Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 87அம்மா என்றால் அன்பு : அப்பா என்றால் அறிவு

அம்மா என்றால் அன்பு : அப்பா என்றால் அறிவு

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த ராமன் என்ற சீடன் படிப்பை முடித்து கிராமத்துக்குப் புறப்பட்டான். கிராமத்திலேயே அவன் ஒருவன் தான் படித்தவன் என்பதால், அவ்வூர் மிராசுதார் அவனைப் பணிக்கு அமர்த்திக் கொண்டார். நல்ல சம்பளம், வீட்டுக்குத் தேவையான அளவு அரிசி, பருப்பு, காய்கறி என உணவு வகைகளையும் கொடுத்து விடுவார். ராமன் மிகவும் சிக்கனக்காரன். பெற்றோர் இவனையும் விட குறைத்துச் செலவழிப்பர். எனவே, வெகு சீக்கிரத்தில் தங்கள் ஓலைக்குடிசையை ஓட்டு வீடாக்கி விட்டனர். ராமனின் புத்திசாலித்தனமான செயல்களால், மிராசுதாருக்கும் லாபம் பெருகியது. அவருக்கு சீதா என்ற மகள் இருந்தாள்.
அவளை ஏன் ராமனுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. பெயர் பொருத்தமும் நன்றாக இருக்கிறதே! அவர், ராமனின் தந்தையை வரவழைத்தார். ""ஆஹா..இதை விட எங்கள் குடும்பத்துக்கென்ன பாக்கியம் வேண்டும். எங்கள் மகன் நல்வாழ்வு வாழ வேண்டும்,'' என்றார். ராமனை அழைத்தார்கள். விஷயத்தைச் சொல்லி சம்மதம் கேட்டார்கள். மகிழ்ச்சி தெரிவித்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது.பெண் வீட்டில் திருமணம் நடந்தாலும், அன்று மாலையே தன் வீட்டுக்கு மனைவியுடன் செல்ல விரும்பினான் ராமன். மிராசுதாருக்கு கோபம் வந்துவிட்டது. ""என்ன! என் மகள் உன் ஓட்டு குடிசைக்கு வருவதா! அவள் என் செல்லப்பெண். பஞ்சணையில் படுத்த அவள், அங்கு வந்து சாணத்தரையில் உருளுவாளா! முடியாது. நீ வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கே தான் இருக்க வேண்டும். வேண்டுமானால், உன் தாய் தந்தைக்கு இப்போது உனக்கு கொடுத்த சம்பளத்தை விட இருமடங்கு தருகிறேன்,'' என்றார் மிராசுதார். ராமன் மறுத்துவிட்டான்.
""ஐயா! பணத்துக்காக உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை. ஏழையோ, பணக்காரியோ... புகுந்த வீட்டில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்பவளே நல்ல மனைவி. அவள் அங்கு தான் தங்க வேண்டும்,'' என்றான். மிராசுதார் பிடிவாதமாக இருக்க, ""ஐயா! தங்கள் மகள் உங்களுக்கு உயர்வு போல, என் பெற்றோருக்கு நான் உயர்வு. என்னை அன்புடன் வளர்த்தவள் என் தாய். படாதபாடு பட்டு படிக்க வைத்தவர் தந்தை. அவர்களை மறந்தால் அன்பை மறந்து அறிவை இழந்தவனாவேன். வருகிறேன்,' 'என புறப்பட்டான். அவனது நியாயமான பேச்சைக் கேட்ட சீதாவும் கணவனுடன் கிளம்பிவிட்டாள்.

No comments:

Post a Comment