Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 72 எல்லாம் அவன் விருப்பமப்பா!

சிலபேருக்கு தலையெழுத்தையே பிரம்மன் இப்படி எழுதுகிறான்.
""ஏ மனிதா! நீ பூமிக்குப் போய், நாலு பேருக்கு நல்லதைத்தான் செய்வாய். இருந்தாலும், நீ நல்ல பேர் வாங்கமாட்டாய். கஷ்டத்தைத் தான் அனுபவிப்பாய், போடா,'' என்பது தான் எழுத்தின் சாராம்சம்.
இவர்கள் பூமியில் பிறப்பார்கள். நன்மையைத் தான் செய்வார்கள். ஆனால், அன்று எழுதியதை அழித்து எழுத முடியுமா? ""நீ என்னடா பெருசா எனக்கு செஞ்சிட்டே! செய்ததை சொல்லிக்காட்டுறான் பாரு, பிச்சைக்காரன்,'' என்று இவர்களால் நன்மை அடைந்தவர்களெல்லாம் திட்டுவார்கள். பெற்ற பிள்ளை கூட,
""நீ என்ன புதுசா செஞ்சுட்டே, எல்லா பெத்தவங்களையும் மாதிரி இன்ஜினியருக்கு படிக்க வச்சே...அதுக்காக, நான் உழைக்கிற காசுலே உனக்கு பங்கு தரணுமா! உனக்கு ஆயிரம் ரூபாய் பென்ஷன் போதாது! அதை வச்சுகிட்டு மூலையிலே கிட!''என்று வசை பாடுவான்.
மனுஷனாகப் பிறந்த ராமச்சந்திர மூர்த்திக்கே இப்படித்தான் நிலைமை ஏற்பட்டது.
இவர்கள் வீட்டில் மந்தரை என்பவள் வேலை செய்தாள். கைகேயியின் பணியாள். அவளது கூன் காரணமாக "கூனி' என்பார்கள். ராமபிரான் அவளது கூனலைப் பார்த்து வருத்தப்பட்டார்.
சித்தியின் பணியாள் நேராக நடந்தால், சித்திக்கு பணிவிடைகளை வேகமாகச் செய்வாளே என்ற நல்லெண்ணத்தில், கூனல் சரியாகட்டுமே என்பதற்காக, ஒரு கூழாங்கல்லை எடுத்து தனது வில்லில் வைத்து "பாணி வில் உமிழ்' என்ற
சொல்லுக்கேற்ப, எச்சிலை மெதுவாக உமிழ்வது போல மெல்ல மெல்ல அவள் முதுகில் எய்தாராம். கூனிக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
""சின்னப்பயலே இருடா!'' என்று அன்று கருவியவள், பிற்காலத்தில் அவரது பட்டாபிஷேக நேரத்தில் கைகேயியின் மனதைக் கலைத்து குடும்பத்தையே சின்னாபின்னமாக்கி விட்டாள். தசரதர் இறந்தார். மூன்று ராணிகள் மாங்கல்யம் இழந்தனர். ராமர், சீதா, லட்சுமணன் காட்டில் வதங்கினார்கள். நந்திகிராமத்தில் பரதன் வாடினான். சத்ருக்கனன்அடைந்ததுன்பத்திற்கும் அளவில்லை. ராமனைப் பற்றி இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது.
ஒரு தவளை கஷ்டம் பொறுக்காமல் தவித்ததாம். "ராம' நாமத்தைச் சொல், கஷ்டம் தீரும் என யாரோ பேச காதில் விழுந்தது. இதுவும் "ராம...ராம' என்று கதறிக்கொண்டே திரிந்தது. ஒருநாள், ஒரு புதைகுழிக்குள் மறைந்திருந்து ராமநாமத்தை ஓதிக்கொண்டிருந்தது. ராமன் தற்செயலாக அங்கு வந்தார். தன் அம்பை அந்த குழிக்குள் தற்செயலாக ஓங்கி ஊன்றினார். "ராமா" என கத்திக்கொண்டே வலி தாங்காமல் அலறியது. பார்த்தீர்களா விதியை! எந்த ராமன் காப்பாற்றுவான் எனக் கதறியதோ, அந்த ராமனாலேயே அது கதற வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறதே!
எனவே, நமக்கு என்ன நேர்ந்தாலும், அதை கடவுளின் விருப்பமாக எண்ணுவோம். கஷ்டங்களைத் தாங்கும் மனப்பக்குவத்தைப் பெறுவோம்.

No comments:

Post a Comment