Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 80உனது அழிவை நீயே தேடாதே

பொறாமை தான் மனிதனை அழிக்கும் குணங்களில் முதல்தரமானது.
முனிவர் ஒருவர் தவவலிமையால் சிவனையும், விஷ்ணுவையும் பூமிக்கு வரவழைத்து அவர்களது தரிசனம் பெற்றார். எந்த தேவரை எப்போது அழைத்தாலும், அவர் உடனே வந்து அவருக்கு வரத்தை தருவார். அதைக் கொண்டு மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்து வந்தார்.
அவருக்கு நான்கு தம்பிகள். அவர்களுக்கு அண்ணனைப் போல சிறந்த தவமுனிவர் ஆக முடியவில்லையே என்று பொறாமை ஏற்பட்டது. இந்த பொறாமை உணர்வுடன் அவர்கள் தீயில் நின்று தவம் செய்தாலும், தெய்வங்கள் அவர்கள் முன்னால் வரவில்லை. நல்ல குணமுள்ளவர்களை நாடியே தெய்வம் வரும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
தங்கள் தவம் தோல்வியைத் தழுவியதால், தாங்களே ஒரு சக்தியை படைக்க அவர்கள் முடிவெடுத்தனர்.அதற்குரிய மந்திரங்களை ஓதினர். யாக குண்டத்தில் இருந்து ஒரு உருவம் தோன்றியது.
""முனிவர்களே! உங்கள் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு நான் தோன்றியுள்ளேன். தேவர்கள் செய்யும் பணியை விட நான் சிறப்பாக பணிகளைச் செய்வேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'' என்றது.
""பூதமே! நீ எங்கள் அண்ணனைக் கொன்று வர வேண்டும்,'' என்று அவர்கள் கட்டளையிட்டனர். பூதமும் கிளம்பியது. அண்ணன் முனிவர் தியானத்தில் இருந்தார். அவரது தெய்வீகக்களை பொருந்திய முகத்தைப் பார்த்து பணிந்து வணங்கி திரும்பி விட்டது.
பூதங்களுக்கு ஏதாவது ஒரு பணியைக் கொடுத்து, அதைச் செய்யாமல் போனால், யார் பணியிட்டார்களோ அவர்களைக் கொன்று விடுவது வழக்கம். இந்த பூதமும் நான்கு சகோதரர்களையும் கொன்றது.
பொறாமை பெரிய தீ. அது யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களையே சுட்டெரித்து விடும்.

No comments:

Post a Comment