Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 60 தலைக்கனம் ஆகாது

ஒரு துறவி பல சித்திகளைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்துவார். மக்களும், சக துறவிகளும் அவரைப் பாராட்டுவார்கள். இதனால், அவருக்கு தலைக்கனம் அதிகரித்தது.
துறவியின் தலைக்கனம் அவர் முக்தி அடைவதற்கு தடையாக இருந்தது. ஒரு நல்ல துறவி முக்தியடைய ஆணவம் தடையாக இருக்கிறதே என்பதை அறிந்த கடவுள், ஒரு முனிவரின் வடிவத்தில் துறவி முன் வந்தார்.
முனிவர் துறவியிடம்,""அன்பரே! தாங்கள் சித்திகளைப் பெற்று அதிசயங்கள் நிகழ்த்தி வருவதாக அறிந்து மகிழ்ந்தேன். தங்கள் அதிசய செயல்கள் சிலவற்றைக் காணலாம் என நினைக்கிறேன்,'' என்றார்.
துறவியும் பெருமையுடன் சம்மதிக்கவே, ""அதோ! அந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார்.
துறவி, ஒரு சிறிது மணலை எடுத்து யானை மீது எறிந்தார். யானை இறந்து விட்டது.
""ஆஹா'' என பாராட்டிய முனிவர், ""அந்தயானையை பிழைக்க வைக்க முடியுமா?'' என்றார்.
துறவியும் தன் கலசநீரை அதன் மீது வீசி எறிய யானை எழுந்து சென்றது.
""சரி...துறவியே! யானையைக் கொன்றீர்கள், பிழைக்க வைத்தீர்கள்...இதனால் உங்களுக்கோ, மக்களுக்கோ என்ன லாபம்?'' என்றார்.
துறவியால் பதில் சொல்ல முடியவில்லை. முனிவராக வந்த கடவுள் மறைந்துவிட்டார்.
மற்றவர்களுக்கு தெரியாத சில விஷயங்கள் நமக்கு தெரியும் என்பதற்காக ஆணவம் கொள்ளக்கூடாது, புரிகிறதா!

No comments:

Post a Comment