Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 82தேவைதானா கடைசி நேர டென்ஷன்!

ஆண்டுத்தேர்வு நெருங்குகிறது. மாணவர்கள் <படிப்பின் <உச்சக்கட்டத்தில் இருக்கிறார்கள். அன்றைய பாடங்களை அன்றே படித்து, ரிலாக்ஸாக படிக்கின்ற மாணவர்கள் கொஞ்சம் பேர் தான்! மற்றவர்கள், அரக்க பறக்க பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் நிலையை ஒரு கதை சொல்லி விளக்கட்டுமா!
துறவி ஒருவருக்கு தவம் செய்ய உட்கார்ந்து விட்டால் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. பாம்பு தன் மீது ஊர்ந்து போனால் கூட, உணர்வே இல்லாமல் அமர்ந்திருப்பார். ஒருநாள், கண் விழித்தார். ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்.
""என்னப்பா விஷயம்?'' என்றார்.
""உங்களைப் போலவே நானும் தவம் செய்ய வேண்டும், ஆனால், ஒரே மாதத்தில் பயிற்சி முடிய வேண்டும், கற்றுக்கொடுங்களேன்,'' என்றான்.
""சரி வா,'' என்றவர், அவனை அருகிலுள்ள ஒரு குளத்துக்கு கூட்டிச் சென்றார். குளத்துக்குள் இருவரும் இறங்கினர்.
திடீரென துறவி அந்த இளைஞனின் கழுத்தில் கையை வைத்தார். ஒரே அமுக்காக தண்ணீருக்குள் அவனது தலையை அழுத்தினார். பிடியை விடவே இல்லை. இளைஞன் திக்குமுக்காடினான். மூச்சு திணறியது. சில நிமிடங்கள் கழித்து கையை எடுத்தார்.
இளைஞன் பெருமூச்சு விட்டு இளைப்பாறியபடியே,""சாமி! உம்மிடம் தவம் செய்ய கற்றுத்தரச் சொன்னால், தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்லப் பார்த்தீரே!'' என்றான் கோபத்துடன்.
""தம்பி! கோபிக்காதே. உன் தலையை தண்ணீரில் அழுத்தியதும் என்ன செய்தாய்?'' என்றார்.
""ஆங்...உயிர் பிழைப்பதற்காக தலையை விடுவிக்க போராடினேன்,'' என்றான்.
""அப்போது உன் கவனம் எங்கே இருந்தது?வேறு ஏதாவது அக்கணத்தில் சிந்தித்தாயா? '' என்றார்.
""தலையைத் தூக்குவதில் மட்டும் தான் இருந்தது. உயிரே போக இருக்கும் வேளையில் வேறு எதில் கவனம் போகும்,'' என திருப்பிக்கேட்டான் அவன்.
""உம்! அப்படித்தான் தவமும். அது ஒரு பெரிய பயிற்சி. பலகாலம் தியானம் பயின்றால் தான் தவம் சாத்தியம். நான் இளைஞனாக இருந்தபோது பயிற்சியைத் துவங்கி, இப்போது தான் ஏதோ முழுமையான தவம் இருப்பது போல் <உணர்கிறேன். நீ உடனே படிக்க வேண்டுமென்றால், தண்ணீருக்குள் மூழ்கடிப்பட்டவன் தப்பிக்க முயல்வதில் மட்டும் கவனம் வைப்பது போல, அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்போது, விரைவில் கற்றுக்கொள்வாய்,'' என்றார்.
மாணவச்செல்வங்களே! உங்கள் பாடங்களை அன்றாடம் படியுங்கள். அது எளிதானது. கடைசிநேரத்தில் பாடங்களை வேகமாகப் படிப்பவர்களின் நிலை, தண்ணீருக்குள் தலை அழுத்தப்பட்டவனின் நிலைக்கு சமம். தேவைதானா கடைசி நேர டென்ஷன்!

No comments:

Post a Comment