேண்டும்... புரிகிறதா!

No comments:

Post a Comment