Saturday, June 25, 2011

துர்க்கையம்மன் 108 போற்றி- நவராத்திரி -கலைகளின் நாயகி - கலைவாணி

துர்க்காதேவியின் பேரருளைப் பெற இந்த 108 துதியை ஒன்பது நாட்களும் சொல்லி அம்பாளின் பேரருளைப் பெறுங்கள்.

* ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
* ஓம் ஆதிபராசக்தியே போற்றி
* ஓம் அபிராமவல்லியே போற்றி
* ஓம் ஆயிரங்கண்ணியே போற்றி
* ஓம் அம்பிகைத்தாயே போற்றி
* ஓம் ஆசைகளை நிறைவேற்றுவோய் போற்றி
* ஓம் அன்பின் உருவே போற்றி
* ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
* ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
* ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
* ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
* ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
* ஓம் இமயவல்லியே போற்றி
* ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
* ஓம் இருசுடர் ஒளியே போற்றி
* ஓம் இருளை நீக்குவாய் போற்றி
* ஓம் ஈசனின் பாதியே போற்றி
* ஓம் ஈஸ்வரிதேவியே போற்றி
* ஓம் உமையெனும் அன்னையே போற்றி
* ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
* ஓம் உண்மையின் பொருளே போற்றி
* ஓம் உன்னதவரம் தருவாய் போற்றி
* ஓம் ஊக்கம் அளிப்பவளே போற்றி
* ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
* ஓம் என் வழி துணையே போற்றி
* ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
* ஓம் எம்பிராட்டி அம்மையே போற்றி
* ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி
* ஓம் ஐமுகன் துணையே போற்றி
* ஓம் ஐயங்கள் தீர்ப்பாய் போற்றி
* ஓம் ஒளிரும் முகத்தவளே போற்றி
* ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
* ஓம் கயிலையான் துணைவியே போற்றி
* ஓம் காமாட்சி தேவியே போற்றி
* ஓம் கடாட்சம் தருபவளே போற்றி
* ஓம் காவல் தெய்வமே போற்றி
* ஓம் கருணை தெய்வமே போற்றி
* ஓம் கண்ணியத்தின் வடிவே போற்றி
* ஓம் கற்பூர நாயகியே போற்றி
* ஓம் கற்பினைக் காப்பாய் போற்றி
* ஓம் கலாவல்லியே போற்றி
* ஓம் கிரிபோல் உயர்ந்தவளே போற்றி
* ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
* ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
* ஓம் கூர்மதி தருவாய் போற்றி
* ஓம் குவலய நாயகியே போற்றி
* ஓம் குலத்தைக் காப்பவளே போற்றி
* ஓம் குமரனின் தாயே போற்றி
* ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
* ஓம் கொற்றவை தெய்வமே போற்றி
* ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
* ஓம் கோமதித்தாயே போற்றி
* ஓம் கோள்களை அடக்குவாய் போற்றி
* ஓம் சங்கமிக்கும் கடலே போற்றி
* ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
* ஓம் சந்தோஷம் அளிப்பவளே போற்றி
* ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
* ஓம் சக்தித்தாயே போற்றி
* ஓம் சாபம் களைவாய் போற்றி
* ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி
* ஓம் சீற்றம் தணிப்பாய் போற்றி
* ஓம் சிறுநகை புரிபவளே போற்றி
* ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
* ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
* ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
* ஓம் செங்கதிர் ஒளியே போற்றி
* ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
* ஓம் சோமசுந்தரியே போற்றி
* ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
* ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
* ஓம் தாயே தந்தையே போற்றி
* ஓம் திருவருள் புரிவாய் போற்றி
* ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
* ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
* ஓம் திரிசூலம் கொண்டவளே போற்றி
* ஓம் திசையெட்டும் காப்பாய் போற்றி
* ஓம் தீரம் அளிப்பவளே போற்றி
* ஓம் துர்க்காதேவியே போற்றி
* ஓம் துன்பம் தீர்ப்பாய் போற்றி
* ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
* ஓம் தூயமனம் கொடுப்பாய் போற்றி
* ஓம் நாராயணியே போற்றி
* ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
* ஓம் நித்யகல்யாணியே போற்றி
* ஓம் நீதியைக் காப்பாய் போற்றி
* ஓம் பகவதிதேவியே போற்றி
* ஓம் பசுபதி நாயகியே போற்றி
* ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
* ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
* ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
* ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
* ஓம் பூஜிக்க அருள்பவளே போற்றி
* ஓம் பொன்னிறத்தாயே போற்றி
* ஓம் போகங்கள் தருவாய் போற்றி
* ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி
* ஓம் மலைமகள் தாயே போற்றி
* ஓம் மாதங்கி அன்னையே போற்றி
* ஓம் மகமாயி தாயே போற்றி
* ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
* ஓம் மாலவன் தங்கையே போற்றி
* ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
* ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
* ஓம் வேதவல்லியே போற்றி
* ஓம் வித்தைக்கு அரசியே போற்றி
* ஓம் விளக்கின் ஒளியே போற்றி
* ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
* ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
* ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி

நவராத்திரி 


 
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். "யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே எல்லாமுமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல்லாக, பூண்டாக, மரமாக, பொருளாக, எல்லாவித உயிர்களுமாக அவள் விளங்குகிறாள். ஆக, அனைத்துப் பொருட்களிலும் அவளையே காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு' என்ற பெயரும் உண்டு. "சிவை' என்றால் "சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.
பொம்மைகளை அடுக்கும் முறை: மனிதனாகப் பிறந்தவன் படிப் படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன்ப வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். முக்கியமாக நத்தை பொம்மை வைப்பது நலம். நிதானமாக எதையும் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை பொம்மைகளை வைக்க வேண்டும். உதாரணமாக, எறும்பைப் போல் சுறுசுறுப்பு, கரையான் புற்று, சிலந்தியின் வலையைக் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திட மனப்பான்மைவேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். இத்தகைய பொம்மைகள் கிடைப்பது அரிதென்பதால், சுயமாக இவற்றை மண்ணாலோ, அட்டைகளிலோ தயார் செய்து கொள்ளலாம்.
* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன் களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து மகான் நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் போன்ற மகான்களின் பொம்மை கடைகளில் கிடைக்கிறது. வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்தும் பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
* எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள் போன்று கிடைக்கும் பொம்மைகள்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள்
தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து,
நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.
கொலுமேடைக்கு முன்பாக ஒரு மேஜையிட்டு, நூல் சுற்றிய கும்பத்தில் (ஒரு குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்கும பாக்கெட், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி, கும்பத்தில் வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். அந்த கும்பத்தை அம்பாளாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். தேவ நிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
நவராத்திரி துவங்கியுள்ள இந்நேரத்தில் தினமும் மாலையில், அம்பாள் முன் அமர்ந்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி அவளது நல்லருள் பெறுங்கள்.
* காலையில் மலரும் தாமரை மலர் போன்ற கைகளை உடையவளே! எப்போதும் தயை புரிபவளே! இரண்டற்ற ஒரே சக்தியாக இருப்பவளே! இந்திரனால் வணங்கப்பட்டவளே! சிறந்த ஒளி வீசும் குண்டலங்கள் அணிந்தவளே! மன உறுதியைத் தருபவளே! நீ விரலில்
அணிந்திருக்கும் மோதிரத்திலுள்ள ரத்தினத்தின் இளம்சிவப்பு நிறத்தால் உன் நகங்கள் ஒளிர்கின்றன. சிறப்பு மிக்க உனது அருளை வேண்டுகிறேன்.
* கையில் வீணை வைத்திருப்பவளே! பக்தர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பவளே! மூன்று உலகங்களாலும் வணங்கப்படுபவளே! இனிமையாகப் பேசுபவளே! நட்சத்திர வரிசை போல் விளங்கும் முத்துமாலையின் ஒளியால் பிரகாசிப்பவளே! மாட்சிமை மிகக்க உன் அருளை வேண்டுகிறேன்.
* தெய்வீக ரத்தினங்கள் இழைத்த ஆடையணிந்தவளே! சந்திரனைப் போல் குளிர்ந்தவளே! சியாமளா தேவியே! தடையில்லாத பேரின்பத்தை அள்ளித் தருபவளே! மாசற்ற மாணிக்கமே!
பூவரசம்பூ போன்ற சிறந்த பட்டாடை அணிந்தவளே! நீலதாமரை போன்ற அழகிய கால்களை உடையவளே! இன்பமே வடிவான உன் அருளை வேண்டுகிறேன்.
* எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! களங்கமற்றவளே! எல்லா செல்வங்களையும் வாரி வழங்குபவளே! சித்தர்களால் போற்றப்படுபவளே! காளியே! மந்திரங்களின் வடிவே! மாண்புமிக்க நீ எங்களுக்கு செல்வத்தையும், கல்வியையும், ஆற்றலையும் அருள்வாயாக.
* மங்கள நாயகியே! அழகாக மெல்ல நடப்பவளே! நல்ல கலைகளின் இருப்பிடமே! சந்திரோதயத்தின் ஒளி வெள்ளத்தால் நனைந்த பாற்கடலில் இருந்து தோன்றிய சங்கு போன்ற கழுத்தை உடையவளே! ஒளி பொருந்திய முத்துமாலை அணிந்து ஜொலிப்பவளே! நவரத்தின ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பூமியின் அரசியே! பக்தி நிறைந்தவளே! சவுபாக்கியம் தருபவளே! கிளியுடன் விளையாடிக் கொண்டிருப்பவளே! உனது அருளால் எங்கள் வம்சம் தழைக்கட்டும்.
* அம்பிகையே! தினமும் பல நல்ல செயல்பாடுகளில் இறங்கும் எனக்கு, கடல் கூட ஆழமற்ற விளையாட்டு மைதானம் போல் ஆகி விடட்டும். இந்திரனின் தேவலோகத் தோட்டம் கூட நான் எட்டிப் பிடிக்க கூடியதாகட்டும். இந்த பூலோகம் மங்களகரமான சிம்மாசனம் ஆகட்டும். நீ இத்தகைய விருப்பங்களையெல்லாம் விரும்பி நிறைவேற்றுபவள் என்பதால் இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன்.
* லோகநாயகியே! எல்லாப் புண்ணிய தீர்த்தங்களின் வடிவே! வேதத்தின் சாரமே! ஆகம சாஸ்திரங்களின் அரசியே! யந்திரங்களாகவும், சக்ரங்களாகவும் விளங்குபவளே! என் பாவங்களை மன்னித்து அருள் செய். என்னை வெற்றி வீரனாக்கி அழகு பார்! உனக்கு என் வந்தனம்.
* எல்லா சக்திகளாகவும் விளங்குபவளே! எல்லா பீடங்களாகவும் இருப்பவளே! தத்துவமுத்தே! வித்தைகளெல்லாம் அறிந்தவளே! இசையில் புதைந்துள்ள இன்பமே! நவராத்திரி நாயகியே! இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் எனக்கு நன்மைகளைப் பொழிவாயாக.
* எங்கும் நிறைந்தவளே! எங்கும் செல்பவளே! எல்லாவற்றிலும் உட்பொருளாக விளங்கும் ஜெகன்மாதாவே! எல்லா இக்கட்டுகளில் இருந்தும் என்னை விடுவித்து காப்பாற்றி அருள் செய். தேவி! உனக்கு நமஸ்காரம், உனக்கு நமஸ்காரம், உனக்கு நமஸ்காரம்.

சரஸ்வதி பூஜை நன்னாளையொட்டி, பூஜை நேரத்தில் சரஸ்வதி ஸ்தோத்திரம் படிப்போமா!
உலகத்திலுள்ள 64 கலைகளுக்கும் தலைவியே! அந்தக் கலைகளை என் அறிவிற்கு எட்டச்செய்பவளே! வெண்பளிங்கு போன்ற தூய வடிவமுள்ளவளே! என் மனதில் வீற்றிருப்பவளே! எனக்கு கல்வி, கேள்விகளில் இடையூறுகளைக் களைந்தெறிவாயாக.
பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த வாயும் கொண்டவளே! மணம் கமழும் தாமரைப் பூப்போன்ற கைகளை உடையவளே! உடுக்கைப் போல் இடையுடைய தேவியே! கலைமகளே! உன் திருவுருவத்தை வணங்கும் எனக்கு கவிதைத் திறனை வழங்குவாயாக.
வெண்மையான இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருப்பவளே! அழகான சொற்களால் பாடல்கள் எழுதும் அறிவைத் தருபவளே! என் இதயத்தில் எழுந்தருளியிருப்பவளே! பிரம்மதேவனால் விரும்பப்படுபவளே! தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சரஸ்வதி÷தேவியே! உன்னை வணங்கும் எனக்கு சிறந்த பேரறிவைத் தருவாயாக. வேதங்கள் நான்கையும் வரிவிடாமல் சொல்பவளே! வில்போன்ற புருவமும், மூங்கிலைப் போன்ற தோளும், பவுர்ணமி நிலவைப் போல் ஒளி வீசும் வெண்மையான திருமேனியும் கொண்டவளே! நீண்ட பெரிய கண்களை உடையவளே! பிரம்மனால் ரசிக்கப்படும் வடிவை உடையவளே! உன்னைப் போல் எனக்கும் பேரழகைத் தருவாயாக.
அன்னையே! நீ அமர்ந்திருக்கும் தாமரை மலரின் பெருமையை சொல்லி மாளாது. அது தலைமைப் பண்பைத் தரக்கூடியது. அறிவென்னும் இன்பக்குழந்தையை வழங்குவது! தீவினைகளை மாற்றக்கூடியது. எல்லா உயிர்களுக்கும் தாய்வீடாக விளங்குவது! அந்தமலரின் குணங்களை எனக்குத் தந்தருள்வாயாக. சிவனின் இடப்பாகத்தில் இருக்கிற பார்வதிதேவியும், கங்காதேவியும், லட்சுமியும், இந்திராணியும் மற்றுமுள்ள தெய்வப்பெண்கள் அனைவரும் வேதப்பெண்ணான உன்னை வணங்குகின்றனர். இப்படி எல்லாரலும் வணங்கப்படுவளே! என்னை கலைகளில் சிறக்கச்செய்ய அருள் செய்வாயாக.
அழகிய கைகளில் ஓலைச்சுவடி
ஏந்தியவளே!
வீணாகானம் இசைப்பவளே!
ஸ்படிகமாலை அணிந்தவளே! எல்லா உயிரினங்களையும் உண்டாக்குபவளே! நறுமணம் கொண்ட வெண்தாமரை மலர்
மாலையை அணிந்தவளே! உன்னை என்றும் மறவாத மனதைத் தந்தருள்வாயாக.
குற்றமில்லாத சொற்களை வரவழைப்பவளே! உன் மேல் நான் கொண்ட அன்பு
அளவிடற்கரியது. நீயிருக்கும் சத்திய லோகத்தை அடைந்து, உன்னை மானசீகமாக வலம் வந்து போற்றுகிறேன். பாமாலை பாடுகிறேன். இந்த பிரார்த்தனையை ஏற்று என்னையோ, என் குழந்தைகளையோ கல்வியில் சிறந்த மாணவர்கள் ஆக்குவாயாக.
கலைச்செல்வியே! என் மனதில் உன்னை நினைக்கும் போதும், நாவால் உன்னைப் பாடும் போதும் முகத்தில் தோன்றும் புன்முறுவல் என்றும் நிலைத்திருக்கட்டும். மனம் தெளிவடைந்து விளங்கட்டும். கலங்கிய ஆற்றுநீர் போன்ற என் அறிவு ஞானஒளி பெற்று பிரகாசமாகட்டும். எங்கள் இல்வாழ்க்கை சிறக்கட்டும். உலகெங்கும் கல்வி சிறக்கட்டும். நல்லறம் தழைக்கட்டும். நாடு வாழட்டும். நன்மையே நடக்கட்டும். உன் திருப்புகழ் வாழ்க வாழ்க என்று போற்றுகிறேன். எங்களுக்கு மங்களத்தை தருவாயாக.
கலைகளின் நாயகி - கலைவாணி
கல்விக்குரிய தெய்வமாக சரஸ்வதியைப் போற்றுகிறோம். முப்பெருந்தேவியரில் சரஸ்வதியைக் கலைமகள் என்று குறிப்பிடுவர். கலைகளை ஆயகலைகள் 64 என்று எண்ணிக்கையில் வரையறை செய்துள்ளனர். படிப்பு மட்டுமல்லாமல் அனைத்து கலைகளும் இதிலடங்கும். அதனால் சரஸ்வதியை புலவர்கள் கலையோடு தொடர்புபடுத்தி பல பெயர்களால் வணங்கி மகிழ்ந்தனர். கலை ஓதும் மலர் மாது, கலைக்கொடி, கலைஞானத் தோகை, கலை ஞானவல்லி, கலை ஞானாம்பிகை, கலை மடந்தை, கலைமான், கலைப் பெருமாட்டி, கலை மின்னாள், கலையணங்கு, ஆயகலைப்பாவை, கலைஞானவல்லி, கலையரசி, கலையம்மா, கலாராணி, கலாசுந்தரி, கலைவாணி, கலைச்செல்வி, கமலவல்லி, வெண்கமல நாயகி, வெண்டாமரைச் செல்வி, வெண்கமல பனுவலாட்சி ஆகிய திருநாமங்களால் கலைமகளைத் துதித்து வந்தனர். ஆனால் குழந்தைகளுக்கு, சரஸ்வதிக்குரிய சில பெயர்களேவைக்கப்படுகின்றன.
***
வெள்ளை மனம்! பிள்ளை குணம்!!
வெள்ளைத் தாமரைப் பூவில் விரும்பி உறைபவள் கலைமகள். அவளுக்குரிய வாகனம் வெண்ணிறப் பறவையான அன்னம். உடுத்தும் ஆடை வெள்ளைப் புடவை. கையில் ஏந்தியிருக்கும் முத்துக்களால் ஆன ஜபமாலையும் வெள்ளை. இப்படி சரஸ்வதியைக் காணும் போது வெள்ளை நிறம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கலைபயில வேண்டுமானால் நம் உள்ளம் வெண்மையாக இருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். உள்ளத்தூய்மையோடு கற்பவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்காக வெண்மை நிறத்தை சரஸ்வதிக்குரியதாக வைத்தனர். ""வெள்ளை மனம் பிள்ளை குணம்'' என்று குறிப்பிடுவர். வெள்ளை மனம் கொண்டவர் அனைவருமே கலைமகளின் பிள்ளை களே. கள்ளம் கபடம் இல்லாதவர்கள் எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் அறிய ஆவல் கொள்வர். ஆராய்ச்சியுடன் பல கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுவர். வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும் வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு வேண்டிய ஞானத்தை வாரி வழங்குகிறாள்.
***
நாளும் வீணை வாசிக்கிறாள்!
சரஸ்வதிதேவிக்கு கையில் இருக்கும் வீணையே அடையாளம். அவளுடைய மரகத வளைக்கரம் நாளும் இடைவிடாது வீணையை வாசித்துக் கொண்டிருக்கிறது. கல்வி கரையில்லாதது. எப்போதும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை சரஸ்வதியின் வீணை நமக்கு காட்டுகிறது. வீணை கற்பவர்கள் வீணை வாசிப்பதில் எவ்வளவு திறமையுடையவராக இருந்தாலும், நாளும் பயிற்சி எடுத்துக் கொள்வர். பயிற்சி இல்லாமல் என்றோ ஒருநாள் எடுத்து வாசித்தால் அதில் ஸ்வரம் சுத்தமாக வராமல் தப்பிவிடும். அதனால், கல்வி, கலை பயில்பவர்கள் நாளும் பயிற்சி எடுத்தல் வேண்டும். அதைத் தொடங்கும் நன்னாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கலைபயிலத் தொடங்குவது வழக்கம்.

No comments:

Post a Comment